ஆடை என்பது மானம் காப்பது. அளவு, அழகு, எளிமை, வலிமை என்பவை எல்லாம் இதற்கு அப்புறம்தான்.
இழைத்து இழைத்து நெய்த ஆடையில் ஒரு ஓட்டையோ கிழிசலோ இருந்தால், 'சும்மாக்குடுத்தாக்கூட வேணாம்' என்பதாகவே உலகப்பொது மனநிலை.
நம்மைப்போலவே நம் நாட்டிற்கும் ஒரு ஆடை உண்டு. அது இன, மொழி, வரலாறு, புவியியல் எல்லைகளைத்தாண்டிய ஒன்றாகவே எப்போதும் இருக்கிறது.
நாடு தாண்டியும் விரிந்து உலகம் முழுவதற்குமான ஒரே ஒரு ஆடை, வேற்றுமைகள் அனைத்தையும் அணைத்து மானம் காக்கும் அந்த ஆடை, உலகம் முழுவதும் Moral Fabric என்ற ஒற்றைப்பெயராலே அறியப்படுகிறது.
யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று என்றோ பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் ஒருவன் மகிழ்ந்து கூவியபோது அதில் பொத்தல்களோ. கிழிசல்களோ இல்லை. இடைப்பட்ட காலத்தில் அவரவர் சக்திக்கு அவரவர் இட்ட பொத்தல்கள்தான் எத்தனை?
ஒரே ஒரு நாளில், ஒரே ஒரு நிலப்பரப்பில் இன்று மட்டுமே புதிதாய் எத்தனை பொத்தல்கள்?
'ஆசிரியர் திட்டியதால் மாணவன் தற்கொலை'
'மருத்துவக்கல்லாரி மாணவி தொங்கினார்'
'நீரில் மூழ்கிய நண்பனை காப்பாற்றாமல் மரண நிமிடங்களை வீடியோ எடுத்து வலைபரப்பிய பதின்பருவ, 'நீரில் மூழ்கிய' (சாராயம்), நட்புகள்'
'ஏழு வயது சிறுமியை...எழுபது வயது நபர் கைது'
'சாலை விபத்தில் இறந்தது தோரணவாயிலால் அல்ல, அமைச்சர் விளக்கம்'
'வனப்பகுதியிலிருந்து 300 கானகப்பழங்குடியினர் தடியடி நடத்தி அப்புறப்படுத்தப்பட்டனர்'
'தில்லியில் மழையினால் மாசு குறைந்து இப்போது அதன் சாலைகள் கண்களுக்குத்தெரிகின்றன'
'கோதாவரியை காவிரிக்கு கொண்டுவருவோம்'
'நூடுல்சில் சாம்பல், விகிதத்திற்கு அதிகமாக இருந்ததால் அபராதம் 50 கோடி'
...
அறத்தையும் அன்பையும் மட்டுமே ஊடும் பாவுமாய் கொண்டு (Warp and Weft) நேரத்தியாக நம் ஆன்மத்தறியில் நெய்த ஆடை, இன்று கிழிந்து தொங்கிக்கொண்டிருக்கிறது கந்தலாய்...
உடுக்கை கிழித்தவர் மனங்களோ இன்னும் வேகமாய் காரியத்தில் கண்ணாய்!
14 கோடி கரங்கள் இருந்தென்ன பயன்? இடுக்கண் களைய முனையும் கரங்கள்தான் எத்தனை?
பொத்தல்களால் மட்டுமே நாங்கள் நெய்த இந்த ஆடைக்கு நிகர் ஏது என இறுமாந்து நிர்வாணமாய் நாம். This old cloth, supposed to be re"new"ed constantly by all of us, is not just for Emperors; it is for commons too :-(
போதாது...இந்த கிழிந்த ஆடைக்குள் ஒடுங்கும் ஒவ்வொரு மனதிலும் மாற்றம் நிகழ்ந்தால் மட்டுமே பெரும் மாற்றம் சாத்தியம்.
ஊடும் பாவும் இப்பொழுதுகூட கிட்டியவண்ணமே உள்ளன, தேடும் கரங்களுக்கு.
தேடுவோம் வாருங்கள்!
தேடுவோம் வாருங்கள்!
கருத்துகள்
கருத்துரையிடுக