ஒவ்வொரு நொடியும் அமுது!
முப்பத்தேழு வயது. மனைவி, 5 வயதில் பெண் குழந்தை. மண்ணில் சொர்க்கம் எனப்படும் சுவிட்சர்லாண்டில் வாழ்வு; பிறப்பால் இத்தாலியன்.
'டெர்மினல் கேன்சர். Get ready' - ஒருநாள் உடல் நலம் இன்றி மருத்துவரிடம் சென்றபோது அவர் எதிர்காலம் கணித்துச்சொன்னது.
அவன் அதை எதிர்கொண்ட விதம், எனக்கு வாழ்நாள் பாடம்...
அலுவலகம் எப்போதும் போல் முழுதேர வேலையை தொடர்ந்தான். ஆனால் ஒவ்வொரு நொடியையும் அமுதமாய் பருகும் மனநிலையில் (அலுவலகத்திற்கு வெளியேயும் அவ்வாறே). பாசிடிவ் எனர்ஜியை நான் கற்றுக்கொண்டது இறந்துகொண்டிருந்த ஒரு மனிதனிடம்.
உதாரணம்: எந்த நொடியிலும் புற்று வெடிக்கும் நிலையில், மூன்று மணிநேர மீட்டிங் முடித்து தன் மேசைக்கு திரும்பி, மீட்டிங் டாகுமெண்ட்டை காதருகில் கொண்டு சென்று கண் மூடி மெதுவாய் மிக மெதுவாய் 'டர்ர்ர்' ரென்று கிழித்து, கிழியும் ஓசையை துளித்துளியாய் ரசித்துக்கொண்டிருந்தபோது நான் அவன் எதிரில் அமர்ந்திருந்தேன். துரத்தும் மரணம் அவனை தோயாளியாக்கமுடியவில்லை். அவன் ஒரு பத்து வயது சிறுவன் விழி விரிய உலகை உள்வாங்குவது போல்...
அடுத்த சில ஆண்டுகள் அனைத்து மேற்கத்திய மருத்துவ முறைகளையும் முயன்று தோற்று, ஆசிய இந்திய முறைகளையும் முயன்று பலனின்றி அவன் எடுத்த முடிவு 'என் மரணம் என் விருப்பப்படி'. கருணைக்கொலை அல்ல; மருத்துவமனையில் சுற்றமும் நட்பும் சூழ, மருந்து தவிர்த்து, உணவு, நீர் தவிர்த்து மெல்ல மெல்ல விடைபெற்றான்.
அவனது மனைவியும் 8 வயது மகளும் அவனுக்கு மிகப்பிடித்த ஒரு சிறு குன்றில் அவனது சாம்பலை தூவி அவர்கள் குடும்பமாய் நட்டு வளர்த்த ஒரு மரத்தடியில் டென்ட் அடித்து 'நினைவேந்தல்' நடத்தினர் அவனை நன்கு அறிந்தவர்களுடன்.
என் வாழ்நாளில் இதைப்போன்றதொரு மகிழ்வான விழா, நான் கண்டதில்லை.
அவனுக்கு பிடித்த பாடல்கள் ஒலிக்க, அவனுக்கு மிகப்பிடித்த உணவு வகைகளோடு, அவனைப்பற்றிய அனுபவங்களை, அவன் தம்தம் வாழ்வில் எப்படி நிழலிட்டு / வெளிச்சமிட்டுச்சென்றான் என்பதை 'நமக்கு மிகப்பிடித்த ஒரு நாயகனை சிலாகித்து நம் நினைவுகளை நட்புக்களுடன் பகிர்வது போல', அப்படி ஒரு கனிந்த மகிழ்வு அந்த இடத்தில்.
அந்த மரத்தின் தாழ்வான கிளையொன்றில் மிஷல் அமர்ந்து கால்களை தாளகதியோடு ஆட்டிக்கொண்டே இவற்றை மிக ரசித்திருப்பான் எனத்தோன்றியது.
கருத்துகள்
கருத்துரையிடுக