முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஒரு இயற்கை விவசாயியின் கடிதம் - பகுதி 1


[பாஸ்கர் சாவே இந்தியாவின் முன்னோடி இயற்கை வேளாண் வல்லுநர்களில் ஒருவர். இவர் பசுமைப் புரட்சியின் தீமைகளை விளக்கி பேரா. மா.சா. சாமிநாதனுக்கு எழுதிய திறந்த மடல்.]
அன்புள்ள திரு சுவாமிநாதன்,
நான் ஒரு எண்பத்து நான்கு வயதான இயற்கை/உயிர்ம வேளாண்மை செய்யும் விவசாயி. அறுபது வருடங்களுக்கு மேலாக விதம் விதமான உணவுப் பயிர்களை சொந்தமாக உற்பத்தி செய்த அனுபவம் உடையவன். இத்தனை வருடங்களில் நான் பல விதமான வேளாண்மை உத்திகளை, ஐம்பதுகளில் வேதியல் வேளாண்மை உட்பட (அதன் கெடுதல்களை உணரும் வரை), செய்து பார்த்து இருக்கிறேன்.
அதனால்தான் நான் இயற்கையோடு ஒத்திசைந்த உயிர்ம வேளாண்மை மூலம் மட்டுமே இந்தியா தன் மக்களுக்கு ஏராளமான அதே நேரத்தில் முழுமையான் உணவு பொருட்களை தற்சார்புடன் வழங்க முடியும், மக்களின் அடிப்படை தேவைகளான ஆரோக்கியம், சுய மரியாதை, அமைதி ஆகியவற்றை பூர்த்தி செய்யவும் உதவும் என்று உறுதியுடன் கூறுகிறேன்.

திரு சுவாமிநாதன் ஆகிய நீங்கள், ‘இந்திய பசுமை புரட்சியின் தந்தை’ என்று கருதப்படுகிறீர்கள். இந்த பசுமை புரட்சி, வேதியல் விவசாய பொருட்களை பெரு வெள்ளம் போல் இந்தியாவுக்குள் வரவழைத்து நமது நிலங்களையும் அதை சார்ந்த லட்சகணக்கான விவசாயிகளின் வாழ்வையும் கடந்த ஐம்பது வருடங்களாக அழித்துக் கொண்டுள்ளது. நமது நீண்ட வரலாற்றில் எந்த ஒரு தனி மனிதனையும் விட உங்களை மட்டுமே நமது மண்ணின் மிக சோகமான நிலைக்கும் கடன் சுமை தாங்க முடியாத விவசாயிகளின் (ஒவ்வொரு வருடமும் எண்ணிக்கை கூடிக்கொண்டே இருக்கும்) தற்கொலைக்கும் பொறுப்பாளராக நான் கருதுகிறேன்.
விதி வசத்தால் நீங்கள் இப்போது இந்திய விவசாயிகள் குழுமத்தின் தலைமை பொறுப்பேற்று ‘புதிய விவசாய கொள்கைகளை’ வரையறுக்கும் கடமைக்கு உட்படுதப்பட் டிருக்கிறீர்கள். நமது குழந்தைகளுக்காகவும், இனிமேல் பிறக்கப்போகிறவர்களுக்காகவும், நம் தவறுகளை திருத்திக்கொள்ள இதை ஒரு வாய்ப்பாக எடுத்துக்கொள்ள நான் உங்களை வலியுறுத்துகிறேன்.
இந்த புதிய கொள்கைகளை வரையறுக்க உங்கள் குழுமம் விவசாயிகளின் கருத்துக்களை வேண்டுவதாக புரிந்துகொண்டேன். இது ஒரு திறந்த உரையாடல் என்பதால் நான் என்னுடைய கடிதத்தை இந்திய பிரதமர், மத்திய விவசாய அமைச்சர், தேசிய கருத்து குழுவின் தலைவர் மற்றும் ஊடகங்களுக்கும் அனுப்புகிறேன் - நிறைய பேருக்கு சென்று சேரும் என்பதால். இந்த கொள்கைகளில் உள்ள அதி முக்கிய பிரச்சினைகளை எல்லா மட்டங்களிலும் திறந்த விவாதங்கள் செய்வதற்காகவும், ஆன்ம பரிசோதனை செய்வதற்கும் என் கடிதம் பயன்படும் என்று எதிர்பார்க்கிறேன் (நமது தற்கால மிக மோசமான நிலைமைக்கு காரணமான தவறுகள் திரும்ப செய்யப்படக்கூடாது என்பதற்காக).

