கேரளத்து எழுத்தாளர் நகுலனை அவர் வீட்டில் தமிழக எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் சந்தித்து உரையாடியதை நகுலன் இறந்தபின்பு பதிவிட்டிருந்தார் இந்த தலைப்பில். நகுலன் வீட்டில் அவர் கண்ட பூனையும் அதில் இடம் பெற்றதாய் நினைவு...
கண்ணன் வீட்டிலும் யாருமில்லை...இல்லை இல்லை...யாரோ இருக்கிறார்கள் ஆனால் கண்ணன் இல்லை.
கண்ணனை உங்களுக்குத்தெரிந்திருக்க வாய்ப்பு குறைவு. ஒரு சராசரி மனித வாழ்வுதான் அவரது வாழ்வும். படிப்பு, வேலை, காதல், திருமணம், குழந்தை, குழந்தை படிப்பு, வேலை, திருமணம், பேத்தி,பேத்திக்கு முடியிறக்கி காது குத்து என ஐம்பத்தைந்து வயதில் கடமைகளை முடித்து, வாழ்வின் வட்டத்திலிருந்து விடுபட்டு போய்விட்டார் நட்சத்திரங்களிடம்.
என்னேரமும் புன்னகை அணிந்தவர், இவரிடம் உதவி பெறாதவர் இங்கு குறைவே. ஓயாது வேலை, இறை பணி என இறுதி ஆண்டுகளை இறுதி என்று தெரியாமலே...
முதல் நாள் வங்கியில் அவரது இருக்கைக்கு முன்னால் நெடிய வரிசை. எப்போது அங்கு சென்றாலும் அவரை சந்திப்பதும், என்ன வேலை இருந்தாலும் நிறுத்தி என்னோடு அன்போடு உரையாடுவதுமாய் வழக்கம். 'நாளை பார்க்கலாம்' என்று அன்றுதான் முதல்முதலாய் பார்க்காமலே நகர்ந்தது. கடைசியாய் உயிரோடு பார்த்தது.
மறுநாள் மாலை வீட்டு வாயிலில் மகிள மரம் யாராலோ வகிரப்பட்டு (vertical slant cut) மதில் மேல் சாய்ந்திருந்ததை வீடு திரும்புகையில் கண்டு பதைத்து கயிறு கட்டி நிமிர்த்துகையில் phone call...'கண்ணா சீரியசாம், ஒண்ணும் பண்ண முடியலன்னு டாக்டர் சொல்றாங்க' என அழுகுரல்.
பதறி ஓடி மருத்துவமனை சேர்ந்து நுழையுமுன்னரே விடைபெற்றுவிட்டார். காலையில் தனியே வீட்டில் மயக்கமாகி, மருத்துவ நண்பர் உதவியால் மருத்துவமனை அடைந்து பல பரிசோதனைகள், முடிவு வருமுன்னே முடிந்ததாய் சொன்னார்கள். இறுதி திமிடம் வரை வேதனையோ வலியோ வெளியில் தெரியாது உறவுகளிடமும் நட்புகளிடமும் பேசிக்கொண்டிருந்தாராம், 'block இருக்கு போல, stent வப்பாங்கன்னு நினைக்கிறேன்' என்று...
Iorta Rupture, இத்தனை நேரம் வலியில்லாமல் பேசிக்கொண்டிருந்தது ஒரு miracle என்றெல்லாம் மருத்துவர்கள் சொன்னார்கள். நம்பத்தானே வேண்டியிருக்கிறது...
அவர் வாழ்ந்த மாடி வீட்டில் அவரை சுமந்து வந்தனர் சிலர். இறுதி வழியனுப்புகையில் குறுகிய மாடிப்படியை வெட்டியெடுத்து இறக்கவேண்டியதாயிற்று.
மகள், மருமகனுக்கு வெளி மாநில வேலை. அனைவரும் கிளம்பி போயாச்சி, வீட்டை வாடகைக்கு விட்டாச்சி.
ரசப்பாத்திரத்தில் தீர்ந்துவிட்ட ரசத்தின் கப்பியாய் அந்த வீடு இருக்கிறது.
இன்று கண்ணன் வீட்டில் கண்ணன் இல்லை. யார் யாரோ இருக்கிறார்கள், வீட்டருகில் பூங்காவில் அவர் நட்ட அரசமர ஆக்சிஜனை சுவாசித்துக்கொண்டு. அந்த மரத்தின் வயது 25...
இருப்பார் அவர், என் நினைவுகளில்; நினைவு அழியும் வரை.
கண்ணனுக்கு இனிப்பு பிடிக்கும், பலாச்சுளை விருப்பம், கிரிக்கெட் பிடிக்கும், குழந்தைகள் பிடிக்கும், மனிதர்கள் பிடிக்கும். ஆஞ்சநேயர் மேல் அளவற்ற பக்தி. என்றெல்லாம் நான் சொன்னாலும் கண்ணனை தெரிந்திருக்க உங்களுக்கு வாய்ப்பு குறைவுதானே.
கருத்துகள்
கருத்துரையிடுக