முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பச்சை வயல் மனது - காயாது.



பச்சை வயல் மனது.

பதின்பருவத்தில் கண்ணன்.R, பள்ளித்தோழன், அடிக்கடி சம்பந்தமே இல்லாமல் என்னிடம் 'வாழ்க்கையே போர்க்களம், வாழ்ந்துதான் பார்க்கணும்' என்று போர் முழக்கம் போல் சொல்லி, கடந்து செல்வான். பொறுக்க முடியாமல் ஒரு நாள் நிறுத்தி கேட்டதும் 'பாலகுமாரன்' என்றான்.

ராமநாதபுரம் அப்போது சிறிய டவுன். ஒரே ஒரு லைப்ரரி, தி.ஜா, கல்கி, தமிழ்வாணன், அகிலன், சாண்டில்யன், லா.ச.ரா, சுஜாதா என கதம்பமாய் இருக்கும். 'வாழ்க்கையே போர்க்களம்' என மந்திரம் போல் சொல்லிப்பார்த்துக்கொண்டு உள் நுழைந்து தேடிய என் கண்ணில் பட்ட முதல் புத்தகம் 'மெர்க்குரிப்பூக்கள்'. அன்று தொடங்கிய வாசிப்பை பல வருடங்களுக்கு நிறுத்தமுடியவில்லை, அவரை பாக்கெட் நாவல்கள் ஆக்கிரமிக்கும் வரை...

சுஜாதா, திஜா, லாசரா தவிர மற்ற எல்லோரையும் ஓரம் கட்டவைத்த நடை, நேர்மை, திமிர்... மெ.பூக்கள். பூவிலிருந்து குதிரைக்கு தாவினேன். குதிரைகள் குறி விறைத்து நிற்கும் காட்சி யோகத்தின் உச்சம் என படித்தபின் குதிரையை காணத்தேடி அலைந்த நாட்கள், 'இனிவரும் முனிவரும் தடுமாறும் கனிமரம்... இருபது நிலவுகள் நகமெங்கும் ஒளிவிடும்' வாசித்தபின்பு பனிவிழும் மலர்வனம் பாடலை ரேடியோவில் கேட்கத்தொடங்கி இன்று லேட்டஸ்ட் டெக்னாலஜி உதவியுடன் நினைத்த நேரத்தில் இன்று வரை கேட்டுக்கொண்டே இருந்தாலும், அந்த முதல் வாசிப்பு தந்த சிலிர்ப்பு தனி...

'இவ்வளவு உண்மையாய், இவ்வளவு நேர்மையாய் உணர்வுகளை வார்த்தையில் கொண்டு வருவது இவரால் எப்படி முடிகிறது?' என்ற வியப்பு ஒவ்வொரு புத்தகம் வாசிக்கும்போதும் பெருகிக்கொண்டே இருந்தது, சேவல் பண்ணை, அகல்யா என நான் வளரத்துவங்கினேன், நேர்மறை சிந்தனைகள் ஊற்றாய்ப்பெருக. காதல், காமம் பற்றிய அந்த வயதுக்கே உரிய தாக்கங்கள் இருந்தபோதும், கர்ணனின் ஜம்பு போன்ற படங்களை பார்க்க மனம் துடித்தபோதும், பார்த்தபின்னும், கோ எஜிகேஷன் பள்ளியில் உடன் பயின்ற பெண் தோழமைகளோடு நேர்மறை எண்ணம் மட்டுமே கொண்டு பழக முடிந்ததற்கு என் பெற்றோரின் வளர்ப்பளவு 'இனிது இனிது காதல் இனிது'ம் காரணம்!

ரெண்டு பொண்டாட்டிக்காரன், ஒரே வீட்டில் குடித்தனம் என நொடித்த ஏரியா மகளிரும் கூட அவரது தோழமை எழுத்தில் நட்பாகி 'அத விடும்மா. பொம்பள மனசு எப்படி சிந்திக்கும்னு இவ்ளோ கரெக்டா இந்த ஆளால எப்டிதான் எழுத முடியுதோ?!' என 'கடலோர முதலைக'ளுக்குப்பின் அடியோடு மாறிப்போன விந்தையையும் கண்ணார கண்டேன். 

விமானநிலையம் பார்த்தறியா வயதில் என் மன வெளியில் பூசலார் கோவில் போல விமான நிலையத்தை கட்டியெழுப்பியது அவரது விகடன் தொடரும் அதற்கான ஓவியங்களும்...

