முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

வசந்த்த முல்லை போலே வந்து...

கடந்த நாற்பதாண்டுகளில் நம்மைச்சுற்றி எவ்வளவோ மாற்றங்கள் மிக வேகமாக நிகழ்ந்துகொண்டிருக்கின்றன. இவற்றில் மாறாது இருக்கும் சிலவற்றில் சினிமாவும் ஒன்று.


திரைத்தொழில்நுட்பங்களும் வெகுவேகமாக மாறினாலும் சினிமா தரும் மேஜிகல் உணர்வு மட்டும் இன்னும்  அப்படியே மாறாதிருக்கிறது.


சினிமா என்பது எத்தகைய ஒரு மகத்தான ஆயுதம் என Gen Z பசங்களுக்கு கார்த்திக் சுப்புராஜ் தந்த ஜிகர்தண்டா XX, என்னை வேறொரு நினைவுத்தளத்திற்கு இழுத்துச்சென்றது.


வலிவலம் வலிவலம் என்றொரு சிற்றூர். அந்த ஊரில் 1980களில் ஒரே ஒரு டெண்ட் கொட்டாய். அதில் மொக்கை படங்கள் ஓடிக்கொண்டிருக்கையில் பக்கத்து சிற்றூர் ஒன்றில் நல்ல படம் ஏதாவது ஓடினால் சைக்கிளிலோ அல்லது நடந்து சென்றோ படம் பார்க்கும் கூட்டம் நிறைந்த சமூகம் அது.


எனது தாய்மாமா ஒருவரின் சைக்கிளின் பின்னிருக்கையில் ஒரு பௌர்ணமி இரவில் நான் அமர்ந்திருக்க, பகல் முழுதும் வேளாண் சார்ந்த பல அலுவல்களை முடித்து களைத்திருந்தாலும் சிவாஜி படம் பார்க்கும் ஆர்வம் அவரை உந்த, துணைக்கு அரை டவுசர் போட்ட என்னை டபுள்ஸ் மிதித்து ஐந்து கிலோ மீட்டர் நீளும் விளக்கு வெளிச்சமற்ற அந்த குறுகிய சாலையில் பயணித்து, அருகிலுள்ள சிற்றூருக்கு Just in Time வந்து, திருவிழாக்கூட்ட டிக்கட் கவுண்டரில் முண்டியடித்து நுழைந்து டிக்கட்டு வாங்கி, இருட்டில் தட்டுத்தடுமாறி காலி நாற்காலிகளை கண்டுபிடித்து அமர்ந்து சுதாரிப்பதற்குள் "விர்ர்ர்" ரென ஓசையோடு எங்கள் தலைக்கு பின்புறம் உயரத்திலிருந்து ஒரு ஒளிக்கற்றை பெருகி எதிரில் இருக்கும் வெள்ளைத்திரையை வெள்ளித்திரையாக்கி, சிவாஜி வந்தாச்சு!


மணல் தரை மற்றும் நாற்காலி வரிசை என இரண்டே பிரிவுகள்தான். அம்புட்டும் சனங்களால் நிறைந்திருக்கும் அந்த பின்னிரவிலும்.


சாரங்கதாரா திரைப்படம், "இந்தப்புறா ஆடவேண்டுமென்றால் இளவரசர் பாட வேண்டும்" என நாயகி ராஜசுலோசனா சொல்ல, இளவரசர் சிவாஜி "வசந்த்த முல்லை போலே வந்து அசைந்து ஆடும் பெண் புறாவே" என வாயசைக்க, டெண்ட் கொட்டாயெங்கும் கைத்தட்டலும் விசிலும் பறக்கும்.

கதை பெரிதாக நினைவில்லாவிட்டாலும் பாடல்களை 'பண்ணெண்டு, பைமூணு' என விரல் விட்டு கவனமாய் எண்ணியது நினைவில் இருந்தது.


இன்னொன்றும் அன்று நினைவில் பதிந்தது:


இடைவேளை நேரத்தில் கண்ணில் தென்பட்ட ஆண் பெண் முகங்களெல்லாமே வெள்ளாமைக்காட்டில் பகல் முழுதும் வெய்யிலில் வறுபட்டு வேலை செய்து களைத்த முகங்களே. ஆனால் அந்த முகங்கள் அனைத்திலும் எத்தனை பரவசம்! எத்தனை மகிழ்ச்சி! 


தின வாழ்வை நகர்த்தவே போராடி வயிறு வளர்த்தவர்களின் வடிகாலாக, சிறிது நேரப்பரவசமாக, அன்றைய தினத்தின் ஒரே மகிழ்ச்சி நிகழ்வாக சினிமா இருந்தது அன்று. அந்த மகிழ்வை பெருக்க, இருக்கவே இருக்கிறது பவண்டோ மற்றும் காளி மார்க்கு கலர் சோடாக்கள்!


