சங்கிலித்தொடராய் வாழ்ந்து முடியும் நம் வாழ்வை தடம் புரட்டும் விதமாய் ஒற்றை மனிதர்கள் அவ்வப்போது தோன்றுவதுண்டு.
சென்ற நூற்றாண்டின் இரு பெரும் ஆளுமைகள் - உலக அரசியலில்! இவர்களுக்கு மட்டும் எங்கிருந்து கிடைத்தது புவியை உருட்டும் நெம்புகோல்?
அடிமைத்தனத்திற்கும் ஆக்கிரமிப்புக்கும் எதிராய் இருவரும் உயர்த்தியது போர்க்கொடிதான், கத்தியோடு ரத்தமோடு ஒன்றும் கத்தியின்றி ரத்தமின்றி ஒன்றும்.
வழி என்னவானாலும் போர் போர்தானே.
தென்னமெரிக்காவில் ஒரு நாட்டில் பிறந்து இன்னொரு நாட்டின் ஆயுதப்புரட்சியில் தலைவனுக்கு உறுதுணையாய் நின்று, வென்று, ஆட்சிப்பொறுப்பு பெற்று அமைச்சரான பின் அவன் ஓய்வெடுக்கவில்லை...'இந்த மக்கள் மட்டும் சுதந்திரமாக இருந்தால் போதுமா? அடுத்த நாட்டின் மக்களும் என் மக்கள்தானே'! நானும் கூடடையும் பறவையல்லவே. பறக்கவேண்டிய தூரமும் வானமும் நிறைய நிறைய' என நலிந்தோரை நாடி, எதிர்ப்புக்குழு திரட்டி ஆயுதமேந்திப்போராடியவன், ஒரு மருத்துவன் - மானுடம் காக்க அவன் தேர்வு செய்த வழி அது.
இந்தியாவில் பிறந்து, தென்னாப்பிரிக்காவில் நலிந்தோர் உரிமைக்குப்போராடி வென்ற வழக்குரைஞன், 'என் வேரிலேறும் கரையானை என்ன செய்வது?' என்று தாய்மண் திரும்பியவன், 'அன்பையும், ஒத்துழையாமையையும்கூட வலிமையான ஆயுதமாக்கலாம்' என உலகம் கண்டிராத மாபெரும் யுத்தத்தை நம் மக்கள் மனதில் விதைத்து வளர்த்து அவர்களை விடுவித்தான் 300 ஆண்டுகால அடிமைத்தளையிலிருந்து.
இவர்களது அணுகுமுறை சரியா தவறா என்ற விவாதம் நமக்கு வேண்டாம்.
மானுடத்தின் தடத்தை மாற்றியமைத்ததில் இவர்களின் பங்களிப்பு மறக்கக்கூடிய ஒன்றா?
தடம் வேறானாலும் இவர்கள் இருவரையும் இயக்கியது ஒன்றுதானே!
இருவரையும் என்ன செய்தோம்?
துப்பாக்கி கொண்டு துளைத்தோம்.
புதைத்தோம்.
சிலைகள் வைத்தோம்.
(அவர் வாழ்வின் செய்தியை) மறந்தோம்.
இன்று உலகெங்கும் 'புரட்சி' என்ற, (உச்சரிக்கும்) எவருக்கும் விளங்காத சொல்லுக்கு மட்டுமே, சொல்லளவில் மட்டுமே, ஏகபோக உரிமையாய் ஒருவன், அதற்கு மட்டுமே பயன்படுகிறான்.
இன்னொருவனோ இப்போது சுத்தம் என்ற சொல்லுக்கு மட்டுமே இங்கு ஏகபோக உரிமையாளனாய், இவனும் ஒரு உருவக அளவில்மட்டுமே பயனிலிருக்கிறான்.
தனியொரு நாட்டைப்பிணைத்த தளைகள் நெடும் வணிகச்சங்கிலிகளாய் உருமாறி உலகம் முழுவதையும் பிணைத்து...இதோ, ஆயிற்று பல வருடம். 'சே, என்ன வாழ்க்கையிது?' என சிந்திக்கக்கூட நேரமின்றி நிகழ்கால சே குவேராக்களும் காந்திகளும் நுகர்வோர் கலாசாரத்தின் பெருவேக ஓட்டத்தில் மிதிபட்டு நசுங்கிக்கொண்டிருக்கிறார்கள். பிழைக்குமா மானுடம்?
We as humankind have drastically reduced their significance into just romantic notions, nothing more, nothing less.
What is Atlantis to us anyway?!
கருத்துகள்
கருத்துரையிடுக