பெருங்கவி ரவீந்த்ரநாத் தாகூர் சில வருடங்களுக்கு முன்னர்தான் நம் மண்ணை 'சுஜலாம்', 'சுபலாம்' என்று சொன்னார்.
நம் நாடு அற்புதமான கரிம வளத்தோடு, செல்வச் செழிப்போடு, பொன்னான மண், ஏராளமான நீர்வளம், ஏராளமான சூரிய வெளிச்சம், அடர் காடுகள், ஏராளமான பலவகையான உயிரினங்கள் இவைகள் கொண்ட, நல்ல வாழும் நெறிகளுடன் கூடிய, அமைதி விரும்பும் விவசாய விற்பன்னர்கள் வாழ்ந்த நாடு.
விவசாயம் நம் ரத்தத்தில் ஊறியது. அனால் இந்த (தலை நரைத்த) தலைமுறை இந்திய விவசாயிகள் தம்மை தாமே ஏமாற்றிக்கொண்டு இறக்குமதி செய்யப்பட்ட, தொலை நோக்கு இல்லாத, மண்ணை மிக மோசமாக வீணடிக்க கூடிய விவசாய முறையை கடைபிடிப்பது எனக்கு வேதனை அளிக்கிறது, (உங்களை போன்ற விவசாய அனுபவமே சுத்தமாக இல்லாதவர்களின் அறிவுரையினால்!)

இந்த மண் உலகத்திலேயே அதிகமான மக்கள் தொகையை தற்சார்போடு கணக்கற்ற தலைமுறைகளாக தாங்கியுள்ளது - வேதியல் உரங்கள், பூச்சிகொல்லிகள், தனித்துவமான குள்ள பயிர் வகைகள், நீங்கள் இப்பொழுது ஊக்கப்படுத்தி வரும் செயற்கை தொழில் நுட்ப உரங்கள், இவை எதுவுமே இல்லாமல். நூற்றுகணக்கான ஆண்டுகளாக, நம் நாட்டின் மீது படை எடுத்து நம் வளங்களை சுரண்டிசென்ற பின்னரும், நம் மண்ணின் வளம் பாதிப்பின்றி இருக்கிறது.

உபநிஷத் சொல்கிறது :
ஓம் பூர்ணமுதஹ:
பூர்ணமிதம் பூர்ணாம் பூர்ணம் உதஸ்யதே
பூர்ணஸ்ய பூர்ணமாதாய
பூர்ணமேவாவசிஸ்யதே
பொருள்:
இந்த படைப்பு முழுமையானது, முற்றானது.
இந்த முழுமையிலிருந்து படைப்புகள் உண்டாகின்றன, ஒவ்வொன்றும் முழுமையாக, முற்றாக.
முழுமையிலிருந்து முழுமையை எடுத்தாலும் முழுமை எஞ்சி நிற்கிறது,
சற்றும் குறையாமல், முழுமையாக!.

நம் காடுகளில் நாவல், மா, காட்டு அத்தி மற்றும் புளி போன்ற மரங்கள் தகுந்த பருவ நிலையின் பொது கிளைகள் வளைந்து தொங்கும் அளவுக்கு விளைந்து நிற்கின்றன. ஒரு வருடத்து விளைச்சல் 1000 கிலோவுக்கு குறையாமல் இருக்கும் ஒவ்வொரு மரத்திலும். ஆனால் அம்மரங்களைச் சூழ்ந்து உள்ள பூமி, தரையில் எந்த பெரிய ஓட்டைகளும் இன்றி முழுமையாக எந்தக் குறைபாடும் இல்லாமல் இருக்கிறது. இந்த மரங்களுக்கு (கடும் பாறை கொண்ட மலைகளில் உள்ள மரங்களும்தான்) எங்கிருந்து தண்ணீர் மற்றும் சத்துக்கள் (NPK) கிடைக்கின்றன? இயற்கை தன்னிலையில் இருந்து நகராமலே இந்த மரங்களுக்கு தேவையானதை தேவையான இடத்திலேயே கொடுக்கிறது. ஆனால் உங்களைப்போன்ற குறுகிய பார்வை கொண்ட குழப்பம் செய்யும் அரிப்பு உள்ள அறிவியலாளர்களும், பொறியியலாளர்களும் இந்த உண்மையை காணவியலாத குருடர்களாக இருக்கிறீர்கள். எந்த அடிப்படையில் நீங்கள் ஒரு மரத்துக்கு/செடிக்கு எது வேண்டும், எப்போது வேண்டும், எங்கு வேண்டும் என்று அறிவுறுத்துகிறீர்கள்?

