முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஒரு இயற்கை விவசாயியின் கடிதம் - 02 -இறுதிப்பகுதி

ஒரு இயற்கை விவசாயியின் கடிதம்... - தமிழில்: 
[பாஸ்கர் சாவே இந்தியாவின் முன்னோடி இயற்கை வேளாண் வல்லுநர்களில் ஒருவர். இவர் பசுமைப் புரட்சியின் தீமைகளை விளக்கி பேரா. மா.சா. சாமிநாதனுக்கு எழுதிய திறந்த மடல்.] (சென்ற இதழ் தொடர்ச்சி...)
வேதியியல் உரங்களாலும் அதிகரிக்கப்பட்ட பணப் பயிர்களாலும் தண்ணீர்த் தேவை மிக கடுமையாக அதிகரித்தது. இமயத்தில் இருந்து உற்பத்தியாகும் ஐந்து நதிகளால் வளமாக்கப் பட்ட பஞ்சாப் மாநிலத்தில் 1952-இல் பக்ரா நங்கல் அணை கட்டப்பட்டது. அதனைத் தொடர்ந்து பல்லாயிரக்கணக்கான பெரிய மற்றும் நடுத்தர அணைகள் சர்தார் சரோவர் என்னும் மிக மிகப் பெரிய அணை கட்டும் வரையில், இந்தியா முழுவதும் கட்டப்பட்டன. ஆனால் இப்பொழுது நமது அரசு 560000 கோடி செலவில் இந்தியா முழுதும் உள்ள அனைத்து நதிகளையும் இணைக்கும் திட்டத்தை ஆய்ந்து கொண்டுள்ளது. இது துக்ளக்கின் தன்னைத்தானே மிக உயர்வாக எண்ணி கொள்ளும் கிறுக்குத் தனமான செய்கைக்கு ஒப்பான, எதிர்கால சந்ததியினரை கருத்தில் கொள்ளாத ஒரு திட்டம்!