பாக்கெட் நாவல்களை அசோகன் பிரபலப்படுத்த பெரிய எழுத்தாளர்களை அதிக சன்மானத்தால் ஈர்த்தாலும் பாலா செல்வார் என எதர்பார்க்கவில்லை. ஆனாலும் 'நம்ம பாலா' என விடாது வாசிக்க முயன்று, 'அரை மணி நேரப்பயணத்தில் படித்து தூக்கி எறியும் தளத்தில் இவர் ஏன்?!' என வருத்தப்பட்டு நிறுத்தினேன். அப்போதுதான் சினிமாவில் திரைக்கதை எழுத அவரது நண்பர் கமல் எச்சரித்ததையும் மீறி வேலையை உதறிவிட்டு வந்ததை அவர் குமுதத்தில் 'இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா' என எழுதத்தொடங்கியிருந்தார். பின்னாளில் பாலசந்தர் படத்தில் வித்வான் ஜேகேபி சாராயத்துக்காக தண்ணித்தொட்டி தேடி வந்த கன்னுக்குட்டியான அவலத்தை திரையில் பார்த்த நொடியில் மனதில் பட்டது 'பாலா... ஏன் பாலா...'.

பின்னாளில்  'எனக்கு இன்னொரு பேர் இருக்கு', 'உண்மைய சொன்னேன்' ப்ளஸ் பாஷாவின் இன்னபிற வசனங்களுக்காக பேசப்பட்ட போது, 'ரத்தமும் சதையுமா கண்ணுக்கு முன்னாடி நின்னு ஹேப்பி பர்த்டே சொல்லும்போது...' என முகவரி பட டயலாக் கேட்டபோது 'பாலாடா!' என மனம் விம்மியபோதும் அவரது எழுத்துக்கள் என்னைவிட்டு விலகி வெகுநாளானதாய்தான் உணர்ந்தேன்.

ஆன்மீகம் அதன்பின் அவரை ஈர்த்ததும், அவர் விசிறி சாமியாரின் பக்தரானதும், அவரது எழுத்தில் ஆன்மீக வலு ஏறிஇருந்ததும் 'அரைத்தூக்கத்தில் குழந்தையின் சிணுங்கலை உணர்ந்து அனிச்சையாய் தொட்டிலை ஆட்டும் தாயின் கரம்' போல மனது எங்கோ இந்த நிகழ்வுகளை தொடர்ந்தவண்ணமே இருந்தது...

'கலாபக்காதல'னுக்கு திரைக்கதை வசனம் பாலா எனப்பார்த்து நிமிர்ந்தவன் கதையின் மையக்கருத்தை (காதலில் என்ன/எது நல்ல காதல் எது கள்ளக்காதல்) 'ஏன் இப்படி, பாலா?!' என்ற கேள்வியோடு கடக்கமட்டுமே முடிந்தது. 

சில ஆண்டுகள் முன்னர் 'உடையார்! ஆறு பாகம்!!பாலகுமாரன்!!!!' என நட்பு வட்டம் தளும்ப சிறு இடைவெளிக்குமேல் ஆர்வத்திற்கு அணைபோடமுடியாமல் ஆறு பாகங்களையும் ஒன்றாய் வாங்கி... மூன்று பாகங்களுக்கு மேல் படிப்பது மிகச்சிரமமாய் இருந்தது. இந்த காலகட்டத்தில் எனக்கு தெரிந்த பாலா ஒரு சரித்திர ஆராய்ச்சியாளனாக, ஒரு சரித்திர ஆசிரியனாக நெடிய ஆவணம் ஒன்றை தயார் செய்திருந்ததாகவே மனதில் பட்டது. கங்கைகொண்ட சோழன் இந்த எண்ணத்தை வலுவாக்கியது. 

இடையில் உறவினர் ஒருவர் 'சக்கரவாகம்' தந்து சென்றார். 'அதே பழைய பாலா! அதே நேர்மை, அதே வார்த்தை உரம், ஆன்மீக ஒளியோடு!'. பாலாவின் தலையணை சைஸ் புத்தகங்களை அறவே தவிர்த்து ஆன்மீகம் சார்ந்த சிறு புத்தகங்கள் மட்டுமே படிப்போமென நான் கண்ட இன்னொரு புதையல் 'பேய்க்கரும்பு'...பேய் நடை! பட்டினத்தாரை இதைவிட யாரேனும் செம்மையாக எழுத இயலுமா?! கடல் பயணம் முடித்து திரும்பிய கப்பலில் 'மீண்டவர்' சொந்தம் ஒருபுறம் களிக்கூத்தாட, 'மாண்டவர்' சொந்தம் ஓலமிட, சில நாழிகையில் 'மாண்டவரின் சேமிப்பு, சொத்து யாருக்கு?' என பாகத்தகராறு... 'காதற்ற ஊசியும் வாராது காண் கடைவழிக்கே' என உணர்த்த இதை விட சுருக்காய் நறுக்காய் யாரும் எழுத்தில் சிலம்பம் ஆட இயலாது!

