என் வீட்டு மகிள மரத்தில் அது அமர்ந்திருந்த்து. எத்தனை நாட்களாய் என்று எனக்கு தெரியவில்லை. அதற்கும்தானாம்.
நெடு நாட்களாய் நான் என் தோட்டத்து செடி, கொடி, மரங்களோடும் பறவைகளோடும் உரையாடுவதை அது கவனித்துவந்ததாகவும், அவர்கள் எல்லோரும் 'இவன் ஆபத்தற்றவன்' என்று உறுதி கூறியதால்தான் அது தன்னை வெளிப்படுத்திக்கொண்டதாகவும் சொன்னது. அந்தப்பேய் தன் நெடுங்கதையை பல தவணைகளில் சொன்னதன் சாரத்தை நான் உங்களோடு இதோ பகிர்ந்துகொள்கிறேன்.
அது ஒரு புளிய மரத்து ஆவி. பன்னெடுங்காலமாய் வாழ்வை அனுபவித்து வாழ்ந்த கூட்டமாம். சிறுகச்சிறுக அவர்களின் நிலப்பரப்பு குறைந்துகொண்டே போயிற்றாம். எப்போதென்று தெரியாத ஒரு பொழுதில் அவர்கள். என் ஊருக்கு வெளியே உள்ள ஒரு பெருவழித்தடத்து ஓரத்தில் வசிக்கத்துவங்கினராம். இதெல்லாம் அது செவிவழியாக அதன் உறவுகளிடமிருந்து அறிந்த கதையாம்.
அந்த வழித்தடங்களில் குதிரைகளும் மாடுகளும் இழுக்கும் வாகனங்கள் ஓடத்தொடங்கியபோது அதன் முன்னோர்கள் மகிழ்ந்தனராம், சாணம் மழையில் கரைந்து அவர்களை அடைந்ததும் உண்டான இனிய மாற்றங்களை கண்டபின்பு.
அமுதம் கிடைத்த மகிழ்ச்சியில் பன்னெடுங்காலம் திளைத்திருந்தார்களாம், அவ்வப்பாது அவர்களின் தாழ்ந்த கிளைகள் இடையூறென்று வெட்டப்பட்டபோதும் வருத்தமில்லையாம் (வெட்டியவர்கள. நல்லவரே என்று அன்றைய பறவைகள் சொல்லிற்றாம்). இதுவும் அந்தப்பேய்க்கு செவிவழி செய்தியாம்.
இவ்வாறு கடினமற்று வாழ்வு கடக்கையில் இன்னொரு பொழுதில் பெருவிசை கொண்ட வாகனங்கள் குதிரைகள் / காளைகள் இல்லாமலே ஓடத்தொடங்கிற்றாம்...
அதுவரையில் அமைதியாக இருந்த வழித்தடங்களும் அவசர இறைச்சல் தாங்க இயலாமல் முனக ஆரம்பித்தனவாம். காற்று பழுதாகி கொஞ்சம் கொஞ்சமாய் மூச்சடைக்க ஆரம்பித்ததாம், விலங்கு வழி அமுதமும் கிடைக்காமல் அந்தப்பெருங்கூட்டமே அவதிப்பட்டதாம். பறவைகள் வழி பல திசைகளிலிருந்தும் இத்தகைய சேதிகளே வந்தவண்ணம் இருந்ததாம்.
(மேற்கொண்டு 'அது'வே உங்களுக்கு கதை சொல்ல விருப்பம் தெரிவித்ததால் நான் பின்னால் நகர்கிறேன். இனி நீங்களும் பேயும்!)
"
இறைச்சலும் நெடியும் தாங்காது எங்களுடன் வாழ்ந்துவந்த பறவைகளுக்கு பயித்தியம் பிடித்து அலைய ஆரம்பித்தனவாம். பிறகு வந்த பறவைகள் சுமந்து வந்ததெல்லாம் துர்மரணச்செய்திகளாம். எங்கள் இனத்தவர் அநேகர் 'வழித்தட விபத்தில்' இறந்தனராம். நம்பலாமா வேண்டாமா என்ற கவலையுடன் நாங்கள் பெருகியோடு்ம் பெருவிசை வாகனங்களை வேடிக்கை பார்ப்பதைத்தவிர வேறொன்றும் செய்ய இயலாதிருந்தோமாம். சில காலம் கழித்து அந்த பறவையினங்களும் செத்து விழுந்ததாய் மிச்சமிருந்த பறவைகள் சொல்லிச்சென்றனவாம்.
இத்தகைய சூழலில் பிறந்த நானும் அவ்வாகனங்களை அச்சத்துடன் பார்க்க சிறுவயதிலேயே கற்றுக்கொண்டேன். என்ன கற்று என்ன பயன், பெரிய கரங்கள் முளைத்த ஒரு பெருவிசை வாகனம் நான் சற்றே அசந்திருந்த நேரத்தில் என்னை முட்டித்தள்ளியதுதான் எனது கடைசி நினைவு.
