'தமிழ்னா எனக்கு உசுரு. நல்ல books எல்லாம் தேடித்தேடி படிப்பேன். ஆன்லைன்ல கூட கிடைக்குது...But you know, நல்ல தரமான நாவல்லாம் rare. புதுசா எழுதறவங்க சுமாராதான் எழுதுறாங்க...அதுவும் fiction தான் நல்லாருக்கும். Non fiction லாம் chance ஏ இல்ல...'
வணக்கம், உங்களைத்தான் தேடிக்கொண்டிருந்தேன். இந்தப்பதிவு உங்களுக்கே!
கடல் என்பது நம்மில் அநேகருக்கு வியப்பு ஏற்படுத்தும் ஒரு பெரிய பாத்திரம், அவ்வளவே. அலைகளில் பயத்துடன் கால் நனைத்தும், ஈர மணலில் நடை பயின்றும் கிளிஞ்சல்கள் பொறுக்கியும் மகிழ்வோம். கரை திரும்பி கால் மணலைத்தட்டுகையில் 'என்னா பிசுபிசுப்பு. தட்டுனாலும் போமாட்டேங்குது' என்று அலுப்போம்.
சமஸ் என்கிற இளைஞர் நம்மில் ஒருவர்தானென்றாலும் அவர் நம்மைப்போல் அல்ல!
'நீராலானது உலகு, உலகில் 70 சதம் கடல்' என்ற விபரங்களை நம்மைப்போல் படித்ததும் மறப்பவரல்ல.
30 சத நிலப்பரப்பில் வாழும் நமக்கு எஞ்சிய 70 சத வாழ்வை , அவை சூழும் நிலப்பரப்பை, மனிதர்களை, அவர்களின் வலிகளை, துயரங்களை, மகிழ்ச்சியை (இளையராஜா!) அவர்களுள் ஒருவராய் வாழ்ந்த நாட்களை, சேமித்த முத்துக்களை அற்புத நீள் கட்டுரையாக தொகுக்கப்பட்ட புத்தகத்தின் பெயரும் 'கடல்'! (தி இந்து தமிழ் நாளிதழில் தொடராய் வந்து பின்பு புத்தகமானது, நாளை சரித்திரமாகும்!).
உங்கள் கண்முன்னே கடல் விரியவேண்டுமா? உங்கள் கால்களை நுரைநீர் தழுவிச்செல்லவேண்டுமா? படியுங்கள் இந்தத்தொகுப்பை...முடிக்குமுன் உப்புக்கரிக்கும், உங்கள் உதடுகளில் மட்டுமல்ல, கன்னங்களிலும்.
படித்து முடித்தபின்னும் தொடரும் கடலலைகள் உங்கள் நினைவுகளில். இந்தக்கடலின் பிசுபிசுப்பு உங்களைவிட்டு என்றும் போகாது.
தமிழக கடல் எல்லையில் ஒரு நெடும்பயணம், தெற்கு எல்லையிலிருந்து வடக்கே. இந்த எல்லைக்குள் எல்லை கட்டி நடக்கும் கொள்ளைகள் பற்றியும், ஆலைக்கழிவுகள் முதல் கதிரியக்க கழிவுகள் வரை கடல்நீரை 'மேம்படுத்துவதையும்', புறக்கணிப்பட்ட மக்களின் வாழ்வாதார இன்னல்களையும், கடல் எல்லை என்று முட்டாள் அரசியல் வகுத்த எல்லைக்கோடுகளை கடல் விழுங்க, நீரில் ஏது எனதெல்லை உனதெல்லை என்று தடுமாறும் மீனவர்கள் கடற்படையினரால் சுடப்படும் அவலத்தையும், ஆழ்மீன்பிடி இழுவை மடி (trawlers) கடலுக்கு இழைக்கும் இன்னல்களையும் ஆவணப்படுத்தியதால் அரசியலில் தற்காலிக அதிர்வுகளை ஏற்படுத்திய இந்த கட்டுரைத்தொடரின் அடி நாதம், மனிதம், மனிதம் மட்டுமே!
