மாஞ்சி அழுது ஓய்ந்திருந்தான்.
இளம் மனைவி, திடீர் உடல்நலக்குறைவு. கிராம வைத்தியர் 'டவுன் ஆசுபத்திரிக்கு உடனே கொண்டு போ'கச்சொன்னார்.
டவுனுக்கு ஒரே சாலை, மலையைச்சுற்றிச்செல்லும் 50 மைல், 5 மணிநேர அவசர ஜீப் பயணம்,
காப்பாற்றமுடியவில்லை அவளை.
அழுது ஓய்ந்தபின் 'இந்தக்கொடுமை யாருக்கும் வரக்கூடாது' என்ற வெறியோடு நடையாய் நடந்தான் அரசு அலுவலகங்களுக்கு, 'மலையை குடைந்து சாலை அமைத்தால் 15 ஏ மைலில் அதே டவுன்'.
கடிதப்போர், தேய்ந்த நடை எதற்கும் பலனில்லை.
ஒரு நாள் காலை கடப்பாறை, மண்வெட்டியோடு நடந்தான். உடைக்க ஆரம்பித்தான் மலையை.
'மாஞ்சிக்கு பயித்தியம் பிடிச்சிடுச்சி' என்று ஊரார் கைகொட்டி சிரித்துவிட்டு அவரவர் வேலைக்கு திரும்பியாச்சி.
ஒரு நாளுக்கு 10 மணி நேரம்.
365 நாட்கள்.
22 வருடங்கள்.
மலையின் மறுபுறம் கடைசிக்கல் உடைந்தது.
5 மணி நேரப்பயணத்தை முக்கால் மணிநேரமாக சுருக்க மாஞ்சிக்கு ஆச்சி இத்தனை நாட்கள்.
ஊடகங்கள் தேடி வந்தன,
புகழ் வெளிச்சமும் கூடவே.
அரசும் விழித்துக்கொண்டு கவுரவித்தது.
மாஞ்சி இன்று இல்லை.
உடைக்கவேண்டிய மலைகள் என்னவோ இன்றும் நம்மைச்சுற்றி ஏராளமாய்.
அம்மாஞ்சியாய் வேடிக்கை பார்த்து வாழ்வைக்கழிப்பதா அல்லது மாஞ்சியாய் மாறி மலைகளைக்குடைவதா என்பதை முடிவு செய்யும் முழு சுதந்திரம் நம் ஒவ்வொருவருக்கும் இன்னும் இருக்கிறது.
இந்த எண்ணத்துடன் வரும்நாட்களை எதிர்கொள்ளுங்கள் நண்பர்களே.
நல்லதோர் வீணை நானிலம் பயனுற இசைக்கட்டுமே!
கருத்துகள்
கருத்துரையிடுக