நாட்டின் வளர்ச்சிக்கு மகுடமாய் திகழும் ஒவ்வொரு பெரு நகரிலும், தினம் காலையில் ஒரு கூட்டம் எழுந்ததும் விரைந்து கட்டிட காடுகளின் விளிம்பில் இருக்கும் புதர்களின் / மரங்களின் பின் சென்று மறையும்.
கடனை கழித்தபின் மீண்டு கூடு அடையும். அக்கம்பக்கம் வீடுகள் உள்ளனவே, மாடிகளில், ஜன்னல்களில் யார் எட்டிப்பார்த்தாலும் நம் பணி அவர் கண்ணில் பட்டு சங்கடப்படுத்துமே, சுற்றுச்சூழல் நாற்றமெடுக்குமே என்ற கவலையெல்லாம் துளியும் இன்றி.
கழிப்பறைகள் கட்டிக்கொடுத்தால் போதுமா?
பெரு நகரத்தூண்களை கட்டியெழுப்ப உழைப்பவர்களுக்கு சுகாதாரமான தங்குமிடம் யார் பொறுப்பு?
என் மலம் என் பொறுப்பு என்ற உணர்வை எப்படி இவர்களுக்குள் விதைப்பது?
நகரங்களில் விளிம்பு நிலை மனிதர்களின் இன்னல் இப்படியென்றால் கிராமங்களில் வேறு மாதிரி...
கிராமம் முழுதும் நம் வரிப்பணத்தில் கட்டப்பட்ட கழிப்பறைகள், பயன்பாட்டிலில்லாமல் பூட்டிக்கிடக்கின்றன. பெண்களும் சாலை ஓரங்களில்தான் இன்றளவும் ஒதுங்குகிறார்கள்...
'ஏங்க, கழிப்பறைதான் வீட்டுக்கு ஒண்ணு இருக்குல்ல, போங்களேன்!' என்றால் 'எப்புடிங்க, திங்கிற இடத்துக்கு பக்கத்தில...' என்று பொது பதில்; இவர்கள் ஒதுங்கும் இடங்களுக்கு அருகில் உள்ள நிலங்களில் உணவே உற்பத்தி செய்யப்படுவதில்லையாம், நீர் நிலைகள் குடி நீரே தருவதில்லையாம்; இவையெல்லாம் சூப்பர் மார்க்கெட்டுகளிலும் அண்ணாச்சி கடைகளிலும் மட்டுமே உற்பத்தியாகின்றனவாம், டி.வி யில் அப்படித்தான் காமிக்கிறாங்களாம்!
நஞ்சப்பம் ஓட்டைச்சுட்ட நாட்டில் தன் மலம் தன்னைச்சுடும்.
பின் குறிப்பு: மலம் மூலம் நீர்நிலைகளிலும் குடிநீரிலும் பரவும் ஈ-கோலி என்ற துன்பமிகு பேக்டீரியா உங்கள் வீட்டுத்தண்ணீரிலும் Fours ம் Sixer's ம் அடித்துக்கொண்டே இருக்கிறது! க்ரிக்கெட் ரசிகராய் விசில் அடித்து மகிழ்வதும், நீர் பரிசோதனை செய்து சூதானமாய் இருப்பதும்... அவரவர் விருப்பம் :-)
கருத்துகள்
கருத்துரையிடுக