தன் சிறு வயிற்றில் பெருங்காடு சுமந்து, விசை கூட்டி விரைந்து பெரும்பரப்பு கடந்து, கடந்த இடமெல்லாம் கடக்கும்பொழுதெல்லாம் இயன்றவரை விதைபரப்பி காடு வளர்க்கும் இந்த சிற்றுயிர்.
காடென்பதென்ன? என்ற அறிதல் நமக்கு வேண்டுமானால் தேவைப்படலாம்; அதற்கு அல்ல..
உண்ட பழம் வயிற்றில் செரித்தால்மட்டும் போதாதென பழ விதை வீறுகொண்டு முளைக்க 'வேண்டி' வயிற்றில் அமிலம் சுரந்து... முளைத்தாலென்ன முளைக்காவிட்டாலென்ன என்ற கேள்விகளுக்கு அப்பால் பறந்து விதைகள் தூவி... மீண்டும் காட்டின் விதை தேடி தொடரும் இதன் பயணத்தில் கூடென்பது குஞ்சுகளுக்கு மட்டுமே. இன்றுவரை பழங்களை கூடுகளில் தனக்காகவோ குஞ்சுகளுக்ககவோ சேமித்து வைக்கும் பறவையை யாரேனும் கண்டதுண்டா?
இப்பறவைகளை மரங்கள் நேசிப்பது இயற்கைதானே!
மரங்களில் வாலில் தொங்கி தாவிப்பழகி இறங்கி நிலம் முழுதும் பல்கிப்பெருகிய நம் கூட்டமும் விதைத்துக்கொண்டுதானே இருக்கிறது நஞ்சு தோய்ந்த எண்ணங்களையும் சொற்களையும்?
இந்நஞ்சில் கருகிய கனவுகள் எத்தனை? உணர்வுகள், நினைவகள் எத்தனை?
பசிபிக் பெருங்கடலில் ஒரு சிறு தீவில் நம் இனம், மரத்தை வீழ்த்த பயன்படுத்துவது ஆயுதங்களை அல்ல... மரத்தை சுற்றி நின்று மரம் மீது அவை ஏவுவது நஞ்சில் தோய்ந்த சொற்களை மட்டுமே. எய்த கூட்டம் விலகிச்சென்றபின் தனித்து நின்று துக்கித்து தன்னைத்தானே சிலுவையில் அறைந்து மரித்துப்போகும் இம்மரத்தின் மரண ஓலம் கேட்கும் அங்கு உயரப்பறக்கும் பறவையின் காதுகளுக்கு மட்டும். மரத்தின் ஆன்மா விடைபெறும் முன் விசை கூட்டி மேலெழும்பி அதி விரைவாய் அப்பறவை அங்கு கொணர்ந்து சேர்க்கும் இன்னொரு விதையை.
பறவைகளற்ற வானம் செய்ய இடையறாது முயலும் நம் கூட்டத்திற்கு தெரியுமா இந்தப்பறவையின் அவசரம்?
வானில் விரையும் பறவை ஒன்றை எப்போதாவது எங்காவது நீங்கள் காண நேர்ந்தால் ஒரு நொடி நின்று அதன் பயணம் சிறக்க வாழ்த்துங்களேன்... வாழ்த்த வாழ்த்த (உங்கள்) வால் வளரலாம். அது மீண்டுமொரு நாள் நீங்கள் மரமேற உதவலாம்...
கருத்துகள்
கருத்துரையிடுக