அலாவுதீனின் அற்புத விளக்கு
தேய்த்தால்தான் பூதம் வரும்.
தேய்க்காமலே வரும் பூதம்
சொல்லட்டுமா?
மண் சருகு கல்லிடுக்கில்
பெரும்பார பூமி சுமந்து
நித்திரையிலும் காரியத்தில் கண்ணாய்
காற்று வெயில் மழை
நாடிபிடித்து
உயிர் ஜனிக்க நேரம் குறித்து
பூமியின் ஓட்டில் ஓட்டையிட்டு
எட்டி உதைத்து வெளிப்பட்டு
வான் நோக்கி துளிரையும்
கீழ்நோக்கி நீர்தேடி வேரையும்
வழியவிடும் உயிராற்றல் வந்ததெப்படி
விதைக்குள்?
எது எப்பக்கம் என
யார் சொல்லித்தந்தார் அதற்கு?
அச்சிறு பைக்குள் உயிர்பூதம்
அடைபட்டது எப்படி?
அப்பூதம் வெளிவரும் அற்புத
கணத்தை கண்டதுண்டோ யாரேனும்?
யாரும் ஏவாமலே வான்வளர்ந்து
கடல் மணலை எண்ணுமோ?
நட்சத்திரங்களைப்பொறுக்குமோ?
பூ தரும் காய் தரும் கனி தரும்
ஏராளமாய் நிழல் தரும்
உயிரனைத்தும் சுவாசிக்க தன்
உயிர் கசியும் பெரும்பூதம்
அப்பூதம்
பூதத்துலெல்லாம் தலை!
கருத்துகள்
கருத்துரையிடுக