தேனின் மருத்துவ குணங்களைப்போற்றிப்பாடி அவ்வப்போது சில பல ஸ்பூன் உள்ளே தள்ளும் நமக்கான கேள்வி, இந்தப்பதிவின் முடிவில்.
மருந்தாய் மட்டுமே பயன்படுத்திய பொழுதெல்லாம் சுத்தமாய் கிடைத்த தேன், இன்று பேராசைப்பெருவணிகத்தில் சிக்கியதேன்?
மலைத்தேன், கொம்புத்தேன்... எல்லாம் பூக்கள் மலரும் காலத்தில் (இளவேனில் பருவம், வசந்தகாலம்) மட்டுமே சாத்தியம்.
(பருவம் தப்பிப்பயிர் செய்து அவற்றின் சுத்தத்தை நாம் கெடுத்தது பெருஞ்சோகம்.)
இன்று கிடைக்கும் நெல்லித்தேன், நாவல் தேன், முருங்கை தேன், இன்னபிறவெல்லாம் அடிமை வாழ்வு வாழும் தேனீக்களின் உழைப்பு.
ஒரு பெரிரிரிய்ய்ய ட்ரக்கில் ஆயிரக்கணக்கான தேன் பெட்டிகளை ஏற்றிக்கொண்டு பூக்கள் இருக்கும் நிலங்களை (இந்தியா முழுவதும்) தேடி அடைந்து, பெட்டிகளை இறக்கிவிட்டு, குறிப்பிட்ட நாட்கள் கடந்ததும் (தேனடைகள் நிரம்பியதும்) அனைத்துப்பெட்டிகளையும் வண்டியிலேற்றி சென்று, தேனை சக்கையாக பிழிந்துவிட்டு மீண்டும் தேனடை சட்டங்களை பெட்டியில் சொருகி, அடுத்த நிலத்திற்கு பயணம்.
'ஐயோ! நேற்றுவரை நான் சேமித்த உணவு களவாடப்பட்டதே!' என கதறத்தெரியாத அந்த சிற்றுயிர் கூட்டம் மீண்டும் பறக்கும் உணவு சுமக்க.
இப்படி பல்லாயரக்கணக்கான நிலங்களில் அவை சேமித்தது பிடுங்கப்பட்டு கண்ணாடிக்குடுவைகளில் அடைக்கப்பட்ட தேனைத்தான் நாம் வாங்கி உண்கிறோம், பெட்ரோல் வழிய வழிய!
'வேலை செய்யக்கூலி கிடையாது. உனக்கான உணவையும் பிடுங்கிக்கொள்வேன். இதுவே என் கட்டளை. என் கட்டளையே சாசனம்!' என முடிவெடுக்க நாம் யார்?
பூக்களற்ற காலங்களில் இவர்கள் தரும் சர்க்கரைக்கரைசலையும் தேனென்று நம்பி சேமித்துவைக்கும் இந்த அப்பாவிப்பூச்சிகள்... (கலப்படத்தேன் இப்படித்தான். பெரும்பான்மையான தேன் புட்டிகளில் கணிசமாய் சர்க்கரைப்பாகு கலந்துள்ளதால்தான் குறைவான விலைக்கு கிடைக்கிறது!).
தேன் ஈக்களி்ன் வேலை என்பது இங்கு தேன் சேகரிப்பது அல்ல; மகரந்தச்சேர்க்கை மட்டுமே! தேனீக்கள் இல்லையேல் பூக்கள் காய்களாக மாறும் பிரம்ம வித்தைக்கு (நன்றி பாலகுமாரன்!) வாய்ப்பில்லை!
கேள்வி: இந்த சின்னஞ்சிறிய உயிரியின் வயிற்றில் அடித்துப்பிடுங்கி அதன் உணவை நாம் உண்ணுதல், சரியா? தகுமா?
பின்னூட்டமிடுங்கள், பகிருங்கள்!
பின் குறிப்பு: களைக்கொல்லிகள், பூச்சிக்கொல்லிகள் தாக்குதலில் தப்பிப்பிழைத்த தேனீக்கள் சுமந்து வரும் தேனில் அந்த களைக்கொல்லிகளும் பூச்சிக்கொல்லிகளும் நமக்கே திரும்ப வரும், நாம் (சூப்பர்) மார்க்கெட்டில் வாங்கும் தேனில்! எதிர்காலக்குழந்தைகள் தலை வீங்கிப்பிறந்தால் 'ஐ! ஐன்ஸ்டைன்!' என்று கொண்டாடுவதோ, "ஐயோ! Encephalitis!" என அலறுவதோ தனிநபர் விருப்பம்!
எனக்கு ஒரு சிறு சந்தேகம்:பிறருக்கு ஈவெதற்கென்று ஏதேனும் உயிரினம் இனப்பெருக்கம் செய்கிறதா அல்லது உணவு சேமித்து வைக்கிறதா? பின் குறிப்பை நான் வழி மாெழிகிறேன்.
பதிலளிநீக்குஉலகமே நமக்காக இயங்குவதாய் எண்ணும் ஒரு பெருங்கூட்டத்திற்கு நான் இட்ட சிறு பொறி இது. பெருங்காட்டையும் எரிக்கக்கூடும் :-)
பதிலளிநீக்கு