பேயாய் கண்விழித்த நான் வாழ்ந்த இடம்தேடி ஓடினால் அங்கு என் சுற்றமிருந்த சுவடே இன்றி இன்னும் பெரியதாய் வழித்தடம்...
என் இறை யார்? எங்கிருப்பார்? என்றறிந்தால் அடுத்தது என்ன என்று கேட்க எண்ணி அலைய ஆரம்பித்தேன். பிறகுதான் தெரிந்தது எம்மொழி தெரிந்தவர் இங்கு யாருமில்லை என்று.
பறந்தேன் பறந்தேன் ஆற்றலிருக்கும் வரை பறந்தேன். களைத்தபோது கீழ்நோக்கினேன். அங்கங்கு எம்மினம் இன்னும் இருப்பதும் சில இடங்களில் வழித்தட, பெருவிசை வாகன ஆபத்துகள் இல்லாத இடங்களில், அவர்கள் எஞ்சி வாழ்வதையும் கண்டேன். அந்த இடங்களும் வேகமாய் அழியக்கண்டேன். பெருங்கேள்வியுடன் ஓரிடம் இறங்கினேன். அங்குள்ள ஒரு பெயர்ப்பலகை 'இது ஒரு காடு' என்றும், அத்துமீறி நுழைவோரை யாரோ தண்டிப்பர் என்று அறிவித்திருந்தது கண்டேன் (வழித்தட ஓர இல்லத்தில் அவ்வப்போது உணவையும் நிழலையும் யாசித்தமர்ந்த சில மனிதர்களிடமிருந்து என்றோ கற்ற வேற்று மொழி இன்று உதவிற்று). என்ன செய்யலாம் என்று எண்ணுவதற்குள் என் இனத்தவர் சிலரை சில மனிதர்கள் வெட்டி வீழ்த்தியது கண்டு அஞ்சி அவ்விடம் நீங்கினேன்.
என் இனத்தவர் அதிகமிருந்த மற்றொரு இடத்தில் மனிதர்கள் கூட்டம் கூட்டமாய் பெருவிசை வாகனங்கள் இன்றி சுற்றிச்சுற்றி நடப்பது கண்டு அங்கு சென்று என் பெருங்கேள்விக்கு விடை காண எண்ணி இறங்கினேன்.
என்ன முயன்றும் அம்மனிதர்கள் தம்மைத்தாண்டி என்னைக்கவனிக்க விருப்பமற்றவராயிருப்பது கண்டு நொந்து மீண்டும் பறக்க ஆரம்பித்தேன். பலகாலம் கழிந்தபின் இன்னொரு சிற்றிடத்தில் எம்மினத்தவரும் எனக்குத்தெரிந்த பறவைகளும் சிறு விலங்குகளும் மகிழ்வோடு சுற்றிக்கொண்டிருப்பதைக்கண்டு (அங்கு மனிதர்கள் இருந்தபோதும்) வியந்தேன்.
அந்தச்சிற்றிடத்திலிருந்து சற்றே உயரப்பறந்த என் பழைய நட்பொன்று என்னை இனங்கண்டு கொண்டது. அதனிடம் கேட்டபோதுதான் அங்கு என் இனத்தவரையும் என் சுற்றத்தையும் நேசிக்கும் மனிதன் ஒருவன் இருக்கிறான் எனவும் அதனால்தான் அவர்கள் அனைவரும் மகிழ்வோடிருக்கிறார்கள் எனவும் அறிந்தேன். அவன் அவர்களுடன் நட்பாய் பேசுவதையும் சிலகாலம் கவனித்தேன். அவனுக்கு எம்மொழி தெரியும் என்பதனாலும் நேசம் மிகுந்தவனாய் இருக்கிறான் என்பதனாலும் அவன் கண்களுக்குத் தெரியுமாறு காட்சியளித்தேன். அவனிடம் என் கேள்விகளைக்கேட்டு விடைகளுக்காக காத்திருக்கிறேன்... நீயாவது சொல்லேன், என் பயணத்தின் தொடர்ச்சி அறிய. என் கடவுள் யார்? எங்கிருக்கிறார்? அவரை எப்படி சந்திப்பது?
"
அந்தப்பேயின் மொழி தெரிந்தால்மட்டும் போதுமா என்ன விடை கூற!
பின் குறிப்பு : இப்பேய்க்கதை பிடிக்காதோர் அது வாழ்ந்த காலத்தில் அதனுடன் உரையாடிய யாரோ சுந்தர ராமசாமி என்றொரு மனிதன் அது சொன்ன வாழ்வின் சேதிகளாய் பதிந்து வைத்திருந்த புத்தகமொன்று கிடைத்தால் படிக்கலாம்!
கருத்துகள்
கருத்துரையிடுக