ஒரு சிறுவனின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற மெர்சலுக்கு அழைத்துச்சென்றேன்...
படம் ஆரம்பித்ததில் இருந்தே willing state of disbelief க்கு என்ன முயற்சி செய்தாலும் முடியவில்லை.
ஒரு கதைநாயகன், நிஜ நாயகனாக எக்கச்சக்கமாக முயற்சி செய்திருக்கிறார், சினிமாவில்...
சீடன் குருவுக்கு வணக்கம் செலுத்த படத்தில் சில காட்சிகளை ஒதுக்கியிருந்தால் மகிழலாம், மொத்தப்படத்தையுமா அட்லீ?!
மாயாஜாலம் என்கிற கண்கட்டி வித்தையை கருவாகக்கொண்ட ஒரு படத்தில் ஒரே ஒரு 'ஆகா' விநாடியாவது (that vow moment) வருமா என்ற எதிர்பார்ப்பு நிகழவே இல்லை, க்ரிஸ்டோபர் நோலனை அட்லி அவ்வப்போது சீண்டினாலும்!
சமீபத்தில் ட்ரென்டிங்கில் இருக்கும் ஏராளமான நிகழ்வுகளுடன், எலக்ட்ரானிக் கைதட்டல்களும் விசில்களும் நிரம்பி வழிய, ஏ ஆர் ரகுமானின் 'இவன் தலைவன்!' என்கிற ரீதியிலான இசை முயற்சி...அசைக்கவில்லை.
தமிழன் உலகம் எல்லாம் ஆளப்போகிறான், வேட்டிதான் கெத்து என்று அந்நியருக்கும் அயலூருக்கும் பாடம் புகட்டுதல், மதுரை, வாடிவாசல், எம் ஜி ஆர், பாரீஸ், மேஜிக், மருத்துவ கொள்ளை என்று தளபதி இறங்கி அடிக்க முயன்றாலும் மனதில் நிற்பது ஜல்லிக்கட்டுக்காளைபோல துள்ளி வரும் மதுரைக்காரர் மட்டுமே.
U/A முத்திரை...படத்தில் வரும் வன்முறைக்காட்சிகளும் திருப்புமுனைக்காட்சிகளும் (மேலும் வன்முறை! Shock value வுக்காக) பதின்பருவத்தினரையும் கண்டிப்பாக பாதிக்கும்.
வன்முறையை நம் மீது திணிக்கும் அளவுகோலுக்கும் இத்தகைய முத்திரைகளுக்கும் தொடர்பே இல்லை...
அரசியல் உணர்வு, ஏதாவது நல்லது செய்யும் ஆவல் இவைகளையும் திரைக்கதையையும் சேர்த்துக்குழப்பாமல், தனித்தனியே நம் நாயகர்கள் எப்போது கையாள கற்றுக்கொள்ளப்போகிறார்கள் என்று தெரியவில்லை.
திரைப்படம் பல மனிதர்களின் வாழ்வாதாரம் என்பதால் கதைக்கு மட்டுமே அதில் இடம் கொடுத்து அரசியல் எண்ணங்களை ஏனைய ஊடகங்கள் வாயிலாகவும், நேரடியாக களமிறங்கியும் செயல்படுத்தலாமே ப்ரோ! உங்களின் முஷ்டி மடக்கல்களினாலும் பஞ்ச் வசனங்களாலும் சூடாகும் சிலர் உங்களின் வணிக கரங்களை முறுக்கினால் பாதிப்பென்னவோ சினிமா உருவாக உழைப்பவர்களுக்குமட்டுமே ப்ரோ...
ரசிகர்களின் எதிர்பார்ப்புக்காகவும் ஈர்ப்புக்காகவும் மட்டுமே நாம் படமெடுக்கும்வரை Color of Paradise போன்ற நல்ல படங்கள் தமிழில் வர வாய்ப்பில்லை...ஜோக்கர் போன்ற படங்கள் விதிவிலக்கு...
ராகுல் காந்தியும் உங்களுக்காக களமிறங்கியிருக்கிறார் ப்ரோ. நீங்கள் எதிர்நோக்கும் பொருளாதார வெற்றியை அவரும் உறுதிப்படுத்துவார்!
ஆனாலும் கட்டப்பாவை 'கொன்னுட்டீங்களே' ப்ரோ!!
சிறுவன் மகிழ்ச்சியோடு திரும்பினாலும் எனக்கு படம் முடிந்து வீட்டுக்கு வந்ததும் முதல் வேளையாக நோலனின் Prestige படத்திலிருந்து சில காட்சிகளை மீண்டும் பார்த்தபின்தான் மனம் அமைதியாயிற்று!
கருத்துகள்
கருத்துரையிடுக