70 ஆண்டுகால அற்புத சுதந்திரத்தின் மகிமையால் நாட்டில் நம் தொல்லைகளை எல்லாம் வென்று உலகம் வியக்கும் ஒரு பெருவாழ்வு நோக்கி நடக்கிறோம்!
'இல்லைங்க, இன்னும் இல்லை...:
'ஏன்? என்ன ஆச்சு? எது தப்பாச்சு?'
விடைக்கான தேடலை 'ஏன் நமக்கு சுதந்திரம் தேவையாச்சு?' என்ற கேள்வியிலிருந்நு தொடங்குவோம்.
வணிகத்தின் போர்வையில் நம் அனுமதியுடன் உள் நுழைந்து மொழி, இன, பண்பாட்டு இத்தியாதிகளால் தனித்து இருந்த பல்வேறு மக்களை தம் ஆட்சியின் கீழ் அடக்கிய ஒரு வல்லரசை ஒருமனதாக எதிர்த்து வெளியேற்ற முதன்முறையாக ஒன்றிணைந்தோம் நாம்.
அவ்வல்லரசை எதிர்த்து பல்வேறு மொழிகளில் நாம் எழுப்பிய ஒற்றை முழக்கம் 'எங்கள் இன்னல்களை நாங்களே களைந்துகொள்வோம்; வெள்ளையனே வெளியேறு'.
இருநூறு ஆண்டுகள், பல்வேறு விதமான எண்ணற்ற போராட்டங்கள்...கடும் போராட்டங்கள்...அசைக்கமுடியவில்லை ஆண்டவர்களை, அந்த அரையாடை உடுத்த, கோலூன்றி நடந்த, உடல் நலிந்த வயோதிகர் எதிர்காலத்தில் நமக்கு சுதந்திரம் கிடைப்பதற்காக அன்று 'அந்த' விதையை ஊன்றும்வரை.
அவர் நடந்ததென்னவோ வெறும் 390 கிலோமீட்டர்தான், அதுவே போதுமானதாக இருந்த்து அந்த வல்லரசை முன்னெப்போதுமில்லாத அளவுக்கு அச்சப்படுத்தி 8000 கி.மீ தள்ளியிருந்த தன் நாடு நோக்கி ஓடவைக்க. 17 ஆண்டுகள் ஆயிற்று அந்த அச்சம் நம் சுதந்திரமாக உருப்பெற; 1947 நிகழ்ந்தது.
அப்பேரரசை மண்டியிட வைக்க அவர் அப்படி என்ன உலகழிக்கும் வல்லாயுதங்களை பயன்படுத்தினார்?
அவர் கையிலெடுத்த ஆயுதம். உ ப் பு.
நம் மக்கள் தலைமுறை தலைமுறையாக உப்பங்கழிகளில் கடல் நீரை கதிரவன் துணையோடு காய்ச்சி எடுத்த உப்புக்கு பேரரசு வரியிட்டு, கட்டாதவரை சிறையிலிட்டு துன்புறுத்தியது மிகத்தவறென்று அவர் உள்ளுணர்வு சொன்னது்.
அவர் உள்ளுணர்வை மிக மதித்தவர்...யாருக்கும் வேண்டுதல் விண்ணப்பங்கள் எழுதவில்லை, அரசுக்கு எதிராக யாரையும் தூண்டவில்லை. பேரணிகள் எதுவும் திரட்டவில்லை...ஒரு நாள் காலை, ஆயுதங்களின்றி (கைத்தடி ஆயுதமில்லை அவருக்கு!) நடக்கத்தொடங்கினார் அருகிலுள்ள கடற்கரை நோக்கி.
அவரது ஆசிரமத்தில் தங்கியிருந்த 78 பேர் பின் நடந்தனர், மரியாதையினால். 24 நாட்கள் நீண்ட அந்த நடைப்பயணத்தின் முடிவில் கிழவர் குனிந்து ஒரு கைப்பிடி அள்ளினார் உப்பை, எந்த வரியும் கட்டாமல்!
இந்தக்கைப்பிடி உப்பில்தான் நம் சுதந்திரம் ஆலாய் தழைக்க உதவிய விதை 'முளைத்தது'.
பல தலைமுறைகள் (250 ஆண்டுகள்) கோட்டை கட்டி ஆண்ட ஒரு வல்லரசை தன் வாழ்நாளிலேயே, அதுவும் மூன்றே கிழமைகளில் ஒரு கைப்பிடி உப்பின்மூலம் தூக்கியெறிய அவரால் முடிந்தது; அற்புதம் நிகழ்ந்தது.