இந்த நிலப்பரப்பின் ஒவ்வொரு விளிம்பிலும் நம்மைப்போலவே ஒரு பெரும் சமுதாயம் வாழ்கிறது, வாழப்போராடிக்கொண்டே இருக்கிறது என்பது கடல் உணவு உண்ணும் நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்? அவர்களை நிலப்பரப்பிலிருந்தே அழிக்க முனையும் திட்டங்களை யாரேனும் அறிவோமா? ஒரு மணி நேர மின்தடையே வாழ்வின் பெரிய சுமையாக நினைக்கும் நாம் ஒருசில மரத்துண்டுகளை மட்டுமே கயிற்றில் கட்டி அதன்மீதேறி கடல் புகுந்து ஒருவேளை உணவுக்கு அலையும் அந்தப்பெருங்கூட்டத்தை அறிந்துகொள்ள சமஸ் திறந்துவிட்டிருக்கும் மந்திரக்கதவு இப்புத்தகம், உலக இலக்கியத்தரம். ஆங்கில மொழிபெயர்ப்பு வந்தால் மட்டுமே உலக இலக்கிய மரியாதை சாத்தியம். ஆனால் கீழே உள்ள இந்த வரிகளை வேறு எந்த மொழியிலாவது ஜீவன் கெடாமல் பெயர்க்கமுடியுமா?!
'ஆறுன பாட்டன் என் பாட்டன், சீர்பாட்டன்'%
...
'கோலா என்றால், கரையில் உள்ளவர்களுக்கு மீன் கோலா உருண்டை ஞாபகத்துக்கு வரலாம். கொஞ்சம் வயதான கடலோடிகளைச்சந்தித்தால் "அது ஒரு வீர விளையாட்டு அல்லா?" என்று சிரிப்பார்கள். இப்போது போல அந்நாட்களில் வலைகொண்டு கோலாவைப்பிடிக்க முடியாதாம். ஆழ்கடல் தங்கலுக்கு சென்று கோரிதான் பிடிப்பார்களாம். விரதம் இருந்து, வீட்டிலிருந்து வேப்பங்குழை எடுத்துச்சென்று, கயிற்றில் கட்டி கடலில் மிதக்கவிட்டு, "ஓ வேலா, வா வேலா, வடிவேலா..." என்று கூப்பிட்டு காத்திருந்தால், ஒரு கோலா மீன் வருமாம். அதைப்பிடித்து, மஞ்சள் தடவி வணங்கி, " ஓ வேலா, வா வேலா, கூப்பிட்டு வா வேலா..." என்று நீரில் விட்டால் அது கூட்டத்தையே கூட்டிவருமாம். கோலா மீன்கள் புயல் வேகத்தில் பறக்கக்கூடியவை...'
கடல்புற மக்களின் கடல்சார்ந்த நம்பிக்கைகள், இடர்வரும்போதெல்லாம் அவர் மனதில் எழும் இறைப்பிளிறல், சடங்குகள் என உணர்ச்சிக்குவியலாய் கட்டுரைகளில் வடித்திட்ட இந்த இளைஞன் இப்போது எங்கே என்ற எனது தேடல் தொடர்கிறது...
உங்கள் ஆர்வத்தை தூண்ட மேலும் சில தகவல்கள்:
இழுவை மடி இரண்டாம் உலகப்போரில் கடலில் விழுந்த குண்டுகளை அரித்து எடுப்பதற்காக உண்டாக்கப்பட்டது இன்று கடலின் அடி மடியையே துடைத்து காலி செய்துகொண்டிருக்கிறது.
பசுமைப்புரட்சி செய்து நிலத்தை பாழடித்த உலக அரசியல் 'நீலப்புரட்சி' செய்து கடலைப்பாழடித்ததின் உப விளைவே கடல் எல்லை துயரச்சூடு சாவுகள்.
கடல், பசியாற்றிய அட்சய பாத்திரமாகத்தான் இருந்தது கடலோடிகளின் கவனிப்பில் இருந்தவரை. பேராசை பெருவணிகம் அதை வளைத்தபின் இன்றுவரை அங்கு நடப்பது எல்லையற்ற பல்லுயிர் வன்முறை மட்டுமே.
ஒரு இயற்கை வளத்தினைப்பற்றிய நம் கண்ணோட்டம் (காற்று, நீர், நிலம், ஆகாயம், நெருப்பு எதுவுமே விலக்கல்ல) அறம் சார்ந்ததாக இருந்த வரையில் வாழ்ந்தோம். என்று அறம் நழுவி பெரு வணிக பேராசை சகதியில் விழுந்ததோ அன்றே தொலைந்தோம் நாம்...
கருத்துகள்
கருத்துரையிடுக