எனக்கு இன்னும் பல பேர் இருக்கு! |
நாலாம் தமிழ் - 1 இல் 'மெல்லத்தமிழ் இனி சாகாது ப்ரோ' என்று எழுதியிருந்தேன்.
பாரதி, மெல்லத்தமிழ்...என்று சொன்னது சாபமாயல்ல, கோபமாய், அதுவும் யாரோ தமிழின் ஆளுமைத்திறனை ஏளனம் செய்யப்பயன்படுத்திய சொற்றொடரை சினந்து, தமிழரை திசையெங்கும் சென்று உலக மொழிகளில் (தமிழில் இல்லாத) உன்னதங்களை கண்டுபிடித்து தமிழில் சேர்க்கவைப்பதற்காக சொன்னது.
பழகு தமிழ் தவிர மற்றவை வழக்கொழிந்து போய்க்கொண்டிருப்பதை உணர்ந்ததால் என் கணிப்பு 'மற்ற மூன்று தமிழ் மாண்டாலும் பழகு தமிழ் மட்டுமாவது தப்பி, தழைத்தோங்கும்' என்பதே!
வர்ணபேதமற்ற உலகில் மூன்று தமிழ் மட்டுமே இருந்திருக்கவேண்டும். மக்களும் அவற்றையே 'பழகி'யிருக்கவேண்டும்.
என்று சிலருக்கு அது மறுக்கப்பட்டதோ அன்றே நாலாம் தமிழ் முளைத்திருக்கக்கூடும்...
எந்த மொழியுமே நாப்பழக்கம். எந்த வர்ணம் தன் உணர்வுகளை மொழி மூலம் அதிகமாக பழகுகிறதோ அந்த மொழியே ஊட்டமாய் வளரும். உணர்வுகளுக்கு வார்த்தை வடிவம் கொடுக்க முடிந்தால் மட்டுமே எந்த மொழியும் போற்றப்படும், பழகப்படும்.
இயல் இசை நாடகத்தமிழால் 'மெர்சல்' என்ற வார்த்தையை அடக்க இயலுமா? இதற்கு நாலாம் தமிழ் வேண்டியிருக்கிறதல்லவா!
ஆங்கிலம் உலகெங்கும் பேசப்படும் மொழியாக சொல்லப்பட்டாலும், கட்டுமரத்திற்கு புதிய சொல் புனையாமல் தமிழைத்தழுவி Catamaran செய்தது. நம் முண்டாசு மீசை விரும்பியதும் இதைத்தான் என்ற புரிதல் இல்லாமல் இன்றளவும் அடர்கந்தக அமிலம் சொல்லிக்கொடுத்து வேதியியல் மீது வெறுப்பூறவைக்கும் செயலைத்தான் மொழியார்வளர்கள் செய்துகொண்டே இருக்கின்றனர் (தமிழில் மட்டுமல்ல, ஏனைய இந்திய மொழிகளிலும்தான்). பதினொரு மொழிகள் பழகும் நாட்டில் இணைப்பு மொழியாய் ஆங்கிலம் வேண்டியிருப்பது இதனால்தான்.
கான்சன்ட்ரேட்டட் சல்ப்யூரிக் ஆசிட் என்றுதான் தமிழில் படித்துவிட்டுப்போகட்டுமே!
உயிரெழுத்து - 12 இன்றும் வழக்கிலுள்ளது.
ஆயுத எழுத்து?
மெய்யெழுத்து - 18 இன்றும் வழக்கிலுள்ளது.
உயிர்மெய்? ஙகர வரிசை 12, ஞகர வரிசை 12 - இந்த 24 இல் மிஞ்சிப்போனால் ஐந்தாறு மட்டுமே இன்று வழக்கிலுள்ளது. ஏனென்று சிந்திப்போமா?
கடல் என்று நாம் சுட்டும் நீள்பரப்புக்கு தமிழில் நான் இங்கு பதியும் சில பெயர்களில் எதையாவது உங்கள் வாழ்நாளில் கேட்டிருக்கிறீர்களா?
'அரலை, ஆலந்தை, ஈண்டுநீர், உவரி, ஓதவனம், கலி, கார்கோள், தொன்னீர்!'
தொன்னீர்!!!! என்ன ஒரு அருமையான சொல் தெரியுமா? உலகின் தொன்மையான நீர்நிலையை வேறு எப்படி சுருக்கமாக அழைப்பது!!!!
காற்றில் எத்தனை வகை உள்ளது என்று என்னிடம் யாரேனும் கேட்டால், தென்மேற்கு மற்றும் வடகிழக்கு திசை காற்று என்பேன். இதே கேள்வியை ஒரு கடலோடியிடம் (உணர்வு சொட்டும் இந்த தமிழ் சொல்லுக்கு ஆங்கிலத்தில் Seafarer என்ற சொல் உறவாக இருக்கலாம், மாற்றாக அல்ல! ஏனெனில் seafarer இல் அடங்கும் பொருள் சிறிது, கடலோடியில் அடங்கும் பொருள் பெரிது!) கேட்டால் என்ன சொன்னார் தெரியுமா?
'நேர்வாடைக்காத்து, நேர்சோளக்காத்து, நேர்கச்சான் காத்து, நேர்கொண்டல் காத்து, வாடைக்கச்சான் காத்து, வாடைக்கொண்டல் காத்து, சோளக்கச்சான் காத்து, சோளக்கொண்டைக்காத்து'!
இதே கேள்வியை ஒரு விவசாயியிடம் கேட்டால் அவர் இன்னுமொரு பட்டியல் தரக்கூடும். இதுதானே பழகுதமிழின் சிறப்பு!
பின்னொரு நாளில் என் மக்கள் ஒற்றைத்தமிழை பழகுவர். அது நாலாம் தமிழாய் மட்டுமே இருக்கும் (மற்ற மூன்றிலும் தப்பித்த சொற்களும் இதனுள் அடங்கும்)!
கருத்துகள்
கருத்துரையிடுக