மண்ணுள்ளே என்றோ விழுந்த
பெயர் அறியா விதையொன்று
காலப்புழுதியில்
தொலையாமல் தங்கி நின்று
ஒரு அற்புத நொடியில்
உயிர் நனைத்த பேரன்பில்
வேர் வெடித்து இலை துளிர்த்து
பரவசமாய் வளரும் இவ்வேளையில்
என் ஆன்மாவே நீராகி, வேராகி,
இலையாகி, பூவாகி,
காயாகி, கனியாகி
எல்லாமாய் ஆனதுபோல்
உணரும் இன்பத்தை
எதிர்பார்த்தா விதை நனைத்தது
பேரன்பு?
ஒரு முறைதான் முளைக்குமாம் விதை...
என்று முளைத்தா லும் என்னுள்தானே,
(அதன்) உயிர்த்தொடர்ச்சி
எனக்கே எனக்காய்
என் இருப்பு வரை...
வாழ்தலினும் மேலாம்
பேரன்பின் தரிசனம்,
யாருக்கு கிட்டினும்
என் கிளையில்
புதிதாய் பூக்கள் பூக்கும்!
கருத்துகள்
கருத்துரையிடுக