அல்லது 'விதை சுமக்கும் பெருவிதை'!
ஈரிலையில் கூடு செய்து, கூட்டுக்குள் முட்டையிட்டு பாதுகாத்து பொறித்து குஞ்சுகளுக்கு இறக்கை முளைக்கும் வரை உணவிட்டு...இத்தனையும் நடந்தது ஒரு ஒற்றை தேக்குமரக்கன்றிலே!
பெரிதினும் பெரிது (பூமி) கிடைத்தும் போதாமல் தவிக்கும் நம் கண் முன்னே இடையறாது இயற்கை நடத்தும் இந்த அற்புதப்பாடம் கண்டதுண்டா கண நேரமேனும்?
பேரண்ட வீட்டில், நட்சத்திரங்கள் கொண்டு தைத்த வான் கூரையின்கீழ், காற்று விசிறும் மரங்களிடையில், தொட்ட இடமெல்லாம் உயிர் முளைக்கவைக்கும் வெயில் மழை மந்திரக்கூட்டணியில், நம் வாழ்வு மட்டும் ஏனிப்படி கடினமாச்சி?
கதவென்ன ஜன்னலென்ன வீடென்ன காடென்ன வரையறைகள்? எதிலிருந்து எதைக்காக்க இந்த புதிய ஏற்பாடு.
உலகின் முதல் பாலைவனம் நம் காலடித்தடமே தெரியுமா?
பேராசை, பெரும்பயம் என்ற காலணிகளுடன் நாம் நடந்த தடத்தில் புற்கள்கூட முளைப்பதில்லை என்பதை நம்மில் எத்தனை பேர் அறிவர்? உணர்வர்?
(மனிதனின் கால் தடம் படாத கானகத்தில் எண்ணற்ற மிருகங்கள் இருந்தும் ஒரு சுவடு மண்கூட மலடில்லை நட்பே!).
குறிஞ்சி, மருதம், முல்லை, நெய்தல் என நால்வகை நிலமும் நம் கால்பட்டு பாலையாகி இன்று ஐவகை நிலமாய்...இவற்றில் பாலை மட்டும் தொடருது நம் கால்களேகும் திசையெல்லாம்...
நால்வகை நிலமும் 'ஒற்றைப்பாலையாய்' மாறுவதைத்தடுக்கும் ஒற்றை மந்திர விதையுண்டு தெரியுமா உங்களுக்கு? இவ்விதைக்கு மண் வேண்டாம், மழை வேண்டாம், வெயில் வேண்டாம், காற்றும் வேண்டாம், உங்கள் நினைவின் ஒரு சிறு துகள் கிடைத்தாலே போதும்!
நம் பேராசையை "அக்கறை"ப்பெரும்பேராசையாய் மாற்றி, பெரும்பயம் தவிர்த்து, இந்த புவி மொத்தமும் என்னோடே, என்னோடு யாரிருப்பினும், அனைத்தையும் காக்கும் இப்பெரு வீடு "காக்கும் என்னையும், என் முயற்சி இல்லாமலே, யாதொன்றும் செய்யாமலே" என்ற ஒற்றை விதையை இன்றாவது விதைப்போமா நம் எண்ணத்தில்?
இந்த விதையின் விழுதுகள் நீளும் நம் வழியே, நம் குழந்தைகள. வழியே, நம் மரபின் நீட்சி வழியே. அவர் கால்தடம் பாவுமிடமெல்லாம் உயிர் முளைக்கும், தழைக்கும்.
ஐந்து நான்காகும், பாலையும் பண் பாடும்.
இதுவே நமது பண்பாடு.
வாருங்கள், காலணிகளில் இருந்து விடுபட்டு செல்வோம் விதை சுமந்து நெடும்பயணம்.
கருத்துகள்
கருத்துரையிடுக