ஒன்றே குலம் ஒருவனே இறை.
இந்த ஒற்றைக்குலத்தின் கல்வி 'இயற்கையிடமிருந்து வாழ்வியல் கற்றல்'.
இக்குலத்தின் தொழில் 'இயற்கையோடு வாழ்தல்'.
இதற்குத்தேவையான பயிற்சி ஒவ்வொன்றையும் இன்னார்தான் செய்யவேண்டும் என யார் செய்த விதியோ இன்று நம்மை எட்டி உதைக்கிறது; பல வழிகளில்.
சற்றே எட்டிப்பாருங்களேன் தைரியமாய்:
'பைப்பு லீக்காவுதுன்னு ப்ளம்பர கூப்ட்டா அரை மணி நேர வேலைக்கு லேபர் மட்டும் ஐநூறாம்! தலையெழுத்தேன்னு கொடுத்தேன்'
'சட்டைல பட்டன் பிஞ்சிடுச்சின்னா புதுசு வாங்கிடலாம்போல; டெய்லர் எவனும் காஜா வேலைக்கு ரெடியில்ல, ஆயிரம் ரூவா சட்டை... கடாசிட்டேன்'
'ரிமோட்டுல பேட்டரி ஸ்ப்ரிங் போச்சி. மாத்திட்டு வாடான்னு பையன்ட்ட குடுத்தேன். ரிமோட்டையே மாத்திட்டான்'
'சைக்கிள்ல காத்து இறங்கிடுச்சி. முக்கு கடைல காத்தடிச்சிட்டு வாடான்னா தள்ட்டுபோவ அலுத்துக்குறான்'
'இட்லி தோச மா சூப்பர் மார்க்கெட்ல பிக்அப் பண்ணிடுவம். வீட்ல அறைக்கிறதில்ல, லெபோரியஸ் ப்ராசஸ் யு நோ!'
'பைக் ஸ்டார்ட் ஆவல. உதைச்சே இடுப்பு கழண்டுடுச்சி; கார்பரேட்டர் அடைச்சிருக்கும்னு நெய்பர் சொன்னாரு. நாளைக்கு மெக்கானிக் வருவான்'
எந்தக்கல்வி இதை மாற்றும்? குலக்கல்வி என கடிவாளமிட்ட குதிரைகளாய் நாம் ஓடும்வரை நம் வீட்டு சாக்கடை அடைத்து நாளாகி முடை நாற்றமடித்தாலும் இறங்கி சுத்தம் செய்யமாட்டோம், ஏனெனில் நாம் அந்தக்கல்வி கற்கவில்லை.
உலகின் வயது வந்த ஆண்கள் அனைவரும் நாவிதம் பழகாமலா இருக்கிறோம்? அதனால் நாம் அனைவரும் நாவிதர் என்றாகுமா?
மேலை நாடுகளில் முடிதிருத்த நம் பணத்தில் 1500. உள்ளூர் பணத்திலும் அதிகமே என்று கத்தரிக்கோல், ஒட்ட வெட்டும் மெசின் வாங்கி வீட்டுக்குள் ஒருவருக்கொருவர் முடி திருத்திக்கொள்கிறார்கள்!'
குலக்கல்வி என்பது நமக்கு தினசரி வாழ்வில் தேவைப்படும் வேலைகளை நாமே செய்யப்பழக்குவதாகத்தானே இருக்க வேண்டும்?
நம் தேவைகள் குறைந்துகொண்டே வந்தால் ஏதேனும் ஓரு புள்ளியில் இயற்கைப்பள்ளி நம்மை உள்ளிழுத்து தேவையனைத்தையும் நாமே செய்ய கற்றுத்தரும்.
அதுவரை இந்த (இயற்கை) ஆசிரியர் மாணவருக்காய் காத்துக்கொண்டே இருப்பார். இந்த திறந்த வெளி பள்ளி திறந்தே கிடக்கிறது...
கருத்துகள்
கருத்துரையிடுக