உலகில் தென் அமெரிக்காவுக்கு அடுத்த படியாக அதிக அளவு மழை பெரும் நாடு இந்தியா. ஆண்டு சராசரி கிட்டத்தட்ட 4 அடி. தடிமனான பயிர் மூடாக்கு மற்றும் நுண்ணுயிரிகளால் துளையிடப்பட்ட மண்ணாக இருந்தால் இந்த 4 அடியில் பாதி மழை நீராவது மண்ணில் ஊறி மண்ணிலும் மண்ணுக்கு கீழேயும் சேமித்து வைக்கப்பட்டிருக்கும். இதில் ஒரு கணிசமான அளவு நீர் நிலத்தடி நீர் மட்டத்தில் சென்று நீர் மட்டத்தை உயர்த்தி இருக்கும்.
ஆகவே உயிருள்ள மண்ணும் அதன் கீழ் உள்ள நீர் மட்ட சேமிப்பும் இயற்கை இலவசமாக அளித்த மிகப் பெரிய ஒரு ஆயத்த நீர்த்தேக்கமாக இருந்து இருக்கும். காடுகளுக்கு கீழ் உள்ள நிலம்தான் மழை நீரை மிக செயல் வேகத்தோடு சேமிக்கும் ஆற்றல் மிக்கது. அதனால் அரை நூற்றாண்டுகளுக்கு முன்னர் இந்தியாவின் மிகப் பல பகுதிகளில் மழை நின்று நெடுநாட்கள் ஆகியும் ஆண்டு முழுவதற்கும் தேவையான புதிய தண்ணீர் தேவைக்கு தகுந்த அளவில் இருந்தது. ஆனால் காடுகளை அழிப்பதால் மண்ணின் நீர் சேமிக்கும் தன்மை கடுமையாக குறைந்துவிடுகிறது. ஓடைகளும் கிணறுகளும் வற்றிப்போய் விடுகின்றன. இது ஏற்கனவே இந்தியாவில் மிக அதிகமான இடங்களில் நடந்துவிட்ட அவலம்.
நிலத்தடி நீர் சேமிப்பு குறைந்து விட்ட போதிலும் நிலத்திலிருந்து நீர் எடுப்பது அதிகரித்து வந்துகொண்டே இருக்கிறது. 1950களை ஒப்பிடும்போது இந்தியா இப்போது 20 மடங்கு அதிகமாக நிலத்தடி நீரை ஒவ்வொரு நாளும் உறிஞ்சி எடுத்துக்கொண்டே இருக்கிறது. மதியீனமான இந்த வீணாக்குதல் ஒரு குறைந்த அளவு மக்கள் தொகையால் மட்டுமே செய்யப்படுகிறது. கைகளால் இழுத்தும் கையழுத்த முறையிலும் நீரை எடுத்து பயன்படுத்தும் பெருவாரியான மக்கள் (கிராமப்புறங்களில் வாழ்பவர்கள்) மற்றும் மழையை நம்பி வேளாண்மை செய்யும் மக்கள் பயன்படுத்தும் நீரின் அளவு பல தலைமுறைகளாக ஒரே அளவிலேயே உள்ளது.
இந்தியாவின் தண்ணீர் பயன்பாடு 80 விழுக்காடு நீர்ப்பாசனத்திற்காக, அதுவும் வேதியியல் முறைப்படி வளர்க்கப்படும் பணப்பயிர்களால்தான் பயன்படுத்தப்படுகிறது. உதாரணத்திற்கு மேலதிகமான பெரிய மற்றும் நடுத்தர அணைகள் கொண்ட மகாராஷ்டிராவை எடுத்துக்கொண்டால், அங்கு 3 அல்லது 4 சதவீத நிலத்தில் மட்டுமே பயிரிடப்படும் கரும்பின் நீர்த்தேவை மட்டுமே அங்கிருக்கும் நீரில் 70 சதவிகிதம்!
ஒரு ஏக்கரில் வேதியியல் முறைப்படி சாகுபடி செய்யப்படும் கரும்புக்கு தேவையான தண்ணீரை கொண்டு 25 ஏக்கர் சோளம், கம்பு மற்றும் மக்காச்சோளம் சாகுபடி செய்யலாம். சர்க்கரை ஆலைகளும் மிக அதிக அளவில் நீரை பயன்படுத்துகின்றன. விதைத்தலில் இருந்து மதிப்பு கூட்டப்படுவது வரை ஒவ்வொரு கிலோ சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரைக்கும் 2 லிருந்து 3 ஆயிரம் லிட்டர் தண்ணீர் தேவைப்படுகின்றது. இந்த நீரை பயன்படுத்தி பாரம்பரிய, உயிர்ம வேளாண்மை முறையில் 150 லிருந்து 200 கிலோ சத்து மிக்க கம்பு மற்றும் மக்காச்சோளம் (உள்ளூர் தானியங்கள்) விளைவிக்கலாம்.
அரிசி, மாரிக்காலப் பயிராக இருந்தாலும் அதைக் குளிர்காலம் மற்றும் கோடையில் கூட பன்முறை அதிகமாக பயிர் செய்வதால் நமது நீராதாரம் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு நிலத்தடி நீர் சேமிப்பும் குறைந்துவிடுகிறது. கரும்பை போலவே அரிசியை பன்முறை பயிரிடுதலும் நம் நிலத்தை மீட்க முடியாத வகையில் உப்புத்தன்மையாக்கி கெடுத்து விடுகிறது.
அதிக அளவு தண்ணீர் பயன்படுத்தி செய்யும் வேளாண்மை சிறிது சிறிதாக தடிமனான உப்பு நிலத்தில் படிந்து நிலம் உப்பாவதற்கு காரணம் ஆகிறது. பல லட்சக்கணக்கான ஹெக்டர் அளவிலான வேளாண் நிலங்கள் இதனால் பாழாகி விட்டன. எங்கெங்கெல்லாம் பாரம்பரிய முறையிலான மிக குறைந்த அளவில் தண்ணீர் தேவையான (அல்லது தண்ணீரே தேவை இல்லாத) பல பயிர் சுழற்சி வேளாண்மை கை விடப்பட்டு அதிக அளவில் நீர் தேவைப்படும் கரும்பு மற்றும் பாசுமதி அரிசி ஆண்டு முழுவதும் பயிரிடப்பட்டதோ அங்கெல்லாம் மிக கவலைக்கிடமான இடர்கள் உண்டாகின.
இந்தியாவில் ஏறக்குறைய 60 சதவீதம் தண்ணீர், தேவைக்கதிகமான மற்றும் தீங்கு விளைவிக்கும் நீர்ப்பாசனத்திற்காக பயன்படுத்தப் படுவதால், நம் முதல் முயற்சி இந்த பயன்பாட்டை கட்டுப்படுத்துவது ஆகும். இந்த முயற்சியால் தேவைக்கதிகமான நீர்ப்பாசனத்தால் ஏற்படும் மோசமான பாதிப்பு நிறுத்தப் படுவதோடு மட்டுமல்லாமல் இவ்வாறாக சேமிக்கப்பட்ட நீரில் பெரும்பகுதி அருகிலேயே நீரின்றி வாடிக்கொண்டிருக்கும் முக்கியமான பயிர்களுக்கு பயன்படவும் செய்யும்.

