Venus and Mars by Geraldine Arata |
பறவை, வானரம், மொழி...
இறகு சுமக்கும் பறவைகளை என்றும் சுமப்பதென்னவோ இறகுகள்தான்.
வால் சுமக்கும் வானரங்களை வால் சுமப்பதும் உண்டு.
இறகு உதிர்த்த பறவைகள் சில தேவதைகளாய் மண்ணிலிறங்கி உதிர்ந்தவை மேல் கால் வைத்து நடந்த பரப்பெல்லாம் தடம் தோன்றி அதில் முளைத்ததெல்லாம் அற்புதம், அற்புதம் அன்றி வேறொன்றுமில்லை.
புவியெங்கும் பரவி அற்புதங்கள் செய்பவரை மரத்தில் இருந்து வேடிக்கை பார்த்த வானரங்கள் தாமும் வால் உதிர்த்து மண்ணிறங்கி கால் பதித்த இடமெங்கும் அழிவுக்கோலம்... திகைப்புடனே தேவதைகளை துரத்தி துரத்தி அற்புதங்களின் 'மூலம்' அறிய அவை வேண்டின.
மொழியற்ற மொழியொன்றில் தொடங்கிய கருத்து யுத்தம் எண்ணற்ற மொழிகளிருந்தும் இன்றளவும் அடைபடாமலே சுற்றிக்கொண்டிருக்கிறது காற்றைப்போல.
புரிதல் இல்லாதுபோயின் விளைவதென்னவோ சந்தேகம் மட்டும்தானே. தேவதைகளுக்கு இது போதுமென கூண்டிலடைத்து சாவியையும் தூக்கி எறிந்து... அது ஆச்சி நெடுங்காலம்.
வேடிக்கை என்னவென்றால் அற்புதங்கள் நிகழ்வது நின்றுபோன உலகில் இன்றளவும் விடுபட இயலாத மனக்கூண்டுகளில் சினத்தோடு சுழல்வதென்னவோ வால் உதிர்த்த கூட்டம் மட்டுமே, மூலம் புரிபடாமலே.
கூண்டுக்குள் இளைத்த தேவதைகள் சில இறை விளித்து மீண்டும் இறகு வளர்த்து கம்பிகளூடே வெளியேறி புதிய வானில் உயரப்பறந்து எங்கும் நிறைந்திருக்கும் பேருயிர் கண்டு வினவின, 'வானரங்களுக்கு அற்புதங்களின் மூலத்தை உரைப்பதெப்படி?' என.
நகைத்த பேருயிர் சுருங்கச்சொல்லியது 'உரைப்பது தவிர்ப்பீர். உதிர்ந்த உம் இறகொன்றை தந்து வானரங்களை இறகு உணரச்சொல்வீர். அற்புதங்களின் விதைகள் இறகுகளே'.
இப்படி இறகின் மொழி உணர்ந்த சில வானரங்கள் மட்டுமே தவமிருக்கும், கூண்டுகளற்ற வெளியில், இறகுகள் வேண்டி.
பறவையாய் இவையும் மாற இறகுகளை உணர்தலே முதல் படி. அற்புதங்கள் பின்னர் தானே நிகழும். வானரங்களுக்கும் இறகு முளைக்கும், பேரிறையின் விருப்பின்படி!
பின் குறிப்பு:
இறகென்பது யாதெனின் யாதொன்றும் தீமையிலாத செயல்!
கருத்துகள்
கருத்துரையிடுக