அறம் பொருள் இன்பம்.
அன்பும் அறனும் உடைத்தாயின்...
அறவழி.
அறநெறி.
அறம்னா என்னங்க?
நீதி நேர்மை நியாயம் மட்டுமா அதையும் தாண்டியா?
அறம் செழிக்குமா? அது என்ன பயிரா?
'இந்தக்காலத்து பசங்க ரொம்ப கெட்டுப்போய்ட்டாங்க' என்பது எந்தக்காலத்திலும் சொல்லப்படும் ஒன்று.
நம் குழந்தைகள் தூரலில் நனைந்தால்கூட பொறுக்காது உடனே துண்டெடுத்து தலைதுவட்டும் நாம் அவர்கள் மனதைத்துவட்ட வேண்டாமா?
ஊடக வதை என்பது சமையல் பாத்திர நீரில் மிதக்கும் உயிருள்ள தவளை மாதிரி. நம்மைப்பிணைக்கும் குடும்ப சங்கிலி நாம் காண்பதையும் கேட்பதையும் சங்கிலிக்கண்ணிகளுக்கு கடத்தாமல் போகுமா?
நம்மில் எத்தனை பேர் யாரும் பார்க்காதிருக்கும்போதும் தவறுகள் செய்யாமலிருக்கிறோம்?
நியாயப்படுத்தும் போர்வையில் நாம் வைக்கும் விளக்கங்கள் நம் குழந்தைகளின் வேர்களையும் பாதிப்பதை நாம் ஏன் உணர மறுக்கிறோம்?
என்னுடன் வெளி நாட்டில் ஒரு மிகப்பெரிய நிறுவனத்தில் இரவுப்பணியில் இருந்த என் மதிப்பிற்குரியவர் ஒருவர் நள்ளிரவில் என்னை 'பொருட்கள் வைப்பு' அறைக்கு அழைத்தார்.
'எதற்கு இந்நேரத்தில்?' என்றேன்.
'அம்மா நாளை நாடு திரும்புகிறார்கள். அவர்களிடம் கொடுத்தனுப்ப எழுதுபொருட்கள் கொஞ்சமாய் எடுத்து வரலாம், வருகிறாயா?'
நெஞ்சம் கடுத்தது காட்டிய என் முகத்தை கவனித்துவிட்டு தன் பேச்சை தொடர்ந்தார்; 'இவனுங்க நம்ம உழைப்புக்கு நம் வாடிக்கையாளரிடம் நிறைய பெற்று நமக்கு குறைய தருகிறார்களல்லவா, அதற்கு நம்மாலான பழிவாங்கல்'.
அவர் கண்களில் குற்ற உணர்வு அறவே இல்லை...தனியே சென்று எழுதுபொருட்களை எடுத்துவந்தபின்னும்.
பின்னாளில் அவர் தான் வேலை செய்த பெரு நிறுவனத்திற்கு பலகோடி வருமானம் ஈட்டித்தந்ந ஒரு வாடிக்கையாள நிறுவனத்தின் கணக்குக்கு பொறுப்பாளரானார்...
அவர் செயல் தனி ஒருவரின் செயல் மட்டுமே என்றா எண்ணுகிறீர்கள்?
நம்மைப்பிரதிபலிக்கும் குழந்தைகளிடம் நாம் காணும் தவறுகளுக்கு தீர்வு நம்மிடமிருந்தல்லவா தொடங்கவேண்டும்?
வீட்டில் கைபேசியை கழட்டிவிட என்று ஒரு மிதியடி இருந்தால் நலம்.
அதனுடன் கூடவே 'நியாயப்படுத்துதலை' கழற்றி வைக்கவும் இன்னொரு மிதியடி...
Ethics and Morals எனப்படும் அறநெறியை நமக்கு பள்ளியில் கற்றுக்கொடுத்ததை நாம் என்ன செய்தோம்? வெற்றி என்றால் என்ன என்ற புரியாத புதிரை நோக்கிய வாழ்வின் தடமற்ற ஓட்டத்தில் நம் அறச்சேமிப்பை சிறுகத்தொலைத்தோம்.
இத்தகையதொரு (ethics and morals) பாடத்திட்டமே அறியாத நம் குழந்தைகள் அறிவரா நாம் தொலைத்தது என்னவென்று?
எங்கு இழந்தோமோ அந்த இடத்தில் தேடாமல் எங்கு நம்மால் இயலுமோ அங்கு தேடி என்ன பயன்?
அறம் என்பது வாய்மை போன்றதே. யாதொருவருக்கும் தீமையிலாத செயல்...
யாதொருவரில் சகல உயிரினங்களும் அடங்கும்.
நம்மால் இயலாததை நம் சந்ததியினர் மூலம் அடைய முயலும் நம் தீரா முயற்சிக்கு வெறும் வடிகாலாய் அல்லது முற்றுப்புள்ளியாய் அவர்கள் இருக்கப்போவதை நம் செயல்களே தீர்மானிக்கின்றன.
அறம் தேடி நம் நெடும்பயணத்தில் அவர்கள் 'அவர்களாகவே' இருந்தால் அறம் சூழும் அவர்களை, மகிழ்வுடன், நமக்கு முன்னே.
இறையாண்மையின் முதல் கன்னியான இறைக்கும் இதுவே பொருந்தும்.
*
சரி தவறென்ற விளிம்புகளின் நிழல்கூட விழாத நிலம் ஒன்று உண்டு. அந்தப்புல்வெளியில் ஆன்மா ஓய்வெடுக்கும்போது, பேசுவதற்குக்கூட இடமின்றி வார்த்தைகளால் நிரம்பி வழியும் உலகில், புதுமைச்சிந்தனைகள், மொழி, ஏன், நீ / நான் என்ற உருவகங்கள் கூட மதிப்பிழந்த அந்த வெளியில் நம்மோடு இணையக்காத்திருக்குது அறம்.
சந்திக்கத்தயாரா நாம்?
(* I twisted "Rumi" to suite my purpose :-)
கருத்துகள்
கருத்துரையிடுக