ஒன்பதாம் வகுப்பு, முஸ்லீம் பள்ளி. நாடிமுத்து, பஷீர், அலெக்ஸ், ரியால் என புதிய நட்புகள். பள்ளி நிறுவனர் புகழ்பெற்ற மருத்துவர். மத நல்லிணக்கத்துக்கு அவர் ஹாஸ்பிடல் ஓன்றே போதும்.
பஷீர் சிரித்த முகத்துக்காரன். 'அப்பா என்ன பண்றார்' என்ற கேள்விக்கு 'மெட்ராஸ் போய்ட்டு திரும்பும்போது சென்ட்ரல் ஸ்டேசன்ல ஹார்ட் அட்டாக். உக்காந்தபடியே வாப்பா போய்ட்டாரு' என்றான் புன்னகை மாறாமல்.
விரைவில் குடும்பத்தில் ஒருவன் எனும் அளவுக்கு, வளைய வந்தோம். பண்டிகை பலகாரங்கள் எங்கள் வீட்டில் உண்போம். ஈத் பலகாரம் அவன் வீட்டில். நபிகள் நாயகம் வாழ்க்கை வரலாறு, தலையணை சைசில். கிருத்துவ ஆரம்ப பள்ளியில் ஆப்ரகாம், ஆதாம், ஏவாள் அறிந்த நான் இப்ராகிம், ஆதம், ஈவா என அவர்களே நபிகள் வரலாற்று நூலிலும்! சுவை சற்றும் குறையாத வண்ணம் படித்து முடித்தேன் ஒரே மூச்சில். அவன்தான் நான் பள்ளியில் ஒரு முரட்டு பையனை மொமெண்டரி கோபத்தில் அறைந்தபின் நாடிமுத்துவின் உதவியோடு என்னை பத்திரமாய் :-) பள்ளியிலிருந்து வீடு சேர்த்தான்.
ரியால் கிரிக்கெட் தோழன். புது பேட்டில் காம்பஸ் குத்தி ஆலிவ் எண்ணெய் ஊற்றி ஊறவைப்பது எங்கள் பகுதிநேர தொழில். அவன் தங்கைக்கு பதினைந்து வயதில் திருமணம் என்று பத்திரிகை தந்தபோது நான் பணிரெண்டாம் வகுப்பில் இருந்தேன். எங்கள் இருவரையுமே அது பெரிதாய் பாதிக்கவில்லை.
அலெக்ஸ்... என் பனிரெண்டாம் வகுப்பு ஆருயிர் தோழிமேல் ஒரு தலை காதலாகி கசிந்துருகி கண்ணீர் மல்கி பள்ளி டெஸ்க்கில் அவள் பெயரை காம்பசில் கீறி அதன்மேல் தலைகவிழ்த்தே பள்ளிப்பருவம் கடந்தவன்; 'இது முட்டாள்தனம்' என அவள் சொன்னதை நான் அவனிடம் பொலைட்டாக எடுத்துச்சொன்னபோது புன்னகை மாறாமல் கேட்டுக்கொண்டிருந்து, நான் பேசி முடித்ததும் சோகத்தில் மறுபடி டெஸ்க்கில் அவள் பெயர் மேல் கவிழ்ந்து தூங்கிப்போனான்!
அந்தப்பள்ளியில், அந்த ஊரில் (ராமநாதபுரம்) எங்களுக்கு மதங்கள் தெரியாது. நான் அப்போது தாயுமானவர் தபோவனத்தில் பகுதிநேர வாலண்டியராக லைப்ரரி புத்தகங்களை கேடலாக் செய்துவந்தேன்; பஷீரும் வாலண்டியர் அவ்வப்போது. மடத்தலைமை சாமியார் எங்கள் இருவரைப்பார்க்கும் போதெல்லாம் மனம் மலர ஒரே மாதிரி சிரிப்பார்...
அப்துல்லா டாக்டர், பள்ளி நிறுவனர், என்னை பள்ளி மைதானத்தில் கடக்கையில் 'ஒல்லிப்பையா, அப்பாவிடம் சொல்லி முட்டை வாங்கி சாப்பிடு' என்று சொன்னதாய் நான் என் அப்பாவிடம் சொன்ன ஒரே பொய்யை, அவர் அப்துல்லாவை (அவரை மட்டுமே!) நம்பி சைவ வீட்டில் தனிப்பாத்திரம் வாங்கி, முட்டைகள் அவித்துத்தர அம்மாவை கன்வின்ஸ் பண்ணி ஏற்பாடு செய்தார்!
இப்போது நினைத்துப்பார்க்கையில் இதுதான் மத நல்லிணக்கமோ என தோன்றுகிறது :-)
கருத்துகள்
கருத்துரையிடுக