உரையாடல் தனிமையை கொல்லுமாம்!
நான் என்னோடு தேநீர் அருந்தும்போதெல்லாம் தனித்திருந்ததில்லை.
நான் என்னோடு உணவருந்துகையிலும் அவ்விதமே.
எத்தனை பெரிய கூட்டத்தில் இருந்தாலும், என்ன செய்தாலும் அப்போது மட்டும் நான் என்னோடு தனிமையாய்!
எந்த மையப்புள்ளியை நோக்கி என் நகர்வு என்பது நான் மட்டுமே அறிந்த ஒன்று, எப்பெரிய கூட்டத்துடன் இணைந்து இசைந்தாலும்.
ஒரு வகையில் கூட்டமென்பது ஒத்திசையும் தனிப்புள்ளிகள்தானே.
அகண்ட வானம், இருளுக்கு வழிகாட்டி மின்னும் நட்சத்திரங்கள், மின்மினிப்பூச்சிகள், பனிக்காற்று, இலையோசை, சில்வண்டுகள், தவளைகள், ரீங்காரமிட்டு சுற்றிப்பறக்கும் சிறு பூச்சிகள்... என ஏராளமான உரையாடல்களால் பின்னப்பட்ட 'அமைதி'யில் உலகு துயிலும்போது என் தனிமை அகன்று போகிறது. எண்ணற்ற இந்த உரையாடல்களில் என்னால் இலகுவாக உள்நுழைந்து தொடர முடிகிறது, விருப்பமாயும் இருக்கிறது. ஒவ்வொன்றும் சொல்லும் ஒவ்வொரு கதையையும் கேட்பதில் கழிகிறது என் 'வண்ணத்திரை' நேரம், நானும் அத்தனை கதைகளின் அங்கமாய்.
எத்தனை நாளாய் கேட்டும் அலுக்கவில்லை... ஏனென்று ஒருவேளை என்னோடு உரையாடும் வயதில் மூத்த மரங்களுக்கு தெரிந்திருக்கலாம்... ஏனோ எனக்கு அவர்களிடம் கேட்கத்தோணவில்லை.
அடுத்த முறை தனிமையாய் உணர்கையில் இதைப்பற்றி சிந்திக்கலாம் என்றிருக்கிறேன்.
கருத்துகள்
கருத்துரையிடுக