'அவருக்கு இது புதிதா என்ன, உள்ளம் கவர் கள்வனில் "பூ மொட்டவிழும்" பிரம்ம வித்தையை காதலோடு ஒப்பிட்டு சம்மந்திகள் சிலம்பம் சுழட்டுவதை' அன்றே எழுத்தில் வடித்தவர்தானே...

சிவசுவாய், அகல்யாவாய் இன்னும் பலவாய் வாசித்த நானும் கூடுவிட்டு கூடு பாய்ந்தாலும் என்னை உலுக்கிய கூடு, 'பச்சை வயல் மனது'! - இன்று அம்பை கதையை எத்தனை பேர் எத்தனை மொழிகளில் அம்பையின் கோணத்திலிருந்து எழுதியிருந்தாலும், என் அம்பை, பாலாவின் அம்பை!
Transgender - திரு நங்கை / நம்பிகளை கேவலமாய் பார்க்கும் சமூகத்தில் நட்போடும் அனுதாபத்தோடும் பார்க்கும் பக்குவத்தை எனக்கு பதின்பருவத்திலேயே வழங்கியது பாலாவின் எழுத்தின் கொடை...

பாலா, எப்பொழுது பவழமல்லியை பார்த்தாலும் 'தலையணைப்பூக்கள்' என்று தாயின் காம்பை தூக்கத்திலும் உணரும் சேயாய் என் மனதை மாற்றியது, அம்மலரை என் மனமிற்கு நெருக்கமாக்கியதற்கு என்றென்றும் அன்புடன் இருப்பேன், அனைத்துயிரிடமும்...

இன்று செய்தி கேள்விப்பட்டதும் சிங்கப்பூரிலிருந்து அழைத்த நண்பன், சகோதரன் சுதா சொன்னது 'நம்ம பாலகுமாரன்... தாயுமானவன்தான் நான் என் வாழ்க்கையில் கடைசியா படிச்ச நாவல்... மனைவியை சக மனுஷியாய் எப்படி அணுகுவது என்பதை திருமணமாவதற்கு முன்பே எனக்கு உணரவைத்த அவரது எழுத்து தந்த பக்குவமே எனது வாழ்வாகிப்போச்சு' என்றான். 

பேசி முடித்ததும் கைபேசியில் காத்திருந்த குறுந்தகவல் கல்லூரி அறை நண்பன் எஸ் கண்ணன் 'பாலகுமாரன்...அகல்யா படிக்கத்தந்து நீ அறிமுகம் செய்தாய்...இன்று இல்லை' என்று வருந்தியிருந்தான்.

இருவருக்கும் எனது பதில், 'எழுத்தாளனுக்கு சாவே கிடையாது. அதிலும் பாலாவுக்கு... வாய்ப்பே இல்லை'.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விழலுக்கு இறைத்த நீர்

விழலுக்கு இறைத்த நீர்... என்னை சிந்திக்க வைத்த சொற்றொடர் இது.  பலனளிக்காத முயற்சியின் தோல்வியை சுட்டவே பெரும்பாலும் பயன்படுத்துகிறோம். இதன் கருப்பொருள் வேறாகவும் இருக்கலாம்... விழல் = களை = களையப்படவேண்டிய, நமக்கு அவசியமற்ற பயிர். நமக்கு அவசியமான பயிர்கள் மட்டுமே நம் வயலில் இருக்கவேண்டும். அப்போது மட்டும்தான் பஞ்ச பூத முழு சக்தியும் நமக்கு வேண்டிய பயிருக்கு கிட்டும், அதற்கு மட்டுமே கிட்டும். இந்த சித்தாந்த அடிப்படையில்தான் மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகள் வேறோடு பிடுங்கப்பட்டு, தேயிலையும் காபியும் பயிராச்சி (நாமள்லாம் அப்போ வெள்ளக்காரங்களே!). இந்த சித்தாந்த அடிப்படையிலதான் சம வெளிகளிலும் காடுகள் நம்மால் சிதைக்கப்பட்டு நெல், கோதுமை, கரும்பு, வாழை என மாறிப்போயின. இதே அடிப்படையில்தான் பல உயிரினங்கள் நம் ஆக்கிரமிப்புக்கு அடிபணிந்து ஏற்கனவே விடைபெற்றோ அல்லது விடைபெற்றுக்கொண்டோ இருக்கின்றன. நிலத்தில் மட்டுமல்ல, நீரிலும்தான்; 'என்னது ஆஸ்திரேலியால பவளப்பாறைகளை காணுமா?!!! அது வேற பஞ்சாயத்துபா!'. இதெல்லாம் நிகழக்கூடாதென்றுதான் அன்று நம் ஆட்கள் விழல

