"ரதன் சந்தாவத் ஸலூம்ப்ராவின் சிரிப்பு, அந்தக்கிருஷ்ணபக்ஷத்து இரவின் பயங்கரமான அமைதியை சரேலென்று கிழித்து, இடையிலிருந்த எவ்வளவோ இடைஞ்சல்களை ஊடுருவிச்சென்று, உதயசாகரத்தின் அலைகளின் இரைச்சலோடு கலந்துகொண்டது.
அவன் அவ்வளவு பலமாகச்சிரித்திராவிட்டால் இந்தக்கதை நிகழ்ந்தே இராது."
அவன் அவ்வளவு பலமாகச்சிரித்திராவிட்டால் இந்தக்கதை நிகழ்ந்தே இராது."
என்ன ஒரு ஓப்பனிங் சீன்!
பாஷ்யம் என்று ஒரு எழுத்தாளர், சரித்திரக்கதை எழுதும் முயற்சியின் துவக்கம் இது.
ரதன், ராஜபுத்திரன், நிகரற்ற போர் வீரன். மொகலாய ஆட்சியில் இன ஒற்றுமையின்றி ராஜபுத்திரர்கள் எதிர்த்து தோற்பது வழக்கமாகிப்போன பிண்ணனியில், அவரகளின் கோழைத்தனம் தாங்காது வெதும்பி மொகலாய படையில் உப சேனாதிபதியாகி, குணம் கெட்டு அலைபவன். டில்லியில் வேசி ஒருத்தியை குலமகள் என்று எண்ணி மானம் காக்க மொகலாயன் ஒருவனை கொன்று, மன்னனின் கோபத்திலிருந்து தப்பி பல்லாண்டு தலைமறைவாகி மன்னிப்பு பெற்று மீண்டும் அவரிடம் கூலிக்கு போரிடும் வீரன்.
மொகலாயர் கை தாழ்ந்து ராஜபுத்திரர் கை ஓங்கத்தொடங்குகிறது.
அகிலா, ராஜபுத்திர வீரர் ஒருவரின் குலக்கொடி. அவளைக்கவர்ந்து வந்தால் யுத்தத்தின் போக்கு மாறலாம் என மொகலாய தளபதி ஒரு பேடியை அனுப்ப, அவன் அகிலாவிடம் அவமானப்பட்டு உயிர்ப்பிச்சை பெற்று மீண்டுவர, அவனை எள்ளி நகையாடி 'நான் முடிக்கிறேன் பார்' என மார்தட்டி களமிறங்குகிறான் ரதன்.
எதிர்பாராத ஊரில் எதிர்பாராத சூழலில் (உயிர் ஊசலாடும் காயத்தோடு, நினைவிழக்கும் தருணத்தில்) அகிலாவை சந்திக்க நேர்கிறது. அவளது மெய்க்கீர்த்தியோடு சேர்ந்த அழகு முகம் அவனை காதல் கொள்ள வைக்கிறது. அவன் யாரென்று தெரிந்தால் ராஜபுத்திர வாளுக்கு பலியாவது உறுதி என்ற நிலையில் வேறொரு பெயரில் பழக வேண்டியதாகிறது.
இந்தக்காதல் ராஜபுத்திர முகலாய அரசயல் சதுரங்கத்தில் சிக்கி என்ன ஆகிறது?, ரதன் மாறுகிறானா? அவன் ரதன் என்று அகிலா அறிய நேரும் சூழல், அவள் எடுக்கும் முடிவு, காதலி தூண்டும் சுதந்திரம் ரதனை இழுக்கிறதா? மொகலாயர்களின் சதிகளை தாண்டினானா?
ஏராளமான கேள்விகள், சூழ்நிலைகள் எழுப்பி, இன்றும் பொருந்தும் கூர் விவாதங்களின் வழி கதையை நகர்த்தி நம்மை கதைக்குள் இழுத்துக்கொள்ளும் ஆற்றலை முதல் சரித்திர நாவலிலேயே காட்டியிருக்கிறார் பாஷ்யம்...
கதை வெளிவந்த ஆண்டு, 1953! படித்தவர் பித்தாகி, இந்திய எழுத்துலகில் ஒரு சரித்திரப்பயணம் தொடங்கியது.
'பாஷ்யம்? Who? ' என தலையை சொரியவேண்டாம்.
டைடானிக் கப்பலை ஜேம்ஸ் கேமரன் நமக்கு வெள்ளித்திரையில் ஓட்டிக்காண்பிப்பதற்கு அரை நூற்றாண்டு முன்னரே நம் பாஷ்யம் இதுபோன்ற பல முயற்சிகள் செய்து பெரு வெற்றியும் பெற்றிருந்தார். கடல்புறா, யவன ராணி என அவர் எழுத்தின் வழி வாசிப்பவர் மனத்திரையில் அவர் நிகழ்வித்த கடல் பயணங்கள், அழைத்துச்சென்ற புவிப்பரப்புகள், யுத்தங்கள், சாகசங்கள், நாயக நாயகியர்... சாண்டில்யன் என்பதும் அவர் பெயரே!
கல்கி, விக்கிரமன் போன்றோர் சோழர் வரலாற்று நாவல்களை எழுதிக்கொண்டிருந்த காலத்திலேயே வேறொரு கவர்ச்சிகரமான நடையில், இன்னும் விரிவான கற்பனை வெளியில் தனி எழுத்துப்பாதை அமைத்தவர்...
இந்தியாவின் Herold Robins எனும் அளவுக்கு ஊடல் கூடல் வர்ணனைகள், எல்லையற்ற சரித்தி்ரக்கற்பனைகள்...என மனிதர் பின்னாளில் எழுதியவை எல்லாம் தலையணை சைசில் நாவல்கள்!
அந்த நாவல்களில் எல்லாம் இல்லாத simple and enduring charm "ஜீவபூமி"யில் இருக்கிறது (232 பக்கங்கள் மட்டுமே). ரதனுக்கும் அகிலாவுக்கும் ஹலோ சொல்லி (இந்த ஆண்டு) வாசித்துதான் பாருங்களேன்!
பின் குறிப்பு: சற்றே தேடினால் எல்லா புத்தக கடைகளிலும் கிடைக்கும். புத்தக திருவிழாவில் உறுதியாய் கிட்டும்.
பின் குறிப்பு: சற்றே தேடினால் எல்லா புத்தக கடைகளிலும் கிடைக்கும். புத்தக திருவிழாவில் உறுதியாய் கிட்டும்.
இந்த நாவல் பாெது நூலகத்தில் படிக்க கிடைக்குமா அல்லது புத்தகக் கடையி(ல் தான்)லாவது கிடைக்குமா? கடைசி வரியாக இதையும் கூறியிருக்கலாம்.
பதிலளிநீக்குகிடைக்கும், சற்றே முயன்று தேடினால் :-)
பதிலளிநீக்குகடைப்பணியாளருக்கு தெரியாது; அவர்களிடம் கேட்பது பயனற்றது :-)