காடுதான் என்ன செய்யும்?
தம் காலடித்தடமெங்கும் பாலைவனம் செய்பவர் கூட்டம், தாம் உண்ணும் உணவுக்கு உணவு வேண்டி (fodder for meat giving creatures), பெருங்காட்டில் நெடுங்காலம் 'கிடந்தது கிடந்தபடி' கிடந்த அனைத்தையும் ஒற்றை நெருப்புப்புள்ளியிட்டு அழித்தொழித்து சோயாவும் சோளமும் விதைக்கையில் தப்பியோட கால்களின்றி காடென்ன செய்யும்? தன் ஆன்மாவை இறுகப்பிடித்துவைத்து பறவைக்காய் காத்திருக்கும்.
வெந்து தணிந்தபின் இரை பொறுக்க வந்த பறவைகளிடம் சேதி பகிர்ந்து காடு 'விடை பெறவும்', பறவைகளின் வழி இந்த சேதி எஞ்சிய பெருங்காடுகளுக்கு பரவியதாம்.
காடுகளென்ன செய்யும்?
கடுந்துயரில் சிதையேறும், தமக்குத்தாமே தீயிட்டு... எங்கொ வீழ்ந்த மரங்களால் இங்கு சுட்டெரிக்கும் சூரியக்கதிர், கோப மரங்களின் சிறு உரசல் போதும் பொறி பறக்கும், அக்கினிக்குஞ்சு ஜனிக்கும். காடெரிக்கும்.
மனிதனிட்ட தீயை நிறுத்துதல் மனிதர்க்கு எளிது. சிதையேறிய காடுகளை இன்றுவரையில் வேடிக்கை மட்டுமே பார்க்கமுடிகிறது, அணைக்கமுடிவதில்லை; அன்பின்றி அணைப்பது எப்படி?!
காடழித்து விதைப்பது நிற்கும் வரையில் காடு எரிவதும் நிற்கப்போவதில்லை.
ஏனோ தெரியவில்லை, தானே எரியும் காடுகளில் மனிதர் எதையும் விதைப்பதில்லை...அது பறவைகள் வேலையாம்!
கருத்துகள்
கருத்துரையிடுக