சிறுக கட்டி பெருக வாழ்

சிறுக கட்டி பெருக வாழ்! கேள்விப்பட்டிருக்கிறோம். படித்திருக்கிறோம். சிறிதாய் தொடங்கி ஆல் போல் வளர்ந்து என வணிகம் பேசியிருக்கிறோம். அளவாய் வீடு கட்டி சுற்றம் சூழ்ந்து பெருக மகிழ்வாய் வாழ்தல் என முயற்சிக்கிறோம். இவையெல்லாவற்றையும் தாண்டிய புரிதல் ஒன்று வேண்டும். சிறுக கட்டி - சிறு வீடு கட்டி, பெருக - பல்லுயிர் பெருக, நாமும் வாழ்வோம் என்பதாகவும் இதன் பொருள் இருக்கலாம். பாரதி கனவு கண்ட காணி நில வாழ்வும் இதுவே, பில் மோலிசன் கற்றுத்தந்த பெர்மாகல்ச்சரும் (ஒருங்கிணைந்த பண்ணையம்) இதுவே, காந்தி மற்றும் புகுவோகா பரப்பிய சுயசார்பு பண்ணை வாழ்வும் இதுவே! பெரிதாய் கட்டி சிறிதாய் வாழ்ந்துவிட்டுப்போகும் நமக்காகவே சொல்லப்பட்டது, அன்றே! உணவு வீணாவதைப்பற்றி ஐ.நாவில் கூட்டம் கூட்டமாய் விவாதித்து புள்ளி விபரங்கள், அறிக்கைகள் பதிப்பிக்கிறார்கள். இந்தியாவில் 40 சதம் வீணாகிறதாம். நம் வாழ்வியல் அறியாது எழுதித்தள்ளுகிறார்கள். உணவு மீந்தால் / ஒரு இலை வீட்டிலிருந்து வெளியே விழுந்தால்கூட ஒரு கூட்டமே (மனிதர் முதல் பூச்சி வரை) அதிலிருந்து உண்ணும் இங்கு! இதில் வீணாவதெங்கு?!

எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை

+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+- கேன்சர் கட்டிகள் சுமக்கும் எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை. -+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+ வெண்மைப்புரட்சிக்கு முந்தைய இந்தியாவில் (1960 களுக்கு முன்) பால் வியாபாரத்துக்காக யாரும் மாடுகளை வளர்த்ததில்லை. சர்க்கரை, தேயிலை, காபி என வணிகப்பயிர்களும், வணிகமும் நாம் நாட்டில் வேரூன்றியபோது அவர்களை திகைக்கவைத்தது நமது மக்களின் பால் மோகமற்ற வாழ்வு. கிராமங்கள் சார்ந்த அவ்வாழ்வில் பால் என்பது குழந்தைகளுக்கான உணவு, எனவே அது விற்பனைக்கல்ல. அவ்வளவே.  கிடைத்த இலைகளையெல்லாம் நீரில் கொதிக்கவைத்து பருகிய நம் மக்களை டீ, காபி நோக்கி நகர்த்த முதலில் அவற்றை இலவசமாய் தந்து, பின் பாலுடன் சேர்த்தால் சுவைகூடுமென காட்டி, வருடம் முழுவதும் கிடைக்காத பாலை கிடைக்கவைக்க வணிகம் கையிலெடுத்த ஆயுதம் என்ன தெரியுமா? 'பாலுக்காக மாடு வளர்த்தால் சில வருடங்களிலேயே பணக்காரராகிவிடலாம்! உங்கள் நாட்டு மாடுகள் வருடத்தில் சில மாதங்களே கறவையில் இருப்பதால் அவை உங்கள் கனவுகளுக்கு இடையூறு. நாங்கள் இலவசமாய் தரும் மாடுகள் அமிர்