நாற்பது வருடங்களில் பலதும் மாறிப்போனாலும் இந்த "எளிய மக்களுக்கு இளைப்பாறும் உணர்வை தரும் படங்கள் மட்டுமே" இன்றுவரை பெருவெற்றி அடைந்திருக்கின்றன, ஒரு சில விதிவிலக்குகள் தவிர. இன்று திரைப்படம் எடுக்கும் எத்தனை பேரை இந்த உண்மை "இயக்குகிறது"? இன்று படம் பார்த்து வெளியே வரும் எத்தனை பேர் இளைப்பாறிய புத்துணர்வோடு வெளியே வருகிறோம்?


அன்றைய பின்னிரவில் படம் முடிந்து வெளியே வந்தால், சைக்கிள் டயர் பஞ்ச்சர்!


சைக்கிளை தள்ளிக்கொண்டு சினிமாவை விமர்சித்துக்கொண்டே மாமா நடக்க, சைக்கிள் சீட்டை ஒரு கையிலும் உயிரை இன்னொரு கையிலும் பிடித்துக்கொண்டே நான்! 

ஆள் அரவமற்ற சாலை, பௌர்ணமி இரவு, சில்வண்டு + தவளைகளின் இரைச்சல் மற்றும் நாய்களின் கோஷ்டி கானம் (துஷ்ட சக்திகளின் ஆற்றல் அந்த இரவில்தான் பயங்கரமாக இருக்கும் என சிற்றூரின் கதை சொல்லிகள் வண்டி வண்டியாய் சொல்லியிருந்த பேய் பிசாசு ஏவல் பில்லி சூனியம் ரத்தக்காட்டேரிகள் எல்லாம் நான் தாண்டி நடந்த ஓவ்வொரு புதரின் பின்னும் ஒளிந்திருப்பதாக கற்பனை செய்துகொண்டு) தந்த உச்ச பயத்தில் நான்... பத்து நிமிடத்திற்கொரு முறை நடப்பதை நிறுத்தச்சொல்லி, புதர்கள் இல்லாத சாலை ஓரமாக தேடித்தேடி ஒன் பாத்ரூம் ப்ரேக் ("கெளம்பறதுக்கு முந்தி ஒரு பானை தண்ணியை குடிச்சிட்டு வந்தியோ?!" என மாமாவின் கிண்டல் சிரிப்பு) என அந்த ஐந்து கிலோ மீட்டர்களை கடந்து ஊர் வந்து சேர்கையில் பின்னிரவு தாண்டி விடிவெள்ளியும் வந்தாச்சு!


படம் பார்த்து வீடு சேர்ந்து மறு நாளில் இருந்து வீட்டில் சித்திகள் சேர்த்து வைத்திருந்த சாணித்தாள் பாட்டு புத்தகங்களை (ஒரு நாலு அல்லது எட்டு பக்கம் மட்டுமே இருக்கும் கையடக்க நூல்கள்) ஆளுக்கு ஒருவராய் விரித்து...ஒரே கர்ண கடூர பாடல் மழையும் அதற்கான பரிசு (!) வசவுகளும் வீடெங்கும் இறைந்து கிடக்கும்...


வாழ்வில் மகத்தான பல தொழில்நுட்ப பயன்பாடுகள் வந்துவிட்டாலும் அந்த சிற்றூரின் பவுர்ணமி இருள் சாலையும் அந்த வெள்ளித்திரையும் தந்த உணர்வுகளுக்கு அருகில் இன்று வரையில் வேறெதுவும்  நெருங்கக்கூட முடியவில்லை.


சினிமா மட்டுமல்லாது நவீன சமூக ஊடகங்களும் எளியோரின் சுமைகளை சற்றே இறக்கி வைத்து இளைப்பாறுதல் தரும் இடமாக இருக்கும் வரையில் நலமே. அதை விட்டுவிட்டு, 'அங்க கோயில / மசூதிய / சர்ச்ச இடிச்சிட்டானுவளாம்!", 'நாளைக்கு 300 கிமீ வேகத்தில புயலு கரய கடக்கப்போவுதாம்', "அதிர்ச்சித்தகவல்: வாணியம்பாடியில் சற்று முன்பு மூன்று ஏலியன் குட்டிகள் கண்டெடுக்கப்பட்டன" என்பதாக செய்திகள் பரப்பி கலவரம் / பயம் / பதட்டம் உற்பத்தி செய்யும் ஆலைகளாக மாறிப்போனது நாகரிக வளர்ச்சியின் பேரவலம்!


