என்ன மனுஷன்யா இந்த 'தகழி'!
அறுபது வருடங்களுக்கு முன் எங்கோ சுழன்றடித்த கடலுக்குள் என்னை இப்ப சட்டுனு இழுத்துட்டுப்போய்ட்டானே!
தகழி சிவசங்கரன்பிள்ளை. 44 வயதி்ல், அதுவும் இருபதே நாட்களில் எப்படி செய்யமுடிந்தது இவனால் இப்படியொரு பெருங்காரியம்!!!!
மரக்கானும் மரக்காத்தியும் உப்புக்காற்றும் கண்ணீர் உப்பும், அரையனும், அரையத்தியும், காசும், காதலும், சமுதாயக்கட்டமைப்பின் விசித்திரங்களுமாய் அவர் வரைந்த கேரளக்கடற்கரை கிராமத்து காவியம் இன்னும் ஈரமாய் உப்பு சொட்ட என் மனதில்...
காயலாம், காயாமலும் போகலாம்.
அலைகடலில் தோணியில் அவர் வீசிய தூண்டிலில் விருப்பமுடன் சிக்கி், கதையை அவர் நகர்த்திய பாதையில் ஆனந்தமான பயணம்!
நாலாம் மதத்துக்காரனின் சிறுவனும் வலையனின் சிறுமியும் விளையாடினால் தவறு சொல்லாத அந்தக்கடல்புறத்தில், வளர்ந்தபின்னான அவர்களின் இடையேயான காதல் நிகழ்வுகளை அவரவர் உணர்வின் வழி /ஆதாயத்தின்வழி இறுதிவரை நகர்த்திச்செல்கிறார் தேர்ந்ந மரக்கானைப்போல்! அதுவும் அந்த இறுதிப்பயணம்! Timeless!!!
பெண்களின் நுட்பமான உணர்வுகளை, அக்கால ஆண்களின் மனநிலையை, அவை காதல்காரணமாய் மோதும்போதெல்லாம் உண்டாகும் அதிர்வலையை என்னமாய் எழுதியிருக்கிறார்!
காதல் உணர்வுகள் கடற்காற்றையும் கரை மணலையும் நிறைக்கும் அந்த ஒன்பதாம் அத்தியாயம் படித்து முடித்ததும் 'இதோடு நிறுத்திவிடலாமே ... அவர்கள் அந்தக்கடற்கரையில் பேசிக்கோண்டேயிருக்கட்டுமே காலமுள்ளவரையில்' என மேற்கொண்டு வாசிக்காமலிருந்தேன் சில நாட்கள்...
சாகாவரம் பெற்ற எழுத்து என்பது நம்மை தன்னிலை மறக்கவைத்து, கால தேச வர்த்தமானங்கள் தாண்டி தன்னுள் இழுத்துக்கொள்ளும், எத்தனை முறை படித்தாலும்! Unforgiven என்ற திரைப்படத்தின் இறுதி 20 நிமிடங்கள் போல.
மீன் வாடையே ஆகாதென்று மூக்கைப்பொத்தி ஓடும் சாகாகாரிகளையும் (vegetarians) கடல்சார்ந்த வாழ்வியலில் விருப்பமுடன் குளிக்கவைத்து, அற்புதக்காதலில் ஊறவைத்த "செம்மீனை" ருசித்து உண்ணவைத்த இந்த மனுஷனுக்கு தேடிவந்த விருதுகள் ஏராளம். பல்வேறு மொழிகளில் பெயர்க்கப்பட்டு, வெளிநாடுகளிலும் திரைப்படமாக்கப்பட்டு...மனுஷனுக்கு இதுக்குமேல என்னய்யா வேணும்?! என்ற மலைப்பை ஒதுக்கிவைத்து, 'இதுக்கு மேலயும் என்னால முடியும்' என்று அவர் பின்னாளில் திரித்த 'கயிறு' பற்றி...இன்னொரு நாளில் பகிர்கிறேன்!
முன்கதை!:
நல்ல புத்தகங்கள் தேடி அந்த சிறிய புத்தகக்கடையில் நானும் என் தங்கையும் நுழைந்தோம். செம்மீனின் தமிழாக்கப்படைப்பு ஒற்றைப்பிரதி கண்ணில்பட (நேர்த்தியான தமிழாக்கம்...செய்தவரும் பெரும் எழுத்தாளரே) பாய்ந்து எடுத்தோம். 'எனக்கு', 'எனக்கு' என்று சிறுவர்போல பில்லிங் கவுண்டரின் முன் நாங்கள் போராடுவதைக்கண்ட சேல்ஸ் கேர்ள், இளைஞி, சற்று யோசித்தபின்,'என்னோட பர்சனல் காப்பி இருக்கு. பரவால்லன்னா எடுத்துக்கோங்க' என்று (அவளுடன் வேலைபார்த்த இளைஞன் அவசரமாய் தடுத்ததையும் மீறி) தந்தது என்னோடு தங்கிற்று. இன்னொன்று விமானமேறி தங்கையூர் சென்றது.
அப்போது எனக்குத்தெரியாது அந்த பர்சனல் காப்பியில் வழிந்த அவளது காதல் கதை...ஏராளமான காதல் சார்ந்த வரிகளை அடிக்கோடு, ப்ராக்கெட், ஹைலைட் இன்னபிற எல்லாம் செய்திருந்தாள். அவள் கருத்தம்மாவாகவும் அந்த இளைஞன் பரீக்குட்டியாகவும் என் கற்பனையில் வழிய, புத்தகங்களில் 'கை வைப்பவரையே' பிடிக்காத எனக்கு, நன்றி மட்டுமே சொல்லமுடிந்தது மனதில் அவர்களிடம்...
கருத்துகள்
கருத்துரையிடுக