ரூபன் 'Hurricane' கார்ட்டர்.
கறுப்பு அமெரிக்கன். குத்துச்சண்டை வீரன்.
1960களில் ஒரு அமெரிக்க 'உலக' சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளை போட்டியாளனை தோற்கடித்ததை 'விழுங்க' முடியாத வெள்ளை நடுவர் குழு அவன் தோற்றதாய் அறிவிக்கிறது.
சிறுவயது முதலே அவனை கருப்பனென்ற ஒரே காரணத்திற்காக வெறுக்கும் உள்ளூர் காவல் அதிகாரி ஒருவர். வெள்ளையர்.
அவ்வூரில் நடந்த ஒரு வெள்ளையனின் கொலையில், சாலையில் நடந்துகொண்டிருக்கும் ரூபனையும் அவனது கருப்புத்தோழனையும் வழி நிறுத்தி 'இரு கருப்பர்களை தேடுகிறோம், பார்த்தாயா?' என வினவுகிறார். 'Shall any two blacks do?' (எந்த இரண்டு கருப்பராயிருந்தாலும் போதுமா?') என ஆத்திரத்தோடு ரூபன் கேட்க, கைதாகிறான், வெளியில் வர இயலாத தண்டனை பெற்று.
செய்யாத குற்றத்துக்காக சிறையில் நுழைந்த நொடி முதல் அவன் சந்திக்கும் இனப்பாகுபாடு அவமானங்களை எப்படி எதிர்கொள்கிறான், எப்படி எதிர்க்கிறான், தனிமைப்படுத்தப்பட்டு உடலைத்திருப்பக்கூட இடமில்லாத வெளிச்சமேயற்ற அறையில் எவ்வாறு நாட்களை நகர்த்துகிறான், சிறை வாழ்வு எப்படி என்பதை எல்லாம் புத்தகமாக எழுதுகிறான்.
கனடாவில் ஒரு வெள்ளை தத்துக்குடும்பத்தில் வளரும் ஒரு கறுப்பின சிறுவன் ஒரு புத்தக சந்தையில் ரூபனின் புத்தகத்தை தற்செயலாய் பார்த்து வாங்குகிறான். படிக்கிறான். தன் 'அன்னை'யிடம் பேசுகிறான்; 'ரூபன் குற்றம் செய்யவில்லை. அவன் சுதந்திரப்பறவையாகவேண்டும். நம்மால் ஏதாவது செய்ய இயலுமா?'.
அவன் தாயும் புத்தகம் படித்து அதே முடிவுக்கு வருகிறார். தன் சிறு வெள்ளை குழுவோடு ஒரு நெடிய சட்ட யுத்தம் தொடங்குகிறார். வெளுப்பு - கறுப்பு - வெறுப்பின் ஊடாக உணர்வுபூர்வமாகவும் எண்ணங்களின் வலுவாலும் இந்த சிறு குழு வெற்றி பெற்றார்களா? சிறுவன் தன் 'மானசீக' குருவை சந்தித்தானா? ரூபன் வெளியில் வரமுடிந்ததா?
இருபது ஆண்டுகள் முன்னர் ஒரே ஒரு முறை பார்த்த படம், இப்போது எந்த வெளிக்குறிப்புகளையும் அணுகாமல் நினைவிலிருந்து மட்டுமே எழுதும்போதும் கண்ணில் நீர் திரை...
(Denzel Washington!
டென்சல் வாஷிங்டன்! என்னுடைய ஆஸ்கர் goes to this Ruben Hurricane Carter!
இத்தனை அருமையான பாத்திரத்தில் நடித்தும் அவருக்கு அன்று கிடைக்காத ஆஸ்கர், அவர் கேங்ஸ்டராக நடித்த இன்னொரு படத்திற்கு கிடைத்தது, well, காலத்தின் கட்டாயம்!)
சிறையில் அறையில் ரூபனிடம் சக கைதி கேட்கின்றார்: 'என்ன செய்து கொண்டிருந்தாய் இன்று?'
ரூபன் : 'பயணம் செய்து கொண்டிருந்தேன், வெகு தொலைவில் இருக்கும் அற்புதமான இடங்களுக்கு'!
உடலை எத்தனை காவல் மிகுந்த சிறையில் அடைத்தாலும் எண்ணக்குதிரையில் அதன் ஆன்மா சிறகு விரித்துப்பறப்பதை யாரேனும் தடுக்க இயலுமா என்ன?
The Hurricane என்ற இந்த திரைப்படத்தை நீங்கள் பார்ப்பதும் அந்த வகையில் சேரும் :-)
கொசுறு: கார்ட்டர் கற்பனைக்கதையல்ல. அவரைப்பற்றி மேலும் அறிய, வலைகடல் (internet) திறந்தே கிடக்கிறது :-)
கருத்துகள்
கருத்துரையிடுக