என் ஆசை முகம் மறந்துபோச்சே...
காலேஜில் முதல் நாள் முடிந்து ஹாஸ்டல் வரும் வழியில் சுற்றி வளைக்கப்பட்டோம்.
சில நிமிடங்களில் சக முதலாண்டு மாணவன் ஒருவன் இமாஜினரி கோழியை, சீனியர் கை காட்டுமிடமெல்லாம் தாவிப்பிடிக்க முயன்றான். இன்னொருவன் ஸ்லோ மோஷனில் கால்பந்தாட்டம்...
வயிறு பிசைந்தது.
வயிறு பிசைந்தது.
அடுத்து என் முறை.
'வாத்யாரே எந்த ஊரு?'
'பல ஊரில் படிச்சன் சார்' (சார்னு கூப்பிடாமல் அப்பத்தான் ஒருத்தன் அப்பு வாங்கி விம்மிக்கிட்டிருந்தான்!)
'நக்கலா??'
'இல்ல சார். நிஜமா'.
'சரி... புட்ச்ச நடிகை யார்றா? ஒழுங்கா பதில் சொல்லு. அம்பிகாவா, ராதாவா, மாதவியா... ரொமான்சு மோனோ ஆக்டிங்கு உனக்கு'.
படபடப்பு கூடியது.
'இல்ல சார்... சா...சா...'
'என்னடா முழுங்குற. முழுசா சொல்லு!'
'சா...சாவித்திரி சார்'.
மயான அமைதி. கோழி, கால்பந்து எல்லாம் freeze ஆன அந்த நிமிடம் இன்னும் மனக்கண்ணில்.
கையறு நிலை... உணர்ந்தவர் உணர்வர்!
('அப்புறம் என்ன ஆச்சு?' என்பவர்கள் பிறிதொரு நாளில் படிப்பீர். இந்தப்பதிவு சாவித்திரிக்காக. சாவித்திரிக்காக மட்டுமே.)
மகாநதி / நடிகையர் திலகம் படம் பார்த்து முடித்த நொடியில் நினைவில் வந்த நிகழ்வு இது.
1970-80 களில் நடுத்தர குடும்பத்தில் வளர்ந்த அநேகருக்கு இவர் ஒரு தேவதை. 'கண்ட படத்தையும் பாத்து கெட்டுப்போகாத. சாவித்திரி படம் பாரு' என ஸ்ட்ரிக்டான பெற்றோர்கூட மனதார வழிமொழிந்த அற்புத நடிகை.
படம் பற்றிய எந்த பாதிப்புமில்லாமல் பார்க்கவேண்டும் என ஊடகங்களை ஒதுக்கி பார்த்த உணர்வுக்கலவையில் இந்தப்பதிவு.
'ட்ரக் அடிக்ட்... குடி... இன்ஜெக்ஷன்' என கீழ்மையை சாடும் தொனியில் விமர்சிக்கப்பட்டவரின் வாழ்வில் இவ்வளவு வலியா? அவருக்கு இவ்வளவு வலிமையா?! என நான் கண்டது இன்னொரு சாவித்திரி.
தகப்பன் முகம் காண ஏங்கிய, புறக்கணிப்புகளை வென்ற, புகழ்த்துகள் தன் மீது குவிந்ததை எந்த நேரமும் தூசு போல உதறத்தெரிந்த, சமூக கட்டமைப்புகளை மீறிய... ஒரு gentle woman, a noble soul.
நேர்மையாக இவரின் வாழ்வை பதிவு செய்த அனைவர்க்கும் சினிமாவில் வளமான எதிர்காலம் காத்திருக்கிறது. அவரைத் தவறாய் அறிந்தவர்களை நேர் செய்ய, நம் சமூகத்துக்கு அவர் வாழ்வு மூலம் பல கசப்பான உண்மைகளை மருந்தாய் புகட்ட நீங்கள் உழைத்த உழைப்பு வீணில்லை!
ஏழ்மை துரத்தும்போதும் முன்னறிமுகம் இல்லா டாக்ஸி ட்ரைவரின் பெண் திருமணத்திற்கு தன் பட்டுப்புடவையை விற்று பணம் தரும் அந்த உள்ளம்...
கீர்த்தி சுரேஷ்! ராட்சஸ நடிப்பு!!!
இந்த வயதிலேயே நீங்கள் உச்ச சிகரம் தொட்டுவிட்டீர்கள். வரும் நாட்களில் சாவித்ரியை நினைவில் கொண்டுவர முயல்பவர்க்கெல்லாம் அந்த ஆசைமுகம் மறந்துபோய் உங்கள் முகம்தான் தோன்றும்.
சலங்கை ஒலி ஜெயப்ரதாவிற்குப்பின் வேறு யாருக்கும் இப்படி ஒரு ரிக்வஸ்ட் தரவேண்டும் என தோன்றியதில்லை; இனி நீங்கள் சாதிக்கவேண்டியது எதுவுமில்லை. தயவு செய்து சினிமாவை விட்டு விலகி விடுங்களேன்!
கருத்துகள்
கருத்துரையிடுக