அறிவு இல்லாத இடத்தில், அறியாமை அறிவியல் என்ற போர்வையில் உலா வரும் என்று சொல்வார்கள். இப்படியான அறிவியலைத்தான் நீங்கள் வளர்த்து நம் விவசாயிகளை அழிவின் பாதையில் இட்டுச் செல்கிறீர்கள். அறியாமை என்பது வெட்கப்படக் கூடிய ஒன்று அல்ல. அது அறிவை அடைய தேவையான முதல் படி. ஆனால் அறியாமையை கண் கொண்டு பார்க்க மறுப்பது தன்னை தானே ஏமாற்றிக்கொள்ளும் இறுமாப்பு.

வேளாண்மைக்கான தவறான கல்வி
நம் நாட்டில் 150 வேளாண் பல்கலைக் கழகங்கள் உள்ளன. பெரும்பான்மையானவை ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் கொண்டவை. அவைகளுக்கு கட்டமைப்பு, சாதனங்கள், வேலை ஆட்கள், பணம் என்று எதுவுமே தட்டுப்பாடின்றி உள்ளன. ஆனாலும் இவற்றில் ஒன்று கூட அரசிடம் இருந்து ஏராளமான மானியங்கள் கிடைத்தும் கூட, லாபம் ஈட்டக்கூடிய, தன் மாணவர்களின் உணவுத் தேவையை கூட பூர்த்தி செய்யும் நிலையில் இல்லை. ஆனால் ஒவ்வொரு ஆண்டும் இந்த ஒவ்வொரு கல்வி கூடமும் நூற்றுக்கணக்கான 'கல்வி கற்ற' ஆனால் வேலை செய்ய இயலாதவர்களை விவசாயிகளுக்கு இயற்கையைச் சீர்குலைக்கும் தவறான தவகல்கள் தருவதற்கு அனுப்பி வைக்கின்றது.

ஒரு மாணவன் முதுகலை வேளாண்மை படிப்பில் செலவிடும் ஆறு முழு வருடங்களும் 'உற்பத்தி பெருக்கம்' என்ற ஒரே குறுகிய தொலை நோக்கற்ற இலக்கை நோக்கியே உள்ளது. இதற்காக விவசாயி நூறு அலுவல்களை/பொருட்களை செய்யவும் வாங்கவும் அவசரப்படுத்தப்படுகின்றான். ஆனால் அவன் தன் நிலத்தை எதிர்கால சந்ததியினர் மற்றும் பல்லுயிர்கள் நலம் கருதி 'என்னென்ன செய்யக்கூடாது' என்பது குறித்து யாரும் சிந்தனை செய்வதில்லை.

நம் நிறுவனங்கள் முன்னேற்ற முயலும் வணிக ரீதியான விவசாயம் என்பது குற்றவாளித்தனமானது மற்றும் தற்கொலைக்கு ஒப்பானது என்பதை இப்போதாவது நம் மக்களும் அரசும் கண் விழித்து பார்க்கட்டும்! காந்தி சொன்னார் “சொஷன் இருக்கும் இடத்தில போஷன் இல்லை!” என்று (சொஷன் என்பது ஏய்த்தல், போஷன் என்பது ஆரோக்கியம்). வினோபா பவே “அறிவியலும் மனிதாபி மானமும் மணந்து கொண்டால் புவி சொர்க்கமாகும். ஆனால் அகிம்சையுடன் மண முறிவு ஏற்பட்டால் அது ஊழித்தீ உண்டாக்கி அதன் பிழம்புகளில் நம்மை விழுங்கி விடும்” என்றார். இயற்கையின் உற்பத்தி திறனை அதிகப்படுத்த முயலும் அடிப்படை தவறு உங்களை போன்ற 'விவசாய அறிவியலாளர்களின்' அறிவின்மையை வெளிச்சமிட்டுக் காட்டுகிறது. மனிதனால் மாசுபடுத்தப்படாத இயற்கை ஏற்கனவே அதிகபட்ச உற்பத்தியை தாரளமாக வழங்குகிறது. ஒரு நெல்மணி ஓராயிரம் நெல்மணிகளை சில மாதங்களிலேயே உற்பத்தி செய்யும் திறன் கொண்டதால் எதற்காக அதன் உற்பத்தியை அதிகரிக்கும் தேவை வேண்டியிருக்கிறது? ஏராளமான பழ வகை மரங்களும் ஆயிரக்கணக்கான கிலோ சத்துக்களை தம் வாழ்நாளில் தருகின்றன., மனிதன் அவற்றை குறுகிய லாப நோக்குடன் விஷத்தை கொட்டி அதன் வளர்ச்சியில் குறுக்கிடாமல் இருக்கும் வரை!

