அன்பையும் அறனையும் 'உடைத்த' இவ்வாழ்க்கையில் விளைந்தவரிடம் பண்பையும் பயனையும் தேடுபவன் ஏமாந்து போவான்.
யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று 3000 ஆண்டுகளுக்கு முன்னே உலகுக்கு உரக்கச்சொன்னவர்கள் இன்று 'யாவ'ரிலும் வேற்றுமை நோக்கி அனைத்து (மரியாதை / ஆணவ / அதிகார) கொலைகளையும் செய்து / கடந்து / மறந்துபோகின்றோம். நாலாம் தலைமுறையை வம்புக்கிழுத்த முண்டாசுக்காரனையும் ஓட ஓட விரட்டியிருப்போம் இன்று இருந்திருந்தால், இன்னொரு யானையிடம்.
அறம் செய்ய விரும்பாதவர் அன்றுமிருந்ததால்தானே அவ்வையும் அவ்வையானாள்! அவளின் துயரம் இன்றும் எம் எவ்வைக்கும் (தங்கைக்கும்) உண்டு.
நள்ளிரவில் என்று ஒரு பெண் அச்சமின்றி நடமாட முடிகிறதோ அன்றே நமக்கு உண்மையான சுதந்திரம் என்ற கிழவன்...பாவம்...அவனை விடுங்கள்...அவனது கிழக்கனவு நமக்குதவாது. நமக்கு பசியால் பகலில் சாலையில் மயங்கிய பேரிளம்பெண்ணை குடியன் வல்லுறவுகொள்வதை வெறுமனே வேடிக்கை பார்ப்பதற்கும், கந்துவட்டிக்கொடுமையில் நம் கேளிரை தீ தின்னுவதை தள்ளி நின்று படமெடுத்து மெய்நிகர் உலகில் பதிப்பதற்கும்தானே தேவை சுதந்திரம்...
தேடி(க்)கண்டதையும் நிதம் தின்போம், கூடிக்கொடுமைகள் பல ரசிப்போம், பகிர்வோம். நரைகூடிக்கிழப்பருவம்வரை நாம், நாம் மட்டுமே மகிழ்வுடன் வாழ்வோம் என இறுமாப்போடு சுற்றும் நம்மை அறம் சூழும், நம் உச்சி மீது வானிடிந்து வீழும். அதுவரையில் ஆடுவோமே பள்ளுப்பாடுவோமே ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோமென்று!
(Pic : Creative Commons)
கருத்துகள்
கருத்துரையிடுக