திருத்தலம்தோறும் மரங்கள் வைத்து அவற்றைச்சுற்றி கடவுள்களை எட்டுத்திசையும் நிற்கவைத்து, அமரவைத்து, படுக்கவைத்து, அக்கடவுள்களுக்கு வாகனங்களும் ஆயுதங்களும் தந்து, கடவுளிடம் வேண்டினால் பலிக்கும் என்ற எண்ணம் விதைத்து...இதையும் தாண்டி மரங்களை அணுகுவோரிடம் அவற்றை இறைத்தூதாய் காட்டி, நாம் கட்டிய ஒவ்வொரு கயிறிலும் உள்ள வேண்டுதலை மரம் சேர்க்கும் கடவுளிடம் என்று நெறிப்படுத்தி...இன்றளவும் கோவில்களில் களவாடப்படுவது கடவுள்கள் மட்டுமே, மரங்களல்ல! அப்பப்பா, மரங்களை மனிதர்களிடமிருந்து காக்க என்னவெல்லாம் செய்யவேண்டியதாயிற்று!
பூமியில் எத்தனை வகை மரங்கள் உள்ளதோ அத்தனை வகை சாமிகளும் இருக்கும் என்றே எண்ணத்தோன்றுகிறது.
அத்தனை சாமிகளையும் தூக்கி வளர்க்கும், சாமிகளை "வளர்ப்பதற்காய்' சிதைந்தபின்னும் அம்மரங்கள்.
அத்தனை சாமிகளையும் தூக்கி வளர்க்கும், சாமிகளை "வளர்ப்பதற்காய்' சிதைந்தபின்னும் அம்மரங்கள்.
மர வகைகள் அதிகமில்லா பகுதிகளில் கடவுள் வகைகளும் குறைவே, உலகம் முழுதும்.
முல்லைக்கு மரத்தேர் தந்தவன் வழித்தோன்றிய சிலர் வேருக்கு இடரின்றி இல்லங்களை மாற்றியமைத்ததும் இங்கு நடந்ததுண்டு...
கடவுளரின் இல்லம் நம் கவனிப்பின்றி பாழடைந்து போனால், அங்கிருக்கும் மரங்களே காக்கும் அவர்களையும்!
இன்று ஊருக்கு ஊர் கோவில் கட்டி அதில் மரங்களுக்கு இடமின்றி தரையெங்கும் தளமிட்டு குடமுழுக்கு செய்த மக்கள் மறந்தாலும் மறக்காமல் காத்திருத்து பறவைகள் துணையுடனே என்றாவதொருநாள் (கோவில்) விமானத்தில் இறங்கும் ஆல் அரச வேர்கள்.
கொல்லும் தொழிலை அரசனும் கடவுளும் அன்றோ நின்றோ செய்யட்டும், என்றும் நம்மைக்காக்கும் தொழிலை மரங்கள் செய்யும்; அவை அழித்தலறியா.
பூசலார் மனதில் கட்டிய கோவிலிலும் மரம் இருந்திருக்கும். இல்லாவிடில் இறை அங்கு சென்று அமர்ந்திருக்குமா என்ன?!
கருத்துகள்
கருத்துரையிடுக