கடந்த இரு ஆண்டுகளாகவே நல்ல மழையில்லை. இந்தியா முழுவதுமே விவசாயம் காய்ந்து போயிற்று. நீர் வசதி இருந்த நிலங்களில் மட்டும் விவசாயிகள் முந்தைய ஆண்டுகளில் தமக்கு லாபம் ஈட்டித்தந்த பணப்பயிர்களை மட்டுமே விதைத்தனர்...
தக்காளி, மிளகாய், வெங்காயம், திராட்சை...
நிறைய விவசாயிகள் இவற்றை விளைவித்ததால் விளைச்சலும் மிக அதிகமாகவே இருந்தது.
தக்காளி, மிளகாய், வெங்காயம், திராட்சை...
நிறைய விவசாயிகள் இவற்றை விளைவித்ததால் விளைச்சலும் மிக அதிகமாகவே இருந்தது.
அதனால் இவற்றின் விலை தாறுமாறாக விழுந்தது!
நாடெங்குமுள்ள மண்டிகளிலும் கொள்முதல் நிலையங்களிலும் போராட்டங்கள் வெடித்தன.
சுண்டைக்காய் கால் பணம் சுமை கூலி முக்கால் பணம் என்ற நிலையால் அவர்கள் அறுவடை செய்யாமலோ அல்லது அறுவடை செய்தவற்றை சாலையோரங்களில் கொட்டியோ நொந்துபோயினர்.
வறட்சி வருடங்களில் மட்டுமல்ல, நல்மழை வருடங்களிலும் இது நிகழும்! 2015 சென்னைப்புயலின்போது தேனி விவசாயிகள் வாழைக்குலைகளை ஒரு சீப்பு (12-18 பழங்கள்) ஐந்து ரூபாய் என விற்க ஆரம்பித்து அதுவும் முடியாமல் தம் தோட்டங்களில் மக்களை இலவசமாக பறித்துச்செல்ல அழைக்கவேண்டியதாயிற்று (அறுவடைக்கூலி மிச்சம்). (தேனி விவசாயிகளின் வாழைத்தார்களுக்கு சென்னைதான் மிகப்பெரிய சந்தை).
ஒற்றைப்பயிர் விவசாயத்தினால் எழுந்த சிக்கல் இது.
1700 களில் துலிப் மலர்களுக்கு திடீரென எழுந்த பேரார்வ அலை (mania) போன்று (ஒரு மலர் ஒரு லட்ச ரூபாய்!) இப்போது 'சாம்பல்' மீது ஒரு அதீத ஆர்வ அலை அடித்தால் என்ன செய்வோம்?
'சுலபமாக பணம் சம்பாதிக்க அருமையான வாய்ப்பு!' என்று துள்ளிக்குதித்து...கண்ணில் பட்டது அனைத்தையும் எரித்துச்சாம்பலாக்கி பதுக்கிவைப்போமா?!
பேராசையினால் உந்தித்தள்ளப்பட்டு இதுபோன்ற செயல்களை நாம் செய்வது என்னமோ பல நூறு ஆண்டுகளாக மாற்றமின்றி பழகிப்போனதுதானே...
1980களில்கூட விவசாயம் என்பது நம் வாழ்வுமுறையாகவே இருந்த்து - agriCULTURE. தேவைக்கு மிஞ்சிய உற்பத்தியை மட்டுமே அருகிலுள்ள சந்தைகளில் விற்றோம்...
என்று நாம் அதிலிருந்து விலகி வணிகத்துள் நுழைந்தோமோ அன்றே நாம் தடம் புரண்டோம். விவசாயம் நம் வாழ்வியல் என்ற நிலை மாறி அது வணிகமானது - agriBUSINESS.
இந்த மோசமான மாற்றுப்பாதையில் பயணிக்க நாம் கொடுத்த விலை என்ன? ஒரு ஏழை விவசாயி தன் நான்கு ஏக்கர் நிலத்தில் நீர்தேடி தோண்டிய ஆழ்துளை கிணறுகள் மட்டுமே ஒன்பது! ஒரு ஆ.து.கிணறு அமைக்க ஆகும் செலவே ஒரு இலட்சம்!! அதில் ஒன்றில்கூட இன்று நீரில்லை. உடலுக்கு ஒன்பது வாசல் உயிருக்கு எண்பது வாசல் என்று அதில் ஒன்றான தூக்கில் தொங்கிப்போனான்.
