தேங்காய் எண்ணெய் தடவி படிய தலைவாரி புது சொக்காயுடன் பள்ளி சென்ற முதல் நாள்.
பாலர் பள்ளி ஆசிரியையை தேவதையாய் உணர்ந்து திருமணம் வரை ஆசைப்பட்ட குழந்தை இதயத்தின் படபடப்பு.
நெற்றியில் திருநீறுடன் மண்டியிட்டு சிலுவையிட்டு ஆமென் என கண்விழித்து சுடராடும் மெழுகுவர்த்தியை கண்சிமிட்டாது கண்ட நொடிகள்.
பக்கத்து வீட்டு வசுமதியுடன் விளையாடுகையில் இயல்பாய் இடித்து நகர்ந்து 'நமக்கேன் இப்படி இல்லை' என குழம்பி நகர்ந்த தருணம்.
கால்கள் தரையெட்டா வாடகை சைக்கிளில் குரங்கு பெடல் திக் திக் மணித்துளிகள், தலைதெறிக்கும் அன்போடு சகோதரன் பின்னால் ஓடி வரும் நம்பிக்கையில்.
தந்தையின் விரல்பிடித்து கோவில் பிரகாரம் வலம் வந்த நாட்கள் (விரல் தந்த சாமியின் முகம் தவிர வேறெந்த சாமி முகமும் நினைவிலில்லை).
கத்தியும் கரண்டியுமாய் சண்டைபிடித்த சகோதரி, அன்போடு என்றும் அரவணைத்த அம்மாவின் கை(அடுக்களை) த்தழும்புகள்.
எதிர்பார்ப்பற்ற பதின் பருவ விளையாட்டு தோழமைகள், எடைபோடாத நட்பும் சுற்றமும் சூழ்ந்திருந்த காலங்கள்.
பதின்பருவத்தில் முதல் எதிர்பால் நட்பு... கண்டிப்பாய் காதலென்று ஊர்த்தெரு முணக, 'ஏனிப்படி தப்பாச்சி' என அதையும் நட்போடு அளவளாவி 'பேசுவோர் பேசட்டும், நம் நட்பு நமக்கே' என்று தெளிந்த, சிந்தனையிலும் சிறகு முளைத்த நாட்கள்.
நெற்றியில் திருநீறோடு பள்ளி வளாக மசூதியின் முன் மீன் தொட்டியில் வண்ண மீன்களை என்னோடு சேர்ந்து வேடிக்கை பார்த்த நண்பகல் வெயில்.
முதிர் பள்ளி நாட்களில் முதல் முதலாய் நண்பன் தந்த மஞ்சள் இலக்கியம் ரகசியமாய் படித்து உடலெங்கும் வெம்மை பரவிய நொடிகள்.
கல்லூரியில் கால்வைத்த முதல் நாள்.
வெவ்வேறு உலகங்களிலிருந்து நம்பிக்கை வழிய உடன் சேர்ந்த நட்புகள் தந்த மகிழ்ச்சி, பகிர்தல் பற்றிய புதிய புரிதல் உணர ஆரம்பித்த நொடிகள்.
இருபத்தி நான்கு மணி நேரமும் நாடி நரம்புகளில் (ஊரிலுள்ள எதிர்வீட்டு காதலியின்) காதல் கசிந்த அறை நண்பன் என்னுள் உருவாக்கிய மயக்கத்தில் என் 'சிறகு முளைத்த' நாட்களின் நட்பை காதல்தானா என வாழ்த்து அட்டை மூலம் உரசிப்பார்த்த தருணம்.
கட்டுப்பாடுகள் நிறைந்த வீடு பள்ளி வாழ்வுக்கு மாற்றாய் கட்டற்ற சுதந்திரம் தந்த கல்லூரி விடுதி வாழ்வின் முதல் நீலம், முதல் லத்தியடி (ஆங்கிலத்தை வெறுத்த நள்ளிரவு ரோந்து போலீஸ்) 'சுதந்திரம் ஏராளமான பொறுப்பை உள்ளடக்கியது' என வாழ்வின் முதல் தேர்வுத்தோல்வி புரியவைத்த நாள்.
கல்லூரி இறுதி நாள் விழாவில் மேடையேறி பேசி, நடனமாடிய நிமிடங்கள்.
படித்த கல்லூரியிலேயே ஆசிரியனாய் வகுப்பில் நுழைந்த தருணம்.
வகுப்புத்தோழியின் மரண செய்தியை வாங்கி கல்லூரியில் ஆசிரியனாய் செய்திப்பலகைக்கு அறிக்கை எழுதிய தருணம்.
வாழ்வின் பாதையை முடிவு செய்த காதல் பூத்த தருணம். அதற்கு முன் ஊடாடிய காதல் போன்ற ஆனால் காதலற்ற நட்புகள் தொடங்கிய, முடிவுற்ற தருணங்கள்.
காதல், திருமணமாய் மாறிய நாட்கள். முதல் கூடல், முதல் ஊடல், முதல் பிணக்கு...
தந்தையான தங்கத்தருணங்கள், தந்தையாக நெஞ்சு நெகிழ்ந்த நாட்கள்.
நண்பனின் மூன்று வயதுக்குழந்தை மூச்சற்று மலையுச்சி புதை நில சர்ச்சில் படுத்திருக்கையில் தனியே அவளுடன் வேண்டுதலில் கழித்த மணித்துளிகள், புதைகுழயில் பனிப்பொழிவில் அவளை இறக்கி மூடிய நொடி...
இனிமை, இளமை, கடுமை, முதுமை, நட்பு, பிரிவு, துரோகம், அற்புதம், மானுடம்...
அவ்வப்போது நிகழும் நட்பின், சுற்றத்தின் மரணங்கள் உணர்த்தும் வாழ்வின் நிதரிசனம், அவற்றை மறக்கச்செய்யும் நிகழ்வாழ்வின் தேவைகள், தேவைக்கும் விருப்புக்கும் இடையில் ஊடாடும் வாழ்வை தேவைக்கு அருகில் நிறுத்தி பசுமையின் ஆதி சுவடுகளில் நடக்க முடிவெடுத்த நொடி,
தொடரும் அப்பயணம் தரும் அநுபவங்கள்...
முதல் விமானப்பயணம், முதல் பனித்துளி தந்த பரவசம். முதல் பிரிவு, முதல் முத்தம், முதல் மாமிசம் சுவைத்த நொடிகள், முதல் நீலம், முதல்... முதல்.... முதல்...
நிழலின் அருமையை நிழலில் மட்டுமே உணரமுடியும்; வெயிலில் அல்ல.
நினைவின் ருசியென்னவோ நினைவோடு மட்டும் நின்றுவிடுவதில்லை... திகட்டுவதுமில்லை.
நினைவின் இறுதி இழை அறுபடும்வரையிலும் இந்த நீள்பின்னல் தடத்தில்... பயணம் தொடரும்... புதிய பின்னல்கள் மற்றும் அவற்றின் ஊடான வெளியில்.
நினைவு சுகம்,
வாழ்வு தவம்,
வாழ்தல் வரம்.
வாழ்வு தவம்,
வாழ்தல் வரம்.
கருத்துகள்
கருத்துரையிடுக