கல்பவிருட்சாவில் கவனமான நீர்ப்பாசனம் மற்றும் நிலத்தடி நீரை மீளுருவாக்கம் செய்தல்

திறமையான உயிர்ம விவசாயத்தில், பொதுவாக நவீன விவசாயத்தில் பயன்படுத்தப் படும் அளவை விட குறைவான நீர்ப்பாசனமே தேவைப்படுகிறது. மண் சற்றே ஈரப்பதமாக இருக்கும்போதுதான் பயிர்களின் மகசூல் ஆகக்கூடுதலாக இருக்கும். இதற்கு விலக்காக அரிசி மட்டுமே தண்ணீர் அதிகமாக தேங்கும் இடங்களில் வளர்வதால், தண்ணீர் தேங்கி நிற்கும் தாழ்வான பகுதிகளில் பருவப்பயிராக அது விரும்பி வளர்க்கப்படுகிறது. 

மற்ற பயிர்கள் அனைத்திற்கும் தேவைக்கதிகமான நீர்ப்பாசனம் செய்தால் அது வேர்கள் சுவாசிக்கத் தேவையான (மண் துகள்களுக்கு இடையே காணப்படும்) காற்றை வெளியேற்றி, தொடரும் நீர்த்தேக்கத்தினால் வேர் அழுகலை உண்டாக்கும். என் தோட்டத்து நீர்ப்பாசனம் நவீன தோட்டங்களின் நீர்ப்பாசன அளவில் ஒரு சிறு விகித அளவே இருக்கிறது. மற்றும் என் பழத்தோட்டத்தில் தடிமனான பயிர்களின் (மூடாக்கு) கீழே இருக்கும் துளைகள் நிரம்பிய மண்ணானது பஞ்சு நீரை உறிஞ்சி நிரப்புவது போல பருவ மழையின்போது கிடைக்கும் அதிகபட்ச நீரை உறிஞ்சி நிரப்பி அதை நிலத்தடி சேமிப்பு கலன்களுக்கு கொடுக்கிறது. ஆகவே கல்பவிருட்சாவில் சேமிக்கப்படும் நீரின் அளவு, மழையற்ற மாதங்களில் நீர்ப்பாசனத்திற்காக கிணற்றில் இருந்து எடுக்கப்படும் நீரின் அளவை விட பல மடங்கு கூடுதலானது.
ஆகவே என் தோட்டம் இங்குள்ள புவிச்சூழலில் இருந்து தண்ணீரை குறைக்காமல் அதிகப்படுத்தும் பணியை செய்கிறது (அதாவது நீர் நுகர்வோராக இல்லாமல் நீர் உற்பத்தி செய்பவராக இருக்கிறது)!
இதனால் உயிர்ம வேளாண்மை மூலமாக இயற்கையின் வழியில் சுற்றுச்சூழலுக்கு உகந்த பல்பயிர்கள் மற்றும் செடிகள், மரங்கள் வளர்ப்பதால் நம் நாட்டுக்கு தேவையான நீர் பாதுகாப்பு மற்றும் உணவு பாதுகாப்பு நமக்கு கிட்டும் என்பது தெளிவாகிறது.

