நாளை (26 சனவரி) மற்றொரு நாளே.
எனது தேசத்தில் களவில்லை, பொய் புரட்டு இல்லை, பித்தலாட்டம் இல்லை, ஒருவரை ஒருவர் ஏமாற்றுவதில்லை, தாழ்த்துவதில்லை, வீழ்த்துவதில்லை, அழிப்பதுமில்லை.
உயிரோட்டம் நிறைந்த எனது தேசத்தில் சகல உயிரும் அண்டிப்பிழைக்கும், செழிக்கும்.
நாங்கள் உயிரனைத்தும் போற்றுவோம், இயற்கையை நேசிப்போம். காடு மலை மேடு பள்ளம் நதியோட்டம் மாற்ற மாட்டோம். நீர் நிலைகளையும் அவ்வண்ணமே.
தேவைக்கு வாழ்வோம், தேவையறிந்து உதவுவோம், வாழ்வினை விரும்பி வாழ்வோம்...
தேசம் எனும் சொல்லை 'நேசம்' எனும் சொல்லாய், செயலாய் மாற்றும் வல்லமை நம் அனைவருக்கும் இறை தந்த கொடை.
என் மனதிற்குகந்த முண்டாசுக்கவி வல்லமை தாராயோ என இறைஞ்சியது தன்னலம் பயனுற அல்ல, (மாநிலம்) நானிலம் பயனுற. அவன் நானிலம் மீது கண்டதனைத்தும் 'நமையன்றி வேறில்லை' அல்லவா!
'நமை' என்பதை மனிதர்கள் மட்டுமே என்ற தவறான புரிதலுடன் நானிலத்தின் மீது நாம் வரைந்த வெறும் காற்றுக்கோடுகள்தானே மாநில, தேசிய எல்லைகள்....
காக்கைக்கும், குருவிக்கும் ஏனைய மனிதர் அல்லா உயிர்களுக்கும் இந்தக்கோடுகள்தான் பொருந்துமா?
"மக்களால், மக்களுக்காக" என்ற அடிப்படையை சற்று மாற்றி, "மக்களால், அனைத்து உயிர்களுக்காக" என்று நாம் ஒவ்வொருவரும் உணரும் தருணத்தில்தான் நம் 'குடியாட்சி' தழைக்கும், நான் தொடக்கத்தில் பதிந்தவை அனைத்தும் நடக்கும், கனவு மெய்ப்படும்!
பின் குறிப்பு:
நானிலம்?
குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல்.
இந்த நாலில் எது பொய்த்தாலும் அது பாலை என்ற ஐந்தாம் நிலமாகும்.
நான்கும் பொய்த்தால்?
ஒற்றை நிலமாகும்...
கருத்துகள்
கருத்துரையிடுக