ஒரு கதை சொல்லட்டுமா?
கடும் வறட்சியால் பல்லாண்டுகளாகத்தவித்த ஒரு ஊரில் மழை வேண்டி வேள்வி செய்ய கோவில் தலைமை பூசாரி முடிவு செய்தார். 'அனைவரும் நம்பிக்கையோடு வேண்டினால் கண்டிப்பாக மழை கிட்டும்' என்றார்.
அவர் குறித்த நாளில் வேள்விக்கூடம் அமைத்து ஊர் திரண்டது. வேள்வி நடந்த்து, கருமேகங்கள் திரண்டன. வேள்வி முடியும் வேளையில் பொத்துக்கொண்டு கொட்டியது.
இந்த நிகழ்வைக்கவனித்த நாரதர் வருணனிடம் சென்று வினவுகிறார் 'இறையே, உலகெங்குமே மழை வேண்டி தவித்து வேள்விமேல் வேள்வி செய்தபோதெல்லாம் சட்டை செய்யாத நீர் இந்தச் சிற்றூருக்கு மட்டும் கருணை பொழிந்த்து ஏனைய்யா?'
புன்னகைத்த வருணன் கேட்டான், 'மொத்த உலகையும் உற்று நோக்கிய நீர் அந்தச்சிற்றூரில் குடையுடன் வந்திருந்த ஒற்றைச்சிறுவனை கவனிக்கவில்லையா?!. யாம் மழை பெய்வித்தது அந்தச்சிறுவனுக்காக, அவன் என்மீது கொண்ட நம்பிக்கைக்காக'.
சற்று சிந்திப்போம்...
குழந்தைகளின் வேண்டுதல்கள் எளிமையானவை, பேராசை உலகின் நிழல் படியாதவை. இறை இவற்றிற்கு எப்போதும் செவி சாய்க்கும், நிறைவேற்றும். அத்தகைய குழந்தைகள் மகிழ்வோடு கிராம, நகர பேதமின்றி அதிகம் பாடும் பாடல், நாம் சொல்லித்தந்த பாடல்:
"
Rain, rain, go away.
Come again another day.
Little Johny wants to play / Mummy is washing clothes...
"
இறை, வழக்கம் போலவே செவி சாய்த்ததின் விளைவுதான் நாம் காலமெல்லாம் மழை வேண்டி எழுப்பும் வேள்விப்புகை.
அடுத்த தலைமுறைக்கேனும் மாற்றிச்சொல்லிக்கொடுப்போமே:
"
மழையே வா முன்பே வா.
உயிர் தழைக்க உடனே வா.
மழையே வா மீண்டும் வா.
இந்தச்சிறுபெண்ணோடு
விளையாட வா!
உயிர் தழைக்க உடனே வா.
மழையே வா மீண்டும் வா.
இந்தச்சிறுபெண்ணோடு
விளையாட வா!
"
கற்பனை செய்து பாருங்கள் நம் நாடு முழுதுமுள்ள கோடிக்கணக்கான குழந்தைகள் தினமும் இப்பாடலைப்பாடுவதை...மழை தர நம் 'இறை'க்கு கோடி காரணங்கள் கிட்டுமல்லவா!
ஒரு வேண்டுகோள்: அவர்கள் வேண்டுதலை ஏற்று மழை பெய்கையில் அவர்கள் கால்களை கட்டிப்போடாதீர்கள். அவர்கள் மனமும் உடலும் குளிர இறையமுதத்தில் நனையட்டும், ஒவ்வொரு துளியும் அவர்கள் வேண்டியதன் பலன், அவர்களையே அடையட்டும்!!
நாமும் இவரைப்போல ஆனந்தமாய் மழையில் பாடி ஆடலாம். அதற்கு முன்பாக பேராசைப்பெருவணிகப்பாதையில் இருந்து நம் விவசாயத்தை மீட்டெடுத்து நம் தேவைக்கான விவசாயமாக, வாழ்வியல்முறையாக மாற்றியமைக்கவேண்டியது அவசியம்.
மனித அறிவாலும் நம்பிக்கைகளாலும் துண்டுபட்ட இப்பெருநிலப்பரப்பை காலகாலமாய் கட்டியிணைக்கும் ஒற்றைக்கயிறு agriCULTURE. மீட்போமா நாம் அதை?
Shall we?
கருத்துகள்
கருத்துரையிடுக