முப்பது சதவீத மர வளர்ப்புத் தேவை


அடுத்த பத்து இருபது ஆண்டுகளில் நாம் நம் நிலத்தின் 30 சதவீதத்தை பல்வகை இந்திய மரங்களையும் காடுகளையும் மீளுருவாக்கம் செய்ய பயன்படுத்தவேண்டும். மூடாக்கு செய்வது மிகத் தேவையான செயலாகும். இதுதான் சுற்றுச்சூழல் நீர் சேமிப்பின் மூலம் இயற்கையாகவே அதிகமாக கிடைக்கும் நீரை நிலத்தடி நீராக சேமிப்பதின் தலையாய பணியாகும். இதன் மூலம் பத்து ஆண்டுகளுக்குள்ளேயே ஏராளமான பயன்களை நம்மால் குறைந்த செலவில் அடைய இயலும். 

ஆனால் வருந்தத்தக்க வகையில், இயற்கையான நிலத்தடி நீரின் சக்தி இந்தியாவில் ஏற்கனவே நடத்தி முடிக்கப்பட்ட, இப்போது நடந்து கொண்டிருக்கிற, இனிமேல் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருக்கிற அத்தனை நீர்ப்பாசன திட்டங்களையும் விட கூடுதலானது, என்பதை கவனத்தில் கொள்ளத் தவறி விட்டோம். இது போன்ற பரவலாக்கப் பட்ட நிலத்தடி நீர் சேமிப்பு, தரைமட்டத்தில் சேமிக்கபட்டிருக்கும் நீரை விட மேன்மையானது (தரை மட்ட நீர் அதிகமாக ஆவியாவதால்). 

மரங்களை நடுவதன் மூலம் கிடைக்கும் பல வகையான பயன் தரும் விளை பொருட்கள் அதனை சார்ந்து இருக்கும் பெருவாரியான மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தவும் உதவும்.

பயிர்களற்ற ஒன்றுக்கும் உதவாத வெற்று நிலங்களை கூட பத்து ஆண்டுகளுக்குள் ஆரோக்கியமானவையாக மாற்றி விட முடியும். குறைந்த ஆயுள் உடைய தாவரங்கள், நடுத்தர ஆயுள் உடைய தாவரங்கள் மற்றும் நீண்ட ஆயுள் உடைய தாவரங்களை மாற்றி மாற்றி நடுவதன் மூலம், நீண்ட ஆயுள் உள்ள தாவரங்கள் தரும் விளைபொருட்கள் கிடைக்கும் வரை, விவசாயிக்கு தடையின்றி விளை பொருட்கள் மற்ற தாவரங்களின் மூலம் கிடைக்குமாறு திட்டமிட முடியும். இதனால் கிடைக்கும் அதிகமான கரிம இடு பொருட்கள் மற்றும் ஆண்டு முழுதும் நிலத்தில் இருக்கும் பயிர் மூடாக்கின் மூலம் மண்ணை மீள்வளப்படுத்தும் வேலையும் துரிதமாக்கப்படுகிறது.

உற்பத்தி, ஏழ்மை மற்றும் மக்கள் தொகை


இந்தியாவிலிருந்து வெள்ளையர்கள் வெளியேறிய பின் இந்திய விவசாயம் நிதானமாக தன் சுயத்தன்மைக்கு வந்து கொண்டு இருந்தது. 75 சதவிகித இந்தியர்கள் வாழ்ந்த கிராமப் புறங்களில் எந்த வித வளர்ச்சி ஊக்கிகளுக்கும் தட்டுப்பாடு இன்றி இருந்தது. பசுமை புரட்சியை இந்தியாவில் திணித்ததின் உண்மையான காரணம் நம் அரசால் முன்னுரிமை அளிக்கப் பட்ட நகர தொழில்துறை சார்ந்த வளர்ச்சியை ஊக்குவிற்பதற்காக, கெடும் தன்மை குறைவான சில தானியங்களை மட்டும் விற்பனைக்கு அதிகமான அளவில் உற்பத்தி செய்யும் குறுகிய லட்சியமே ஆகும். 

உங்களால் ஆர்வமுடன் முன் மொழியப்பட்ட புதிய ஒட்டுண்ணித்தனமான வேளாண்மை முதலாளிகளுக்கும் இடைத்தரகர்களுக்கும், அரசில் சக்தி வாய்ந்தவர்களுக்கும் மட்டுமே பயன்பட்டது. விவசாயிகளின் செலவு அதிகமானது, ஆனால் கிடைக்கும் நிகர லாபம் குறைய ஆரம்பித்தது. இதனுடன் சேர்ந்து மண்ணின் இயற்கை வளமும் குறைய ஆரம்பித்ததால் இந்த விவசாயிகள் கடனாளி யாகவோ அல்லது உயிரற்ற மண்ணுடன் கையில் ஒன்றுமில்லாமல் நிற்கும் சூழல் உருவானது. 

