இன்று பாடல்களை புதிதாய் ரசித்துக்கொண்டிருக்கும் தலைமுறைக்கு ஏ. ஆர். ரஹ்மான் - வைரமுத்து - மணிரத்னம் கூட்டணி மட்டுமே தெரியும்.
1992, சின்ன சின்ன ஆசை என்ற ஒரு பாடலின் இசை ரஹ்மானின் வருகையை உலகிற்கு அறிமுகம் செய்தது. அந்தப்பாடலின் வரிகள் வைரமுத்துவுக்கு உலக அரங்கின் கதவுகளை 'மீண்டும்' திறந்துவிட்டது. எத்தனை டிஜிடல் யுவ யுவதிகளுக்கு இது தெரியும்?
ஏன் 'மீண்டும்'?
ரஹ்மான் வருகைக்கு முன்னரே வைரத்துக்கு பறக்கும் மாயக்கம்பளம் தந்து உலகெங்கும் தமிழர்கள் கூடும் இடங்களில், அவர்களின் தனிமையில், ஊர் நினைவில், உறவுகளின் நினைவில், வாழ்வின் பெரிய தருணங்களில் (மகிழ்வோ, வலியோ எதுவாயினும்) மானுடத்தின் ஊற்றுக்கண்களை துடைத்து மகிழ்வுகளை பெருக்கி, வலிகளைக்குறைத்து / துடைத்து என இந்தக்கம்பளத்தின் பயணம் எல்லையற்றே இருந்தது (இருக்கிறது!).
1980 இல் 'வானம் எனக்கொரு போதிமரம்' என்ற வைரமுத்துவின் வரிகளை வானத்திற்கு தூக்கிச்சென்றது இளையராஜாவின் இசை.
பூங்கதவை தாழ்திறந்து இந்த இருவர் துவங்கிய இசைப்பயணம், இந்த நூற்றாண்டின் தமிழ் இசை ரசிகர்களுக்கு தலைவாழை விருந்து, அனுதினமும் சுவைத்தாலும் திகட்டாத மருந்து.
பூவில் வண்டு கூடும் கண்டு பூவும் கண்கள் மூடும் மயக்கத்தில் ... அடுத்த பனிரெண்டு ஆண்டுகளுக்கு அது ஒலிக்காத நாடில்லை!
"
காற்றின் தேசம் எங்கும் எந்தன் கானம் சென்று தங்கும்
வாழும் லோகமேழும் எந்தன் நாதம் சென்று ஆடும்
வாகை சூடும்…
"
...
"
ராகம் ஜீவனாகும் நெஞ்சின் ஓசை தாளமாகும்
கீதம் வானம் போகும் அந்த மேகம் பாலமாகும்
தேவி எந்தன் பாடல் கண்டு மார்பில் நின்று ஆடும்
நாதம் ஒன்று போதும் எந்தன் ஆயுள் கோடி மாதம்
"
என காற்றின் அலைவரிசையெங்கும் ஆக்கிரமித்து சிம்மாசனமிட்டு அமர்ந்தன இசையும் பாடல்களும்!
'மௌனமான நேரம்' என்ற சிறுகதை, விகடனில் 2011 ல் வெளிவந்தது. அந்தக்கதை ஒரு நீண்ட உரையாடல் வழியே எழுப்பிய கேள்விகளுள் முதன்மையானவை இவை:
'ஏன் சார் இவங்க பிரியணும்? ஒரு நல்ல கவிதைய எழுதும்போது அவருக்கு இவர் (இசை) நினைவு வராமலிருக்குமா? ஒரு நல்ல இசைக்கோவையை உருவாக்கும்போது இவருக்கு அவர் நினைவு வராமலிருக்குமா?
இன்டஸ்ட்ரியே கூடி சேத்துவச்சிருக்கணும் சார்...ஏன் சார் யாரும் செய்யல?'.
இந்த இருவர் சேர்ந்து படைத்த பாடல்களின் தனித்துவத்தையும், கோடிக்கணக்கான இதயங்களில் இதையொட்டிய எண்ணங்கள் இன்றுவரையில் எழுவதற்கான காரணத்தையும் அழகாக பதிவும் செய்கிறது அந்தக்கதை; 'இந்த மண்ணின் இசை இவரிடம், இந்த மண்ணின் மொழி அவரிடம். விதையை ஓரிடத்தில் ஊன்றி நீரை இன்னொரு இடத்தில் ஊற்றினால் பயிர் வளருமா? இவர்கள் தனித்தனியே இன்றுவரை படைத்தாலும்...'
இந்த மண்ணின் மொழியை இந்த மண்ணின் இசையோடு சேர்ப்பித்த இன்னொரு பெருங்கலைஞன், இந்த மண்ணின் உணர்வுகளை வெள்ளித்திரையில் அற்புதமாய் அரங்கேற்றியவன், இம்மூவரும் இன்னும் படைத்துக்கொண்டுதான் இருக்கின்றனர், தனித்தனியே.
தமிழ்த்திரையுலகம், தமிழ் ரசிகர்கள், இவர்களின் படைப்பாற்றலின் பயனாளிகள்... தமிழுக்கு செய்யக்கூடிய கடமை, இவர்களை மீண்டும் இணைத்து 'காலத்தை நிறுத்தக்கூடிய' பாடல்கள் இன்னும் சிலவேனும் சமைத்துத்தருவது.
செய்யவைப்போமா?
OnemoreSong என்ற fb page க்கு like போடுவோம், share செய்வோம்... காலம் கனியும் என்ற நம்பிக்கையுடன்!
வேதம் அணுவிலும் ஒரு நாதம்!
கருத்துகள்
கருத்துரையிடுக