சுழித்தோடும் தூய நதி வானம் காட்டும் சில காலம்.
கரைபுரண்டோடும் சில காலம் செம்மண்ணாய்.
கதை சொல்லும் சிறு நடையாய் சுருங்குவதும் ஒரு காலம்.
நீரற்று மணல் புரளும் காற்றாலே சில காலம்.
அணையிலடங்கல், வாய்க்கால் வழிதல் என தளைகள் ஏதும் தாங்காது மலையிறங்கும் பேராற்றல் முன்.
காட்டாற்றின் கரையில் நிற்போர் அநேகர் வேடிக்கை பார்ப்பவரே, வழிப்போக்கராய் நிற்பவரே!
வாழ்வெனும் பெரு நதியில் கால் நனைத்தல் சுகமெனினும் சுழி, பாய்ச்சல், பள்ளம் வீச்சென நித்தம் ஒரு யுத்தம் செய்யும் நதியில் துணிந்தவர் மட்டுமே மூழ்கி எழுவர். நேசிப்பவர் மட்டுமே கரைப்பது கரைத்து சேர்ப்பது சேர்த்து மீண்டு கரை சேர்ந்து, கனவு சுமந்து காத்தருப்பர் மற்றொரு முழுக்குக்கு. நிறைவேறலாம், வேறாமலும் போகலாம்... கனவுக்கு பஞ்சமில்லை.
ஏனையோர்... விரைந்து வீடு புகுவர், கதைகள் சொல்வர், மறந்து போவர்.
பெரு நதி மட்டும் எப்போதும் போல்.
நனைத்த என் கால் சுவடு... முழுகிய என் உச்சிச்சுழி... நதி அறியும், எப்போதும் போல்.
கருத்துகள்
கருத்துரையிடுக