மனிதன் உட்பட எந்த ஒரு விலங்கினத்திலும் உடல்/மனவலிமை சார்ந்த சமுதாயக்கட்டமைப்புகள், தலைமைகள் இருந்தே தீரும். சிறுநீ்ர் கொண்டு எல்லை வகுக்கும் மிருகங்களுக்கும், படை கொண்டு எல்லை வகுக்கும் மனிதருக்கும் இதுவே. பறவைகள் சமுதாயத்தில் குழு மனப்பான்மை தாண்டி தனி ஆளுமைகள் இல்லை என்றே சொல்லலாம்.
எந்த வித தலைமையும் இன்றி, என் கடன் பணிசெய்து நிற்பதே என்று காலத்திற்கும் இயற்கையோடு இணைந்து ஏனைய அனைத்தையும் வளர்க்கும் பேருயிர் மரம் மட்டுமே.
மாமரத்தோப்பில் தலைவனேது? பனைமரக்காட்டில் தலைவியேது?! எல்லைகள்தான் ஏது?
ஒரு மரத்தின் அடியில் எது வளர்ந்தாலும் அதற்கு சங்கடமில்லை. இவைதான் வேண்டும், இவை வேண்டாம் என பாகுபாடு கிடையாது. தன்னை இறுக்கும் கொடியினங்களைக்கூட மரம் அறுத்ததாய் சுவடுகளில்லை. இறுக்கத்திற்கும் எல்லை காட்டி அவற்றினூடே வளர்வது மட்டுமே அவற்றிற்கு தெரியும். வண்டு துளைத்த மரம்கூட வாழுமட்டும் வண்டுக்கு விருந்தோம்பல் செய்தபின்னேதான் மாளும்!
கடும் வெயிலில் நீரின்றி வாடினாலும் கண்ணீர் விடும் ஒற்றை மரமாவது கண்டதுண்டா யாரேனும்?!
கலீல் கிப்ரான் எழுதிய Prophet இலிருந்து திருமணம் குறித்த கவிதையில் வரும் ஒரு சொற்றொடர் இது:
'And the oak tree and the cypress grow not in each other's shadow.'
அவர் சொல்ல வந்தது தம்பதியானாலும் அவரவர் வளர்ச்சிக்கான இடைவெளி / space அவசியம் என்று. இல்லையேல் ஒன்றின் நிழல் இன்னொன்றில் பட்டு இரண்டுமே வளராது, தழைக்காது என்று.
இது சைப்ரஸ் மரத்திற்கும் ஓக் மரத்திற்கும் தெரியாது. பூமிச்சுற்றின் சூரியக்குளியல் கிழக்கிலிருந்து மேற்கே. இவ்விரு மரமும் அருகருகில் இருந்தாலும் சில மணிகள் கிடைக்கும் பெரு வெளிச்சத்தூறல்கள் போதும் இவை இரண்டும் வளரவும் தழைக்கவும்.
கிப்ரான் மிகப்பெரிய கவிஞன் மட்டுமே, மரம் வளர்த்தவனல்ல!
தனக்கான உணவை தானே உற்பத்தி செய்து, தன்னை அண்டியவரின் பசியையும் ஆற்றும் (ஞானப்பசியையும்தான்!) பெருங்குணத்தை மரங்களிடம் கற்பவர் அனைவரும் மரம் ஆக முயலலாம்.
ஏனையோர் என்ன ஆனால் நமக்கென்ன!
ஏனையோர் என்ன ஆனால் நமக்கென்ன!
🤝👑💐
பதிலளிநீக்கு