ஒரு குழந்தைக்கு அதன் தாய்ப்பால் அருந்த உரிமை உள்ளது. அனால் நாம் அன்னை பூமியின் ரத்தத்தையும் சதையையும் எடுத்துக்கொண்டால் பூமி எப்படி சுய வளம் குன்றாமல் உயிர் வாழும் என்று நாம் எதிபார்க்க முடியும்! மற்ற எல்லாவற்றையும் ஒதுக்கி விட்டு வணிகம் மற்றும் தொழிற்சாலைகளுக்கு மட்டும் சேவை செய்யும் எண்ணமே பிரச்னைகளுக்கு ஆணி வேர். ஆனால் தொழிற்சாலைகளோ இயற்கையில் விளைந்த மூலபொருட்களை வணிக பொருட்களாக மாற்றுவதை மட்டுமே செய்கின்றன. இயற்கை மட்டுமே தினசரி கிடைக்கும் சூரிய ஒளியின் சக்தி மூலம் நிஜமான வளம் குன்றாத உற்பத்தி பெருக்கத்தை செய்கிறது.
இயற்கை தானாக வளப்படுத்திக் கொள்ளும் ஆறு முக்கிய காரணிகள்:

இந்த பூமியில் இயற்கையின் ஆறு முக்கிய காரணிகள் சூரிய ஒளியுடன் சேர்ந்து ஊடாடும் நிகழ்வு தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கிறது. அவற்றில் மூன்று காற்று, தண்ணீர், நிலம். இவை மூன்றுடன் கை கோர்த்துக் கொண்டு வனஸ்பதி ஸ்ருஷ்டி (தாவர உலகம்), ஜீவ ஸ்ருஷ்டி (பூச்சிகள் மற்றும் நுண்ணுயிரிகள் உலகம்) மற்றும் பிராணி ஸ்ருஷ்டி (விலங்குகள் உலகம்) ஆகிய மூன்று உயிரகங்கள் ஒத்திசைந்து வேலை செய்கின்றன. இந்த ஆறு முக்கிய காரணிகளும் இந்த உலகில் மாற்றங்களுடன் கூடிய சம நிலையை கட்டிக்காக்கின்றன. இந்த ஆறும் சேர்ந்து செய்யும் அற்புத இசைக்கோவைதான் புதியவைகளை உண்டாக்கிகொண்டே இருக்கும் இயற்கை!.

மனிதனுக்கு இயற்கையின் இந்த ஆறு முக்கிய காரணிகளில் எதையும் மாற்றும் உரிமை கிடையாது. ஆனால் நவீன தொழில் நுட்பம் வணிகத்தை மணந்து கொண்டது (அனுபவ அறிவையும் உயிர்களிடத்தில் அன்பையும் சேர்த்துக்கொள்ளாமல் விட்டு விட்டு) எல்லா நிலைகளிலும் பேரழிவை உண்டு செய்து விட்டது.

நாம் நிலம், நீர், காற்று ஆகிய மூன்றையும் மிகவும் மாசுபடுத்தி விட்டோம். நாம் நம்முடைய வனங்களையும் அவற்றில் வாழ்ந்த உயிரினங்களையும் கிட்டத்தட்ட முற்றிலுமாக அழித்து விட்டோம். நம்முடைய புதிய விவசாயிகள் இடைவிடாது கொடிய நஞ்சை தம் விளைநிலங்களில் கொட்டிக் கொண்டே இருக்கிறார்கள்.

