வானேகும் பறவைகளின் இறகுகள்வழி வழியும் நிலப்பரப்பை இரவும் பகலும் இடைப்பட்ட காலத்திலும் காற்று துடைத்துச்சென்றுகொண்டே இருந்தது பன்னெடுங்காலமாய். சுத்தமான பூமியில் வந்தன சென்றன அனைத்தும் விட்டுச்செல்லவில்லை தம் சுவடுகளெதையும்.
எங்கோ நடந்த பெரும்பிழையில் முளைத்துவந்த கூட்டமொன்று கிண்டிக்கிளறிக்கிழங்கெடுத்து உண்டு உறங்கி பல்கிப்பெருகி கைக்கெட்டிய தூரம் வரை களைத்துப்போட்டு களைப்பறியாது மேலும் மேலும் ஏனைய புவி வாழ் நல்லினங்களை ஒழித்து 'தாம்', 'தாம் மட்டுமே' புவிக்குப்போதும் என்று சுயமுழக்கமிட்டு எங்கெங்கும் அழிக்க இயலா எச்சங்களிட்டு இருப்பதையெல்லாம் சுரண்டுவதை அமைதியாய் வேடிக்கை பார்க்கிறது இயற்கை.
நமது நாட்கள், வருடங்கள், வாழ்நாட்கள் துகளினும் துகள் அதன் கணிப்பில். இயற்கையறியும் அதன் மாறா நியதி; 'எதுவும் கடந்து போகும்'!
நம் கால்கள் பட்டு காணாமல் போன உயிர்களனைத்தும் மீண்டு முளைக்கும், நாம் மட்டுமே இல்லாதிருப்போம். ஏனெனில் இயற்கை ஒருமுறை செய்த தவறை மறுமுறை செய்யா! (சந்தேகமுள்ளோர் டைனோசரை அறியார்!)
அது வரையில், தம் இனம் அழிய தலைமுறை தலைமுறையாய் தாமே கடுந்தவம் புரியும் இந்த புரியாத புதிரை மெல்லிய புன்னகையுடன் கடந்துபோகும் இயற்கை.
கருத்துகள்
கருத்துரையிடுக