தாவர செல்கள் தமக்கு வேண்டிய உணவை தாமே உற்பத்தி செய்து பெருகும்.
விலங்கின் செல்கள் தமக்கு வேண்டிய உணவை தாமே உற்பத்தி செய்ய இயலாதவை. உணவுக்கு தாவரங்களையே சார்ந்திருக்கவேண்டிய படைப்பு...(இங்கு விலங்கு என்பது நிற்பது, நடப்பது, பறப்பது அனைத்தையும் அடக்கிய சொல்).
இந்த இரண்டுக்குமே உயிர்வாழ அடிப்படைத்தேவை நீர்.
தாவரங்களுக்கு நீர் கிட்டவில்லையென்றால் இறந்துபோகும்.
விலங்கிற்கு நீர் கிட்டவில்லையென்றால் தேடிப்போகும், தொலைவு ஒரு பொருட்டல்ல.
இடம்பெயர இயலா தாவரங்கள் உணவின் வழியே (விலங்குகளுக்கு உணவாகி விலங்கின் எச்சம் வழியே) நீர்நிலை நோக்கி நகரும். அதன் சந்ததி நீளும்.
சாகாகாரமும் (vegetarianism) சகலகாரமும் (non vegetarianism) தேவையினால் உண்டாகி, விருப்பத்தினால் மாறி பின்பு தேவைக்கும் விருப்பத்திற்கும் இடையில் ஊடாடிக்கொண்டிருக்கிறது.
இந்த பழைய ஏற்பாட்டின்படி விலங்குகளுக்கு உணவளித்த தாவரங்கள், விலங்கு வழி பரவிப்பெருக தாவரங்களும் விலங்குகளும் ஒன்றோடொன்று ஒத்திசைந்து வாழ்ந்தன.
என்றேனும் தாவரங்கள் கிடைக்காவிட்டால் பசி தாளாது மிருகங்கள் சக மிருகங்களை உண்ண ஆரம்பித்திருக்கலாம். தாவரங்கள் மீண்டும் வளர்ந்தபின்னும் இது தொடர்ந்திருக்கலாம். தேவையை ஒட்டி இல்லாது விருப்பத்தை ஒட்டிய' இந்த புதிய ஏற்பாடு எப்போது தொடங்கியதோ, யார் அறிவார்? அதை அறிவது அவசியமில்லை என்றே தோன்றுகிறது.
விருப்பத்திற்கும் ஒரு எல்லை உண்டு, கடைசி விலங்கின் அழிவுதான் சகலகாரிகளுக்கு அந்த எல்லை. தாவரங்களுக்கும் அதுவே, I.e., விலங்குகள் உண்ணாத தாவரங்கள், தழைத்தோங்க / பல்கிப்பெருக வாய்ப்புகள் குறைவு (காற்றும் நீரும் அவ்வப்போது மட்டுமே உதவும், எப்போதுமல்ல). கடைசித்தாவரமும் ஒழிய நேர்ந்தால் என்ன ஆகும்? யாருக்குத்தெரியும்?!
"அவரவர் உணவுப்பழக்கம் அவரவர் விருப்பப்படி".
"இல்லை, சாகாகாரம்தான் சிறந்தது."
"இல்லை இல்லை, சகலகாரம்தான் சிறந்தது"
என்று கொடி பிடிப்போர், முழக்கமிடுவோர்... தேவைக்கும் விருப்பத்திற்கும் உள்ள வேறுபாட்டை அறிந்தே இருக்கிறார்கள்.
அவர்கள் விரும்பி முழக்கமிடுவதாய் தோன்றினாலும், 'தேவை'க்காகவே முழங்குகிறார்கள்.
பிறக்கும்போதே உணவுப்பழக்கம் வரையறுக்கப்பட்டுவிடுகிறது என எண்ணிக்கொண்டிருக்கிறோம்...
லிட்டில் டைக் (little tyke) எனப்பெயரிடப்பட்ட ஒரு சிங்கம் அமெரிக்காவில் 1940-1950 களில் வாழ்ந்த ஒரு சாகாகாரி!(Vegetarian!). அதனை வளர்த்த தம்பதியினர் எவ்வளவோ முயன்றும் டைக்கை மாமிசம் உண்ணவைக்க முடியவில்லை. வல்லுநர்களின் அறிவுரைப்படி என்னென்னமோ முயன்றும் பயனில்லை (பாலில் ஒரே ஒரு சொட்டு இரத்தம் கலந்து கொடுத்தால்கூட டைக் பால் அருந்துவதையே தவிர்த்துவிடுமாம்). பச்சை தானியங்களில் செய்த கூழோடு காய்கறிகளை விரும்பி உண்டு நிகுநிகுவென்று வளர்ந்திருந்த டைக்கை கண்ட ஒரு விலங்கியல் நிபுணர் சொன்னது "அதிசயம் ஆனால் உண்மை. என் வாழ்நாளில் டைக் போன்ற ஆரோக்கியமான சிங்கத்தை நான் கண்டதே இல்லை!'. இதுபோல வரலாற்றுப்பதிவுகள் ஏராளம்.
பசித்த புலி புல்லும் தின்னும், விருப்பு வெறுப்புக்கு நேரமற்ற கொடும் பசி அதை துரத்துகையில். அந்த நிலை வரும் வரையில் 'கொம்பு முளைத்த' (மனித) விலங்குகள் வாக்குவாதம் நிகழ்திக்கொண்டேதான் இருக்கும்.
தாவரங்கள் இல்லாத உலகு ஆதியில் இருந்ததாம். அந்த உலகில் விலங்குகளே இல்லையாம்! குறிப்பாக மனிதர்களே இல்லையாம்!
கல்தோன்றி மண்தோன்றாக்காலத்தே முன்தோன்றி மூத்த குடிக்கும் முன்னோராம் இத்தாவரங்கள். நம் முன்னோர்க்கு நேர்த்திக்கடன் செய்கையில், குல தெய்வங்களை வேண்டுகையில், இந்த முன்னோரையும் மனதில் கொள்வோமா?
கருத்துகள்
கருத்துரையிடுக