இந்து ஆங்கில நாளிதழில் stamp size க்கு ஒரு photo. கருப்பு வெள்ளை. கமல், ஷோபா முகங்கள் மட்டுமே. அந்த கருப்பு வெள்ளையிலும் ஏதோ ஒரு வசியமிருந்தது, ஈர்த்தது...
பாலு மகேந்திராவின் மூன்றாம் பிறைதான் நான் அவருடைய படங்களில் முதலில் பார்த்தது. 'கருப்பு வெள்ளைல படம் எடுத்திருக்காரா இந்தாளு?, அதுவும் கமலை வச்சி!', பாக்கணும், உடனே பாக்கணும் என சில ஆண்டுகள் தேடி அலுத்தபின்(பழைய, நல்ல படங்களை நம்ம ஊரில் எந்த கடையிலாவது வாங்கி காட்டுங்க பாக்கலாம்!) YouTube வழி காட்டியது!
டாக்டர் மகள், ஓயாது பயணம் செய்யும் அப்பா, மகளுக்கு துணையாய் அவள் வயதையொத்த வேலைப்பெண், Paying guest ஆக தங்கும் bank manager, அவர் நண்பர் என சொற்ப பாத்திரங்களை வைத்து உணர்வுக்கோட்டை கட்டியுள்ளார். பாலு என்றால் அடல்ட்ரி இல்லாமலா என்று அப்போதே தெரியும்போல. இந்தக்கதையின் knot உம் அதுவே. எப்படி அது அவிழ்கிறது என்பது ஏராளமான சுவாரஸ்யத்துடன், மிக மிக இயல்பான நடிப்புடன் (ஒருவர் மட்டுமல்ல, அனைவருமே!) அற்புதமான ஒளிப்பதிவில் (சத்தியமாய் உணர்வீர்கள், கருப்பு வெள்ளையிலும்) கண்முன்னே விரிகிறது.
ஐம்பது படங்களுக்குமேல், உச்சத்தில் இருக்கும் ஒரு நடிகர், அந்த ஆண்டில் (1977) மட்டும் பதினாறு படம் செய்ததாக நினைவு, சப்பாணி உட்பட. எப்படி இந்த மாதிரி ஒரு experimental film பண்றதுக்கு ஆர்வமும் எனர்ஜியும் இருந்ததோ தெரியவில்லை...அசுர சாதகம்தான் இன்னும் அவரை இயக்கிக்கொண்டிருக்கிறது என நினைக்கிறேன்.
ஷோபா...! 15 வயதில் இப்பட ஹீரோயின்! நம்பமுடியவில்லை! ரோஜா ரமணியும் மைக் மோகனும் இதர ஆச்சரியங்கள். மோகனின் அறிமுகப்படம், அவர் தாய்மொழியில்.
சலீல் சௌதிரியை எனக்கு தெரியாது, இந்தப்படத்தின் பாடல்களை கேட்கும் வரை! தஞ்சே சங்காலி மைசோகளு என்று ஜானகி பாடுவதை இவர் இசையில் கேட்கும் வாய்ப்பு பெற்றோர் பெரும் பாக்கியம் செய்தவர்கள், கன்னடம் தெரியாதபோதும் :-).
பாலு மகேந்திரா, முதல் கன்னடப்படத்திலேயே சிறந்த ஒளிப்பதிவாளர் மற்றும் திரைக்கதை விருதுகளை வென்றார் கோகிலாவுக்கு.
'இலங்கைத்தமிழர் பாலு மகேந்திரா இந்தப்படத்தை ஏன் கன்னடத்தில் செய்தார்?' என்ற நெடுநாள் கேள்விக்கு விடை அளித்தவர், இதேபோல இன்னொரு வித்தைக்கலைஞன். அவர் பற்றியும் அவரும் கன்னடத்தில் செய்த மாயம் பற்றியும் அடுத்த பதிவில்.
என் விழித்திரையில் - முன்னுரை
என் விழித்திரையில் - முன்னுரை
கருத்துகள்
கருத்துரையிடுக