என் வீட்டு தோட்டத்தில் ஓரமாய், மௌனமாய் அவள், நான் பார்க்கும்போதெல்லாம் நின்றுகொண்டே.
வாய் நிறைய சிரிப்பவள் அஞ்சாறு மாசமா இப்படி இருக்காளே என்று நாளாக நாளாக என்னுள் ஒரு வேதனை.
எப்படி கேட்பது, எங்கு தொடங்குவது, நான் பேசுவது அவளுக்குப்புரியுமா, புரிந்தாலும் கேட்பாளா என்றெல்லாம் குழப்பம்.
தனியே சில முறை ரிகர்சல் பார்த்துவிட்டு ஒரு நாள் வெட்கம் பிடிங்கித்தின்ன (first time ங்க!), பேச ஆரம்பித்தேன் (யாராவது பாத்துட்டா நம்மளப்பத்தி என்ன நினைப்பாங்க என்ற யோசனை வேற...).
முதல் முயற்சி தோல்வி. அடுத்த சில முயற்சிகளும் அப்படியே...
இப்படி நாட்கள் நகர்கையில், என் வெட்கம் விலகி எங்கோ ஒரு புள்ளியில் ஆத்மார்த்தமாக பேச ஆரம்பித்தேன்.
நெடுநாள் மௌனத்தை ஒரு நாள் கலைத்து அவள் கேட்ட ஒற்றைக்கேள்வியால் நிலைகுலைந்தேன்; 'ஏன் வெட்டின?'
குற்ற உணர்வுடன் பதில் சொல்ல முயன்றேன், 'நான் பண்ணலம்மா, வேணும்னு பண்ணலம்மா...உறவினர் கேட்டதினால ஒரு ஆள வச்சி வெட்டினேன்'.
'ஏவினது நீதான?'
'...ஆமாம். தெரியாம தப்பாயிடுச்சி...'
'உங்க இனமே அப்படித்தானே? ஒரு வார்த்தை என்னைக்கேட்டிருக்கலாமே?'
என் மீசை மயிரைக்கூட என் அனுமதியின்றி நறுக்க யாருக்கும் அனுமதி தராத நான் அவள் கேள்விக்கு பதிலின்றி ...
மனம் ஒன்றி பல நாட்கள் மன்னிக்க வேண்டியபின் மனமிறங்கி...இன்று மீண்டும் சிரித்தாள்!
(கபிலனின் கன்மணி பூப்பறிப்பதற்கு முன் செடியிடம் அனுமதி பெற்றே பறிக்கிறாள். அவர்கள் இல்லத்தில் கண்டிப்பாய் ஏராளமாய் பூ பூக்கும்!
அவளது செயல் என் 'கண்' திறக்க, அதன் பின் நான் என் வீட்டில் பூக்காது ஒரு வருடமாய் நின்றவளிடம் சில நாட்கள்தான் பேசினேன்! அவள் சிரிப்புதான் எவ்வளவு அழகு!!!).
கருத்துகள்
கருத்துரையிடுக