நிறைய விவசாயிகள் வேளாண்மை செய்வதையே விட்டு விட்டனர். இன்னும் பலர், கூடிக்கொண்டே போகும் செலவினங்களால் வேளாண்மையை விட்டு விட முடிவு செய்துள்ளனர். சத்தான நஞ்சற்ற உணவினை உற்பத்தி செய்யக்கூடிய உயிர்ம வேளாண் மையை இயற்கை நமக்கு அளவில்லாமல் அள்ளித் தந்திருக்கும்போது நாம் இவ்வாறு செய்வது மிகவும் துயரமானது.
ஏழ்மை, வேலை வாய்ப்பின்மை மற்றும் மக்கள் தொகை பெருக்கம் என்னும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடைய தொல்லைகளுக்கு ‘இந்திய வேளாண்மையின் இயற்கையான ஆரோக்கியத்தை மீளுருவாக்குவது ஒன்றே’ சரியான வழியாகும். 

வேளாண்மைக்கு தேவையான இடுபொருட்கள் மிகக்குறைவாக இருந்தால் மட்டுமே மிக அதிகமான மக்கள் வேளாண்மையை தேர்ந்தெடுத்து தன்னிறைவு அடைய முடியும். எனவே வேளாண்மை என்பது மிக குறைவான நிதி, மிகக் குறைவான இடுபொருட்கள், மிக குறைவான ஆயுதங்கள் (ஏர், மற்ற ஆயுதங்கள்), மிகக் குறைவான வேலை ஆட்கள் மற்றும் மிகக் குறைவான வெளித்தொழில் நுட்பங்கள் கொண்ட ஒன்றாக இருக்க வேண்டும். அப்போதுதான் அதிக செலவின்றி விளைச்சல் அதிகரிக்கும், வறுமை குறையும் மற்றும் மக்கள் தொகை வளர்ச்சி தானாகவே மட்டுப்படும். 

முற்காலத்தில் நாம் சுய சார்புடைய, வெளிப்பொருட்கள் தேவையில்லாத அல்லது குறைந்த அளவிலேயே தேவையான விவசாயம்தான் செய்து வந்தோம். யுத்தம் மற்றும் அந்நிய அடக்குமுறைக் காலங்களை தவிர நம் விவசாயிகள், அளவு குறைவானதாக இருந் தாலும் தேவைக்கதிகமான பல்பயிர்களை தற்சார்புடன் விளைவித்து வந்தனர். இவற்றில் குறிப்பாக குறுகிய கால ஆயுள் கொண்ட பயிர்கள் நகர நுகர்வோர்களுக்கு தர முடியாதவை. 

அதனால் நம் நாட்டின் விவசாயிகள் ஒற்றைப் பயிர்களான கோதுமை, அரிசி, சர்க்கரை ஆகியவற்றை (பாரம்பரிய முறையில் விளைவிக்கப்பட்டு வந்த பல்பயிர்களுக்கு, விலை கொடுத்து இடுபொருட்கள் வாங்கத் தேவை இல்லாத பல்பயிர்களுக்கு, மாற்றாக) வேதியியல் முறையில் விளைவிக்க இட்டுச்செல்லப்பட்டனர்.

முடிவாக


இந்தியாவுக்கு தேவையான பல்பயிர் உயிர்ம வேளாண்மை, மரங்கள் நடுதல் மற்றும் காடுகளை மீளுருவாக்கம் செய்தல் (உள்ளூர் சக்திகளுடனும், உரிமைகளுடனும்) போன்ற பரவலான மாற்றங்களை ஆதரிக்க தேவையான நேர்மை உங்களிடம் இருக்கிறது என்று நான் நம்புகிறேன். 

