ஒரு கிராமத்தான் பையன் தமிழ் படிக்க பட்டணம் போனானாம்.
பல வருச படிப்பாம்.
முடிச்சதும் திரும்ப, ஊரே கூடி வரவேத்துதாம்.
மேள தாளமாம், மாலை மேல மாலையாம்.
களைச்சிப்போன பையன் அம்மையையும் அப்பனையும் பாத்து 'அன்னாய், தாதாய், அயற்சி மிக்கது. அடிசில் புக்கி அயனம் கொணர்க' என்றானாம். அதுதான் அவன் அன்னக்கி முதலும் கடைசியுமா பேசினதாம்!.
'எலேய், புள்ளய பட்டணத்துக்கு படிக்க அனுப்பிச்ச லச்சணமா இது?! அவனுக்கு பட்டணத்து பேய் புடிச்சிருக்குலே, புடிச்சி மரத்துல கட்டுங்கலே!' என்று கட்டி ஒதச்சு பிரிச்சி மேய்ஞ்சி தோலுரிக்க, ரெண்டு நாள் பசியில நொந்து நூலாயி, பாக்க வந்த அம்மை, அப்பன்கிட்ட தீனமா முனகுனானாம், 'அம்மை, வவுறு பசிக்கி, சோறு குடு'ன்னு. இதத்தான அவன் ரெண்டு நாளு முன்னாடியுஞ்சொன்னான்!!?
இயல் இசை நாடகமென்று முத்தமிழோடு முடிந்திருந்தால் இன்றும் யாம் அத்தமிழிலிலேயே அடிசில் வடிப்போம்.
முத்தமிழின் வர்ண பேதங்களுக்குள் சிக்கி இன்றும் நமை அன்னாய் தாதாய் என வதைபடாமல் காத்தது, காப்பது நான்காம் தமிழ், 'பழகு தமிழ்'. கண்ணதாசன் பார்த்திபன் மகனை விளித்த தமிழ் (google 'பழகும் தமிழே பார்த்திபன் மகனே' for more).
வாங்க, பழகலாம் என உற்றமும் சுற்றமும் பழகிய, பழகும், இயல்பான, நடைமுறைத்தமிழே இந்த நான்காம் தமிழ்.
'எப்படி இருக்கீக மக்கா?',
'ஏனுங்க சௌக்கியங்களா?'
'நல்லா கீரியா மா!'
'பங்காளீ! எப்புடிறா இருக்க!'
இதுபோல பழகும் மொழியை எழுதும் மொழியாகவும் வடிக்கும் திறமை வாய்ந்தது, யாமறிந்த மொழிகளிலே தமிழ் மட்டுமே!
எழுத்தைக்கொண்டே எந்த ஊர் / க்காரன் / க்காரி என படிப்பவரை இனம்கானச்செய்யும் வசதி (GI tag) வேறெந்த மொழியிலும் உண்டா!
You can't bring the slang of a region when you write in any other language. I wld love to be proved wrong!
முத்தமிழுக்கு இடமளித்த சங்கப்பலகை பழகு தமிழை ஏன் ஏற்கவில்லை?
நாலாம் வேதமென அதர்வணமே ஏற்றுக்கொள்ளப்பட்டபிறகும்?!
(அதர்வண வேதம் வாழ்வியல் வேதம், மற்ற மூன்றும் இறை நோக்கிய வேதங்கள். சுருங்கச்சொல்லின் அதர்வண வேத அடிப்படை நம் பழகுதமிழ் போன்ற 'பழகு சமஸ்க்ருதம்'. அதனால்தான் மூன்றாய் மட்டுமே இருந்த வேதம் நெடுங்காலம் கழித்தே நான்கானதாம், by popular demand, grudgingly though!)
எத்தனையோ தலைமுறையை விட்டு ஏன் 'நாலாம் தலைமுறை' நாவிதனை சிற்றப்பனாக்க தமிழ் உதவிற்று?
ஊறிப்போன வர்ணபேதங்கள் காரணமாக இருக்கலாம். நான்காம் வர்ணத்திலிருந்து வந்த வேதம் அதர்வணமாயிற்று அங்கே, பழகு தமிழோ இப்போதுதான் இயல், நாடகக்கட்டமைப்புகளை உடைத்து வெளியேறியிருக்கிறது இங்கு. இசை...well..பாடறியேன் படிப்பறியேன் என்று 'எட்ட'ப்பார்த்தது இன்று டி. எம். கிருஷ்ணா என்ற ஒற்றை மனிதனின் முயற்சியால் நான்காம் வர்ணத்தை மெருகூட்டத்தொடங்கியிருக்கிறது, '
கர்னாடக இசை சேரியிலா?' என்ற எதிர்ப்பையும் மீறி. ஒன்று போதுமா இந்த நாட்டுக்கு!
மெல்லத்தமிழ் இனி சாகும் என்றது முத்தமிழுக்கு மட்டுமே பொருந்தும். நான்காம் தமிழ் சாகாது ப்ரோ! நான்காம் தலைமுறையா நாம இருப்போம் ப்ரோ!!
துணுக்கு:
ஆசியக்கண்டத்தில் நான்கு என்ற எண் ஆகவே ஆகாதாம்! சீன ஜப்பானிய பட எழுத்துகளில் நான்கு என்ற வார்த்தை மரணத்தை குறிக்குமாம்! ஆகவே கட்டிடங்களில் நான்காவது மாடியே கிடையாதாம்!
நாமதான் 'நெருப்புன்னு சொன்னா வாய் சுட்டுடுமா?!'ன்னு கேக்கிறவங்களாச்சே!
கிருத்துவர்களுக்கு பதின்மூன்று (13) ஆகாதாம். Triskaidecaphobia!. 'கடைசி விருந்'தில் ஏசுவை 13 ஆவது சீடன் யூதாசு காட்டிக்கொடுத்ததனால்.
'பாஸ், பதிமூணு...ஒண்ணும் மூணும்...கூட்டிப்பாத்தா நாலு வருது பாஸ்!'
கருத்துகள்
கருத்துரையிடுக