களைப்பின்றி, எதிர்பார்ப்பின்றி மண் வளத்தை நல்ல காற்றோட்டமுடன் வைத்துக்கொள்ளும், உயிரிழந்த கரிமப்பொருட்களை மட்கச்செய்து தாவரங்களுக்கே மீண்டும் உணவாக மாற்றும் தன்மையுடைய இயற்கையின் ஜீவ ஸ்ருஷ்டியான நுண்ணுயிரிகள் இந்த கொடிய நஞ்சினால் முற்றிலுமாக கொல்லப்படுகின்றன. இந்த வேதிப்பொருட்களின் நச்சுத் தண்ணீரை மட்டுமல்லாமல் பிராணி ஸ்ருஷ்டி எனப்படும் மனிதன் அடங்கிய உயிரினங்களையும் மெல்ல மெல்ல நஞ்சாக்கிவிடும்.
தற்சார்பின்மையின் மூல காரணம்
தற்சார்பு என்பது நீங்கள் பசுமை புரட்சியை பரப்பிக்கொண்டு இருக்கும்போது அதிகம் பேசப்படாத ஒரு புதிய கவலையாகவே இருந்தது. கடந்த நாற்பது ஐம்பது ஆண்டுகளில் குன்றிக்கொண்டே இருக்கும் மண் வளம் கிட்டத்தட்ட நாற்பது நூற்றாண்டுகளில் நம் முன்னோர்கள் செய்த இயற்கை வேளாண்மை யினால் குன்றாமல் இருந்தது என்ற உண்மையை உங்களால் மறுக்க முடியுமா?

ஒரு தலைமுறைக்குள்ளாகவே வேதிப்பொருட்கள் அதிகம் கொண்ட உரங்கள் மற்றும் அதிக நீர் கொண்ட ஒற்றைப்பயிர் (பணப்பயிர்) விவசாயம்தான் நம் நாட்டின் பெரும்பான்மையான இடங்களில் பரவி வரும் உயிர்ச்சூழல் பேரழிவுக்கு முதல் காரணம் என்பது மறுக்க முடியாத உண்மை அல்லவா!
பன்மயப் பயிர்களின் பன்மயத் தன்மையை திட்டமிட்டு குறைத்தல், அரிதான இயற்கை சத்துக்கள் மற்றும் மண்வளம் தரம் குறைத்தல்:

நமது நாடு பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக சுற்றுச்சூழலுக்கும் தேவைக்கும் ஏற்ப தம்மை மாற்றிக் கொள்ளக்கூடிய ஏராளமான பன்மயப் பயிர்களை தன்னகத்தே கொண்டு பொலிவுடன் இருந்தது.
நம்முடைய ஏராளமான உயரமான உள்ளூர் வகை தானியங்கள் மண்ணுக்கு கரிம சத்துக்களை அளிப்பதோடு மட்டுமல்லாமல் நிலத்துக்கு நிழல் தந்தும் அதிகமான பருவ மழையினால் ஏற்படும் மண் அரிப்பையும் தடுக்க உதவின.

ஆனால் உற்பத்தியை பெருக்குவதாக கூறிக்கொண்டு அரிதான குள்ள இனங்கள் உங்கள் முயற்சியால் அறிமுகப்படுத்தப்பட்டு பரப்பவும் செய்யப்பட்டன. இதனால் களைகள்தான் மிக அதிகமாக வளர்ந்து இப்பொழுது சூரிய ஒளிக்காக, வளர்ச்சி பாதிக்கப்பட்ட பயிர்களுடன் வெற்றிகரமாக போராடுகின்றன. இதனால் களை நீக்கவும், களைக்கொல்லி மருந்து அடிக்கவும் விவசாயி அதிகமாக செலவு செய்ய நேரிட்டிருக்கிறது.
குள்ள தானியங்களின் வைக்கோல் வளர்ச்சி கடுமையாக குறைந்து உள்ளூர் தானிய வகைகளின் வளர்ச்சியில் மூன்றில் ஒரு பங்கு மட்டுமே எட்டுகிறது. பஞ்சாப் மற்றும் அரியானாவில் இந்த வைக்கோல்கள் கூட கிருமிகளை தம்முள் அடக்கியுள்ளதாக கருதப்பட்டு முற்றிலுமாக எரிக்கப்படுகிறது (கால்நடைகள் உண்ணத்தகாத அளவுக்கு நஞ்சு உள்ளதால்; டிராக்டர் எந்திரங்கள் இப்போது கால்நடைகளுக்கு பதிலாக வேலை செய்கின்றன).

