நம் உலகின் ஆதி மழைத்துளியில் முளைத்த தாவரம், பெருகி தாவரங்களானதும், மரம், செடி, கொடி என்று பல்கிப்பெருகியதும், பூச்சிகளை உண்ணும் ஆற்றல் பெற்றதும் (Non vegetarian plants) என்றோ எவ்வாறோ நடந்த விந்தையாகட்டும்... நம் எண்ணக்குவியல் இங்கு விந்தை மீதல்ல. அந்த முதல் துளி மீது!
அந்த நீர்த்துளி கண்ட, காணும், காணப்போகும் காட்சிகளை ஒரு நொடியேனும் நம்மால் உணரமுடிந்தால் அதுவே பேரின்பம்...
அன்றும் இன்றும் என்றும் அசுவத்தாமன் போல மரணமின்றி அலையும் ஆற்றல் அதற்கு எங்கிருந்து என்ற கேள்விக்கும் போகவேண்டாம். அசுவத்தாமன் உதிரத்தையும் அவன் பாவங்களையும்கூட அது கழுவியிருக்கலாம்...
என்று விழுந்தாலும் எங்கு விழுந்தாலும் விழுந்த இடத்தில் உயிர் முளைக்கவைக்கும் பேராற்றலை புரிந்து கொள்ள நாம் என்ன செய்தோம்? அருவியென்றோம், ஓடையென்றோம், ஆறென்றோம், கடலென்றோம், இடையில் ஏரியென்றும், ஏந்தலென்றும், ஊருணியென்றும், குளமென்றும் தேக்கியது போக.
அப்படி தேக்கியவரெல்லாம் காற்றில் கலந்து பலகாலமானபின்பு, நம்மைச்செதுக்கிய நீரென்ற பேருயிரை மறந்து, இன்று அதனை நம் கைக்கருவியாக பாவிக்கிறோம்...ஆழிசூழ் உலகில், ஆழி நிரப்பிய குடுவைகள்தானே நாம் என்பதையே மறந்து...
எங்கோ விழுந்து உயிர் நனைத்து எங்கோ எழுந்து எங்கோ விரைந்து மீண்டும் எங்கோ விழுந்து என்ற இதன் இடையறாத சுழற்சியின் பின்னர்தானே ஏரோடும், ஏர் பின்னே நம் உலகு ஓடும்?
இந்த துளி நீருக்கும் நினைவு உண்டு, அதை எப்படியாவது அறியவேண்டும் என அறிவியலாளர்கள் ஆய்வுக்கூடங்களில் முட்டி மோத, நீராலான இவ்வுலகில் பிறப்பு முதல் இறப்பு வரை, சாம்பலாய் கரையும்வரை, அனைத்துயிரையும் சூழும் இந்தத்துளி அறிந்திருக்கலாம் நம் உலகு தோன்றிய கதையை...
மழையின் மொழி நம் அறிவினால் அறிய இயலா. உணர்வினால் மட்டுமே.
எந்தையையும், தாயையும், அவர் முந்தையையும் உயிர்ப்பித்த, கரை சேர்த்த இந்தத்துளி நம் மீது விழுவது போல் அட்சதை வேறேதும் உலகிலுண்டா?
உள்ளங்கையில் நீரேந்தி மனமுருக வேண்டி உண்டால் அந்த நீரே மந்திரமாகி அற்புத நலன்களை அளிக்கும் ரசவாதம் பயின்றவரின் வழித்தோன்றல்கள் இன்று என்ன செய்கிறோம்?
பாற்கடலை அமுதம் தேடிக்கடைகையில் முதலில் ஆலகால நஞ்சு கிட்டியதாம். அமுதம் பின்னர்தான் கிட்டியதாம். அமுதினும் அமுதான இந்தத்துளி நீரையும் ஆலகால நஞ்சாக்கும் ரசவாத வித்தை பயிலவா நம் நாகரிக நெடும்பயணம்???
ஆமையோடை ஐம்புலனடக்கும் உதாரணமாக சொல்வோமல்லவா. சிறு தொந்தரவென்றாலும் நான்கு கால்களையும், தலையையும் ஓட்டுக்குள் அடக்கும் ஆமை, மழை கண்டால் என்ன செய்யும் தெரியுமா?! இணைத்திருக்கும் படத்தை காணுங்கள்!
வலைகடல் (ocean of internet!) திறந்தே இருக்கிறது் இறங்கித்தேடுங்கள்!!
தேடினாலும், முடித்தாலும், முடிக்காவிட்டாலும், ஏன், தேடாவிட்டாலும்கூட இனி என்றெல்லாம் ஆதி துளி மண்ணிறங்குகிறதோ அன்றெல்லாம் இருகரம் கூப்பி அட்சதையை ஏற்றுக்கொள்வோமே!
பேரன்புடன்,
பாபுஜி
கருத்துகள்
கருத்துரையிடுக