உங்களுடைய சந்தேகங்கள், கேள்விகள் எதுவானாலும் எழுத்து வடிவில் எனக்கு தெரிவித்தால் நான் அவற்றுக்கு விடை அளிப்பதில் மிக மகிழ்வேன். நான் தங்களை என் தோட்டத்திற்கு விருந்தினராக வரவேற்கிறேன் (தகுந்த முன்னறிவிப்பு செய்து செய்து விட்டு நீங்கள் வரலாம்). பல ஆண்டுகளாக நான் கல்பவிருட்சாவிற்கு உயிர்ம வேளாண்மையில் ஆர்வமுடைய விருந்தினர்களை விரிந்த கைகளுடன் அழைத்துக்கொண்டிருக்கிறேன், பார்வையாளர் நேரம் சனிக்கிழமைகளில் மதியம் 2 லிருந்து 4 மணி வரை, இன்றளவும்.

இறுதியாக, இந்தக் கடிதம் குஜராத்தியில் இருந்து ஆங்கிலத்திற்கு திரு. பாரத் மன்சடவினால் என்னுடனான குஜராத்தி உரையாடல்கள் மூலம் மொழி பெயர்க்கப்பட்டது என்பதைக் கூற விரும்புகிறேன். (இந்த கடிதத்துடன் காணப்படும் இணைப்புகள் அவருடைய வெளியாகவிருக்கும் ‘இயற்கை வேளாண்மை கொள்கை’, என்ற புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட சில குறிப்புகள், என்னுடைய அனுபவத்தில் இருந்து உண்டாக்கப்பட்ட குறிப்புகள்).
நீங்கள் என்னுடைய கருத்துடன் ஒப்புவமை கொண்டாலும் இல்லாவிட்டாலும் தங்கள் பதிலை எதிர்பார்க்கிறேன்.
தங்களுண்மையுள்ள,
பாஸ்கர் சாவே
நகல்:
(1) இந்திய பிரதமர்
(2) விவசாய துறை அமைச்சர்
(3) தலைவர், தேசிய ஆலோசனை குழு
(4) ஊடகங்கள்.

இணைப்புகள்


(இந்த தமிழாக்கத்துக்கு அவசியமானவை என்று கருதப்படுவன மட்டும் இணைக்கப்படுகிறது)
‘வேதியியல் வேளாண்மை - உயிர்ம வேளாண்மை ஒரு ஒப்பீடு’
1. வேதியியல் வேளாண்மை உயிர் ஊடு பாவுகளை சிதைக்கிறது. உயிர்ம வேளாண்மை அதனை முழுவதுமாக மதிக்கிறது.

2. வேதியியல் வேளாண்மை கரிம எண்ணையை சார்ந்து இருக்கிறது. உயிர்ம வேளாண்மை உயிர்ப்புடன் கூடிய மண்ணை சார்ந்து இருக்கிறது.

3.வேதியியல் விவசாயிகள் மண்ணை ஒரு உயிரற்ற ஊடகமாக பாவிக்கிறார்கள். உயிர்ம விவசாயிகள் மண்ணை உயிரியல் பன்மயத்துடன் காணப்படும் ஒரு ஊடகமாக பாவிக்கிறார்கள்.

4. வேதியியல் வேளாண்மை காற்று, நீர் மற்றும் மண்ணை மாசுபடுத்துகிறது. உயிர்ம வேளாண்மை அவற்றை சுத்தமாக்குவதோடு மீளுருவாக்கமும் செய்கிறது.

5. வேதியியல் வேளாண்மை அதிக நீரை பயன்படுத்தி நிலத்தடி நீரை வற்றிப்போகச் செய்கிறது. உயிர்ம வேளாண்மை குறைவான நீரையே பயன்படுத்தி, நிலத்தடி நீரை அதிகரிக்கச் செய்கிறது.

6. வேதியியல் வேளாண்மை ஒரு பயிர் வேளாண்மை என்பதால் வெவ்வேறான பயிர் சாகுபடியை அழிக்கிறது. உயிர்ம வேளாண்மை பல் பயிர் சாகுபடியை போற்றி பாதுகாக்கிறது.

7. வேதியியல் வேளாண்மை நச்சுத்தன்மை யோடு கூடிய உணவுகளை உண்டாக்குகிறது. உயிர்ம வேளாண்மை செழுமைப்படுத்தும் உணவுகளை உண்டாக்குகிறது.

8. வேதியியல் வேளாண்மையின் வரலாறு சிறிது, எதிர்காலம் இருண்டதாக இருக்கிறது. உயிர்ம வேளாண்மையின் வரலாறு பெரிது, எதிர்காலம் ஒளிமயமானது.