இதன் விளைவாக மண்ணை வளமாக்கும் இயற்கை இடுபொருட்கள் உள்ளூரில் கிடைக்கும் அளவு குறைந்து வெளியில் தயாரிக்கப்பட்ட பொருட்களை வாங்கி இட வேண்டியிருக்கிறது. வேறு வழியின்றி விவசாயிகள் வேதி உப்புக்களை இட்டு மண் வளத்தன்மையை மேலும் குறைக்கின்றனர். இதனால் வளமான மண்ணும் அரிக்கப்படுகின்றது.
திட்டமிட்டு உருவாக்கிய கொள்ளை நோய்
வேதி உரங்கள் இட்டு வளர்க்கப்பட்ட இந்த அரிதான பயிர் வகைகள் பூச்சிகளுக்கும் நோய்களுக்கும் எளிதான இலக்காக மாறி இந்த பாதிப்பை குறைக்க மேலும் கொடிய விஷங்களை (பூச்சிக்கொல்லிகள்) நிலத்தில் இட வைக்கின்றன.

ஆனால் இந்த பூச்சிக் கொல்லிகளால் தாக்கப்பட்ட பூச்சியினங்கள் தம் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்திக்கொண்டு மிக அதிக அளவில் இனப்பெருக்கம் செய்கின்றன. இந்த பூச்சியினங்களை உண்டு வாழும் சிலந்திகள், தவளைகள் போன்றவை (ஒரு வகையில் இந்த பூச்சிகளின் பெருக்கத்தை இயற்கையாக கட்டுப்படுத்துபவை) உணவின்றி அழிந்து போகின்றன. மண்ணுக்கு நன்மை செய்யும் பூச்சிகளான மண் புழுக்கள் மற்றும் தேனீக்களும் அழிந்து போகின்றன. இத்தகைய பூச்சிகளை கொல்ல வணிக விவசாயம் மற்றும் தொழில் முனைவோர்கள் மேலும் மேலும் சக்தி வாய்ந்த புதிய, கொடிய, அதிக விலை மிக்க வேதி உரங்களை பரிந்துரை செய்தனர். ஆனாலும் பூச்சிகள் மற்றும் நோய்களின் தொல்லைகள் முற்றிக்கொண்டே இருந்தன. இதனால் சுற்றுச்சூழல், நிதி மற்றும் மனிதச் செலவுகள், அதல பாதாளத்தை நோக்கிய ஒரு சுழலில் சிக்கிக்கொண்டன.
(தொடரும்)

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விழலுக்கு இறைத்த நீர்

விழலுக்கு இறைத்த நீர்... என்னை சிந்திக்க வைத்த சொற்றொடர் இது.  பலனளிக்காத முயற்சியின் தோல்வியை சுட்டவே பெரும்பாலும் பயன்படுத்துகிறோம். இதன் கருப்பொருள் வேறாகவும் இருக்கலாம்... விழல் = களை = களையப்படவேண்டிய, நமக்கு அவசியமற்ற பயிர். நமக்கு அவசியமான பயிர்கள் மட்டுமே நம் வயலில் இருக்கவேண்டும். அப்போது மட்டும்தான் பஞ்ச பூத முழு சக்தியும் நமக்கு வேண்டிய பயிருக்கு கிட்டும், அதற்கு மட்டுமே கிட்டும். இந்த சித்தாந்த அடிப்படையில்தான் மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகள் வேறோடு பிடுங்கப்பட்டு, தேயிலையும் காபியும் பயிராச்சி (நாமள்லாம் அப்போ வெள்ளக்காரங்களே!). இந்த சித்தாந்த அடிப்படையிலதான் சம வெளிகளிலும் காடுகள் நம்மால் சிதைக்கப்பட்டு நெல், கோதுமை, கரும்பு, வாழை என மாறிப்போயின. இதே அடிப்படையில்தான் பல உயிரினங்கள் நம் ஆக்கிரமிப்புக்கு அடிபணிந்து ஏற்கனவே விடைபெற்றோ அல்லது விடைபெற்றுக்கொண்டோ இருக்கின்றன. நிலத்தில் மட்டுமல்ல, நீரிலும்தான்; 'என்னது ஆஸ்திரேலியால பவளப்பாறைகளை காணுமா?!!! அது வேற பஞ்சாயத்துபா!'. இதெல்லாம் நிகழக்கூடாதென்றுதான் அன்று நம் ஆட்கள் விழல