'நாமே சரி செய்வோம்' என்று முழங்கிய சுதந்திர நாட்டை பெற்றுத்தந்த அப்படி என்ன அற்புதம் அவர் செய்தார்? அவர் விரும்பிய மாற்றத்தை நிகழ்த்த அவர் வேறு யாரையும் எதிர்பார்க்கவில்லை...he became the change!
மகத்தான அந்த சுதந்திரத்தின் சுவை 'எமை இனி வெல்ல எவருமில்லை!' என்று அவர் வழி வந்த நம் தலைமுறைகளை இருமாந்திருக்கச்செய்நிருக்கவேண்டும் அல்லவா?
130 கோடிப்பேர் ஆர்ப்பரிக்கும் நம் "சுதந்திர" நாடு இன்று எப்படி இருக்கிறது?
பெண்களுக்கு, குழந்தைகளுக்கு, முதியோர்க்கு பாதுகாப்பில்லை. எஞ்சிய ஆரோக்யவான்களோ தவறான வாழ்வியல் தெறிவுகளாலும், 24*7 அவர்களைச் சுற்றும் பேராசைப்பெருவணிகத்தினாலும் கூடியவிரைவில் நோயாளிகளாவது திண்ணம்.
கல்வியைக்கெடுத்தாச்சு, காற்றை, ஆற்றை, நிலத்தை, கடலையும் கெடுத்தாச்சு. நம் பெருநுகர்வின் எச்சங்கள் கடல்களெங்கும் கழிவுகளாய். கழிவைத்தின்னும் பல்லினங்களும் நம்மீது துப்பும் எச்சம் புற்றாய்ப்பெருகும்.
நமக்கு தளைகளிட்டு 250 ஆண்டுகள் ஆண்ட அடக்குமுறையை விடவா இந்தத்தடைகள் பெரிது?
என்னதான் தப்பாச்சு? எங்கு?
வல்லரசு நம் கடலைத்தாண்டுமுன்னே நம் ஒற்றுமை காணாமல் போயிற்று.
அடுத்ததாக, நம் 250 ஆண்டுகால கனவை, நம் தலைமுறைகளைப்பலிகொடுத்து கட்டிக்காத்த 'எம் தொல்லைகளை நாமே களைவோம்' என்ற நம்பிக்கையை மறந்தோம்.
ஒற்றைக்கோலூன்றி நம்பிக்கையை உப்பில் விதைத்த, நம் வரலாற்றையையும் புவியியலையும் மீட்ட அந்த எளிய மனிதனையும் அவனது 'Be the change' என்ற மந்திரத்தையும் மறந்தோம்!
'இதுவும் கடந்து போகும்' என்று புத்தன் சொன்னதையும் தவறாகப்புரிந்துகொண்டு 'நம் கண்களையும் காதுகளையும் மூடிக்கொண்டால் எதுவும் கடந்துபோகும், எல்லாம் தானே சரியாகும்' என்ற மயக்கத்தில் உழலுகிறோம்.
நாம் விரும்பும் மாற்றத்தை நாமே செய்வோம் என்ற எண்ணத்துணிவு இன்றி, மாற்றம் நிகழ்த்த யாரோ வருவார் என எல்லோரும் எண்ணி இந்த நாட்டை சிதைத்துக்கொண்டுள்ளோம், ஆண்டுதோறும் ஆர்ப்பாட்டமாய் சுதந்திரதினம் மட்டும் கொண்டாடிக்கொண்டு.
நாம் ஒவ்வொருவரும் மாற்றத்தின் கருவியாக மாறி, இதுவும் கடந்துபோகும் என்ற நம்பிக்கையுடன் களமிறங்கினால் மட்டுமே அனைத்துயிர்களுடனான நல்லிணக்கத்தோடு கூடிய சுதந்திரத்தை நம் சிந்தனை, செயல், பின்னோக்கல் (reflection) ஆகியவற்றில் உணரமுடியும்.
இன்று ஒரு உறுதிமொழி எடுப்போம்; 'என்னைச்சுற்றி என்ன தவறு நடந்தாலும், செய்வது எவராயினும், என்ன இடர் வரினும், சரி செய்ய என்னால் இயன்றதைச்செய்வேன்'. அவ்வாறே வாழ்வோம்.
இதை நாம் கடைப்பிடித்தால் நம்மைப்பிணைத்த அத்தனை தளைகளையும் நம் கூட்டு மனவலிமையாலும் தனிமனித செயல்களாலும் உடைத்தெறிந்து ஒவ்வொரு நாளும் சுதந்திர தினத்தை அனுபவிக்கலாம்!
இதுவே உண்மையான, நிலையான சுதந்திரம்.
I do believe in the triumph of (individual) human spirit.
I AM a change agent. What about you?
கருத்துகள்
கருத்துரையிடுக