9. வேதியியல் வேளாண்மை இறக்குமதி செய்யப்பட்ட, மண்ணுக்கு உகந்ததல்லாத தொழில் நுட்பத்தை சார்ந்தது. உயிர்ம வேளாண்மை இந்தியாவிலேயே பரிணாம வளர்ச்சி அடைந்தது 

10. வேதியியல் வேளாண்மை, கல்வி மற்றும் கட்டமைப்புகள் மூலம் தவறாக பரப்பப்படுகிறது. உயிர்ம வேளாண்மை இயற்கையிலிருந்தும் விவசாயிகளின் அனுபவங்களில் இருந்தும் பரப்பப்படுகிறது.

11. வேதியியல் வேளாண்மை முதலாளிகளுக் கும் இடைத்தரகர்களுக்கும் நன்மை பயக்கிறது. உயிர்ம வேளாண்மை விவசாயிகளுக்கும், சுற்றுச்சூழலுக்கும் சமூகத்துக்கும் நன்மை பயக்கிறது.

12. வேதியியல் வேளாண்மை நம் கிராமங்களின் மற்றும் விவசாயிகளின் சுய சார்பையும், தன்மானத்தையும் உருவி விடுகிறது. உயிர்ம வேளாண்மை அவற்றை மீட்டு எடுத்து பலப்படுத்துகிறது.

13. வேதியியல் வேளாண்மை கடன் சுமைக்கும் ஏழ்மைக்கும் விவசாயியை தள்ளுகிறது. உயிர்ம வேளாண்மை அவர்களை கடனில் இருந்தும் மற்ற தொல்லைகளில் இருந்தும் விடுவிக்கிறது.

14. வேதியியல் வேளாண்மை வன்முறை யானது, சிதைப்பது. உயிர்ம வேளாண்மை வன்முறையற்றது, ஒத்திசைந்தது.

15. வேதியியல் வேளாண்மை ‘ஆழமற்ற’ பசுமை புரட்சி. உயிர்ம வேளாண்மை உண்மையான பசுமை புரட்சி.

16. வேதியியல் வேளாண்மை வணிக மயமானது, எந்தவொரு கொள்கை பிடிப்பும் இல்லாதது. உயிர்ம வேளாண்மை ‘கட்டுப்படுத்தும் உண்மை’ மற்றும் ஆன்மீகத்தை மூலமாக கொண்டது. 

17. வேதியியல் வேளாண்மை என்பது தற்கொலை, வாழ்விலிருந்து சாவை நோக்கி செல்வது. உயிர்ம வேளாண்மை அதினின்று மீண்டு வருவதற்கான சாலை.

18. வேதியியல் வேளாண்மை வணிகம் மற்றும் அடக்குமுறை சார்ந்தது. உயிர்ம வேளாண்மை கலாச்சாரம் மற்றும் இணை-பரிணாம வளர்ச்சியை நோக்கியது.



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விழலுக்கு இறைத்த நீர்

விழலுக்கு இறைத்த நீர்... என்னை சிந்திக்க வைத்த சொற்றொடர் இது.  பலனளிக்காத முயற்சியின் தோல்வியை சுட்டவே பெரும்பாலும் பயன்படுத்துகிறோம். இதன் கருப்பொருள் வேறாகவும் இருக்கலாம்... விழல் = களை = களையப்படவேண்டிய, நமக்கு அவசியமற்ற பயிர். நமக்கு அவசியமான பயிர்கள் மட்டுமே நம் வயலில் இருக்கவேண்டும். அப்போது மட்டும்தான் பஞ்ச பூத முழு சக்தியும் நமக்கு வேண்டிய பயிருக்கு கிட்டும், அதற்கு மட்டுமே கிட்டும். இந்த சித்தாந்த அடிப்படையில்தான் மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகள் வேறோடு பிடுங்கப்பட்டு, தேயிலையும் காபியும் பயிராச்சி (நாமள்லாம் அப்போ வெள்ளக்காரங்களே!). இந்த சித்தாந்த அடிப்படையிலதான் சம வெளிகளிலும் காடுகள் நம்மால் சிதைக்கப்பட்டு நெல், கோதுமை, கரும்பு, வாழை என மாறிப்போயின. இதே அடிப்படையில்தான் பல உயிரினங்கள் நம் ஆக்கிரமிப்புக்கு அடிபணிந்து ஏற்கனவே விடைபெற்றோ அல்லது விடைபெற்றுக்கொண்டோ இருக்கின்றன. நிலத்தில் மட்டுமல்ல, நீரிலும்தான்; 'என்னது ஆஸ்திரேலியால பவளப்பாறைகளை காணுமா?!!! அது வேற பஞ்சாயத்துபா!'. இதெல்லாம் நிகழக்கூடாதென்றுதான் அன்று நம் ஆட்கள் விழல...