சிறுக கட்டி பெருக வாழ்

சிறுக கட்டி பெருக வாழ்! கேள்விப்பட்டிருக்கிறோம். படித்திருக்கிறோம். சிறிதாய் தொடங்கி ஆல் போல் வளர்ந்து என வணிகம் பேசியிருக்கிறோம். அளவாய் வீடு கட்டி சுற்றம் சூழ்ந்து பெருக மகிழ்வாய் வாழ்தல் என முயற்சிக்கிறோம். இவையெல்லாவற்றையும் தாண்டிய புரிதல் ஒன்று வேண்டும். சிறுக கட்டி - சிறு வீடு கட்டி, பெருக - பல்லுயிர் பெருக, நாமும் வாழ்வோம் என்பதாகவும் இதன் பொருள் இருக்கலாம். பாரதி கனவு கண்ட காணி நில வாழ்வும் இதுவே, பில் மோலிசன் கற்றுத்தந்த பெர்மாகல்ச்சரும் (ஒருங்கிணைந்த பண்ணையம்) இதுவே, காந்தி மற்றும் புகுவோகா பரப்பிய சுயசார்பு பண்ணை வாழ்வும் இதுவே! பெரிதாய் கட்டி சிறிதாய் வாழ்ந்துவிட்டுப்போகும் நமக்காகவே சொல்லப்பட்டது, அன்றே! உணவு வீணாவதைப்பற்றி ஐ.நாவில் கூட்டம் கூட்டமாய் விவாதித்து புள்ளி விபரங்கள், அறிக்கைகள் பதிப்பிக்கிறார்கள். இந்தியாவில் 40 சதம் வீணாகிறதாம். நம் வாழ்வியல் அறியாது எழுதித்தள்ளுகிறார்கள். உணவு மீந்தால் / ஒரு இலை வீட்டிலிருந்து வெளியே விழுந்தால்கூட ஒரு கூட்டமே (மனிதர் முதல் பூச்சி வரை) அதிலிருந்து உண்ணும் இங்கு! இதில் வீணாவதெங்கு?!

எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை

+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+- கேன்சர் கட்டிகள் சுமக்கும் எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை. -+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+ வெண்மைப்புரட்சிக்கு முந்தைய இந்தியாவில் (1960 களுக்கு முன்) பால் வியாபாரத்துக்காக யாரும் மாடுகளை வளர்த்ததில்லை. சர்க்கரை, தேயிலை, காபி என வணிகப்பயிர்களும், வணிகமும் நாம் நாட்டில் வேரூன்றியபோது அவர்களை திகைக்கவைத்தது நமது மக்களின் பால் மோகமற்ற வாழ்வு. கிராமங்கள் சார்ந்த அவ்வாழ்வில் பால் என்பது குழந்தைகளுக்கான உணவு, எனவே அது விற்பனைக்கல்ல. அவ்வளவே.  கிடைத்த இலைகளையெல்லாம் நீரில் கொதிக்கவைத்து பருகிய நம் மக்களை டீ, காபி நோக்கி நகர்த்த முதலில் அவற்றை இலவசமாய் தந்து, பின் பாலுடன் சேர்த்தால் சுவைகூடுமென காட்டி, வருடம் முழுவதும் கிடைக்காத பாலை கிடைக்கவைக்க வணிகம் கையிலெடுத்த ஆயுதம் என்ன தெரியுமா? 'பாலுக்காக மாடு வளர்த்தால் சில வருடங்களிலேயே பணக்காரராகிவிடலாம்! உங்கள் நாட்டு மாடுகள் வருடத்தில் சில மாதங்களே கறவையில் இருப்பதால் அவை உங்கள் கனவுகளுக்கு இடையூறு. நாங்கள் இலவசமாய் தரும் மாடுகள் அமிர்