அகல்யா, விதவை. யுத்த களத்தில் போர்ப்புகைப்படக்கலை கணவனை இழந்தவள்.
சிவசு, விதவை அம்மாவுக்கு ஒரே பையன். ஊர்க்காரியம் எதுவானாலும் வேட்டியை மடித்துக்கட்டி களத்தில் நிற்பவன். மிக நல்லவன்.
ஒரு விதவையைத்தான் மணக்கவேண்டும் என தினசரியில் விளம்பரம் கொடுக்க, அகல்யாவின் கண்ணில் அது பட, அவள் அப்பாவிடம் சொல்ல, அகல்யா சிவசு திருமணம் இனிதே நடக்கிறது.
அகல்யாவுக்கு மாண்டிசோரி முறையில் கல்வி கற்பிக்கும் பள்ளி நடத்த ஆசை. சிவசுவின் முயற்சியால் அதுவும் நிறைவேறுகிறது.
இனிய இல்லறம். திடீரென இறந்து போன கணவன் முதலில் அவள் கனவிலும் பின்னர் நேரிலும்.
அகல்யா என்ன செய்கிறாள்? சிவசு என்ன ஆகிறான்?
...
விதவை அம்மாவுக்கும் சிவசுவுக்கும் அவன் திருமணத்திற்கு முன்னான உரையாடல்கள்...
அகல்யா அவள் அப்பாவிடம் 'ஆம்பளன்னா யாருப்பா?', 'பயம் இல்லாத இருக்குறவன்தாம்மா' என்பதான உரையாடல்...
மறுமணம் பற்றிய அகல்யாவின் உணர்வுக்குவியல், சிவசு - அகல்யா இடையில் முகிழ்க்கும் காதல்...கதையின் தொடக்கத்தில் வரும் 'ஈலோக கோளத்தில் ஏதோ ஒரு சிராசிந்தையில்' எனத்தொடங்கும் சிவசுவின் வேண்டுதல்...
இவை அனைத்தையும் நான் 30 வருடத்திற்கு முந்தைய நினைவுப்படிமங்களிலிருந்து எழுதுகிறேன்...இந்தப்பதிவுக்காக மீண்டும் படிக்காமலேயே!
பாலகுமாரன் - அற்புதமான, பயமற்ற, உண்மையான, பெண்களை புரிந்துகொண்ட ஆண்மையான, எழுத்து வாள் வீசி தமிழ் சரித்திர கதைகளின் கோட்டையை தாறுமாறாய் தகர்த்தவர்.
இரும்புக்குதிரைகள். மெர்குரிப்பூக்கள், பச்சை வயல் மனது, கரையோர முதலைகள், அகல்யா...என்று உச்சம் தொட்ட எழுத்தை 'பயண நேரத்தில் படித்ததும் தூக்கியெறியும்' பாக்கெட் நாவல்கள் விழுங்கித்துப்ப, மீண்டு ஆன்மீகத்தில் எங்கோ சென்றுகொண்டிருக்கிறார், இலக்கு நோக்கியோ இலக்கின்றியோ!
Nicholas Spark தேடிப்படிக்கும் நம் மண்ணின் மக்கள் அறிவரா 'பழைய' பாலகுமாரனின் மேன்மையை?! தமிழை தாய்மொழியாகக்கொண்டவர்க்கு ஒரு வேண்டுகோள்; தயவு செய்து உங்கள் குழத்தைகளுக்கு தாய்மொழி கற்றுக்கொடுங்கள்; இந்த ஆண்டு சீரமைக்கப்பட்ட தமிழ்ப்பாடம் இன்னும் சுலபமானது. French, German...,மதிப்பெண் கூட்ட மட்டுமே உதவும், மனிதம் கூட்ட அல்ல...
இந்த ஆண்டு மிக நல்ல வாசிப்பு அனுபவம் பெற விரும்புவோர், உடையார், க.கொண்ட சோழன்கள் போன்ற பல மாடி புத்தகங்களை ஓரம் கட்டிவிட்டு அகல்யாவிலிருந்து தொடங்குங்களேன். சின்ன புத்தகம், பெரிய அனுபவம்.
அகல்யா, சிவசுவின் நட்பு கண்டிப்பாய் உங்களுக்கும் கிடைக்க எழுத்தாணிப்பூச்சியை வேண்டுகிறேன் :-)
எழுத்தாணிப்பூச்சி அறியாதோர் 'இராமபாணம்' என விக்கிபீடியாவில் தேடிப்பாருங்கள். காரணப்பெயரை சரியாக கண்டுபிடித்தவர்கள் இந்த பதிவில் பின்னூட்டமிடுங்கள் :-)
கருத்துகள்
கருத்துரையிடுக