சிறுக கட்டி பெருக வாழ்

சிறுக கட்டி பெருக வாழ்! கேள்விப்பட்டிருக்கிறோம். படித்திருக்கிறோம். சிறிதாய் தொடங்கி ஆல் போல் வளர்ந்து என வணிகம் பேசியிருக்கிறோம். அளவாய் வீடு கட்டி சுற்றம் சூழ்ந்து பெருக மகிழ்வாய் வாழ்தல் என முயற்சிக்கிறோம். இவையெல்லாவற்றையும் தாண்டிய புரிதல் ஒன்று வேண்டும். சிறுக கட்டி - சிறு வீடு கட்டி, பெருக - பல்லுயிர் பெருக, நாமும் வாழ்வோம் என்பதாகவும் இதன் பொருள் இருக்கலாம். பாரதி கனவு கண்ட காணி நில வாழ்வும் இதுவே, பில் மோலிசன் கற்றுத்தந்த பெர்மாகல்ச்சரும் (ஒருங்கிணைந்த பண்ணையம்) இதுவே, காந்தி மற்றும் புகுவோகா பரப்பிய சுயசார்பு பண்ணை வாழ்வும் இதுவே! பெரிதாய் கட்டி சிறிதாய் வாழ்ந்துவிட்டுப்போகும் நமக்காகவே சொல்லப்பட்டது, அன்றே! உணவு வீணாவதைப்பற்றி ஐ.நாவில் கூட்டம் கூட்டமாய் விவாதித்து புள்ளி விபரங்கள், அறிக்கைகள் பதிப்பிக்கிறார்கள். இந்தியாவில் 40 சதம் வீணாகிறதாம். நம் வாழ்வியல் அறியாது எழுதித்தள்ளுகிறார்கள். உணவு மீந்தால் / ஒரு இலை வீட்டிலிருந்து வெளியே விழுந்தால்கூட ஒரு கூட்டமே (மனிதர் முதல் பூச்சி வரை) அதிலிருந்து உண்ணும் இங்கு! இதில் வீணாவதெங்கு?! ...

எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை

+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+- கேன்சர் கட்டிகள் சுமக்கும் எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை. -+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+ வெண்மைப்புரட்சிக்கு முந்தைய இந்தியாவில் (1960 களுக்கு முன்) பால் வியாபாரத்துக்காக யாரும் மாடுகளை வளர்த்ததில்லை. சர்க்கரை, தேயிலை, காபி என வணிகப்பயிர்களும், வணிகமும் நாம் நாட்டில் வேரூன்றியபோது அவர்களை திகைக்கவைத்தது நமது மக்களின் பால் மோகமற்ற வாழ்வு. கிராமங்கள் சார்ந்த அவ்வாழ்வில் பால் என்பது குழந்தைகளுக்கான உணவு, எனவே அது விற்பனைக்கல்ல. அவ்வளவே.  கிடைத்த இலைகளையெல்லாம் நீரில் கொதிக்கவைத்து பருகிய நம் மக்களை டீ, காபி நோக்கி நகர்த்த முதலில் அவற்றை இலவசமாய் தந்து, பின் பாலுடன் சேர்த்தால் சுவைகூடுமென காட்டி, வருடம் முழுவதும் கிடைக்காத பாலை கிடைக்கவைக்க வணிகம் கையிலெடுத்த ஆயுதம் என்ன தெரியுமா? 'பாலுக்காக மாடு வளர்த்தால் சில வருடங்களிலேயே பணக்காரராகிவிடலாம்! உங்கள் நாட்டு மாடுகள் வருடத்தில் சில மாதங்களே கறவையில் இருப்பதால் அவை உங்கள் கனவுகளுக்கு இடையூறு. நாங்கள் இலவசமாய் தரும் மாடுகள் அமிர்...