சமூக வலைத்தளங்கள் நம் ஒவ்வொருவரையும் ஒரு படைப்பாளியாக மாற்றும் ஆற்றல் கொண்டவை. படைப்பதும் அழிப்பதும் வேறு வேறு செயல் என்கிற அடிப்படை புரிதல் தொடர்ந்தால் மட்டுமே நல்லது நிகழும், சாதி மத மொழி இன வேறுபாடுகளின்றி எளியவர் இளைப்பாற முடியும். 


அப்படி ஈசியா இளைப்பாற விட்டுடுவமா நாம?!


பேரன்புடன்,

பாபுஜி


Picture Credit: The Times of India news article



கருத்துகள்

  1. அருமையான நினைவலைகள்🙏. திரைக் காவியங்கள், திரைச்சுவைகள், திரை ஓட்டங்கள் என பல உணர்வு நிலைகளை கடந்து இன்று பெரும்பாலும் திரைக்கூடங்களில் பாப்கார்ன் சுவை மட்டுமே நினைவில் நிற்கும் கொடுமையை என்ன சொல்ல?

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விழலுக்கு இறைத்த நீர்

விழலுக்கு இறைத்த நீர்... என்னை சிந்திக்க வைத்த சொற்றொடர் இது.  பலனளிக்காத முயற்சியின் தோல்வியை சுட்டவே பெரும்பாலும் பயன்படுத்துகிறோம். இதன் கருப்பொருள் வேறாகவும் இருக்கலாம்... விழல் = களை = களையப்படவேண்டிய, நமக்கு அவசியமற்ற பயிர். நமக்கு அவசியமான பயிர்கள் மட்டுமே நம் வயலில் இருக்கவேண்டும். அப்போது மட்டும்தான் பஞ்ச பூத முழு சக்தியும் நமக்கு வேண்டிய பயிருக்கு கிட்டும், அதற்கு மட்டுமே கிட்டும். இந்த சித்தாந்த அடிப்படையில்தான் மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகள் வேறோடு பிடுங்கப்பட்டு, தேயிலையும் காபியும் பயிராச்சி (நாமள்லாம் அப்போ வெள்ளக்காரங்களே!). இந்த சித்தாந்த அடிப்படையிலதான் சம வெளிகளிலும் காடுகள் நம்மால் சிதைக்கப்பட்டு நெல், கோதுமை, கரும்பு, வாழை என மாறிப்போயின. இதே அடிப்படையில்தான் பல உயிரினங்கள் நம் ஆக்கிரமிப்புக்கு அடிபணிந்து ஏற்கனவே விடைபெற்றோ அல்லது விடைபெற்றுக்கொண்டோ இருக்கின்றன. நிலத்தில் மட்டுமல்ல, நீரிலும்தான்; 'என்னது ஆஸ்திரேலியால பவளப்பாறைகளை காணுமா?!!! அது வேற பஞ்சாயத்துபா!'. இதெல்லாம் நிகழக்கூடாதென்றுதான் அன்று நம் ஆட்கள் விழல...

சிறுக கட்டி பெருக வாழ்

சிறுக கட்டி பெருக வாழ்! கேள்விப்பட்டிருக்கிறோம். படித்திருக்கிறோம். சிறிதாய் தொடங்கி ஆல் போல் வளர்ந்து என வணிகம் பேசியிருக்கிறோம். அளவாய் வீடு கட்டி சுற்றம் சூழ்ந்து பெருக மகிழ்வாய் வாழ்தல் என முயற்சிக்கிறோம். இவையெல்லாவற்றையும் தாண்டிய புரிதல் ஒன்று வேண்டும். சிறுக கட்டி - சிறு வீடு கட்டி, பெருக - பல்லுயிர் பெருக, நாமும் வாழ்வோம் என்பதாகவும் இதன் பொருள் இருக்கலாம். பாரதி கனவு கண்ட காணி நில வாழ்வும் இதுவே, பில் மோலிசன் கற்றுத்தந்த பெர்மாகல்ச்சரும் (ஒருங்கிணைந்த பண்ணையம்) இதுவே, காந்தி மற்றும் புகுவோகா பரப்பிய சுயசார்பு பண்ணை வாழ்வும் இதுவே! பெரிதாய் கட்டி சிறிதாய் வாழ்ந்துவிட்டுப்போகும் நமக்காகவே சொல்லப்பட்டது, அன்றே! உணவு வீணாவதைப்பற்றி ஐ.நாவில் கூட்டம் கூட்டமாய் விவாதித்து புள்ளி விபரங்கள், அறிக்கைகள் பதிப்பிக்கிறார்கள். இந்தியாவில் 40 சதம் வீணாகிறதாம். நம் வாழ்வியல் அறியாது எழுதித்தள்ளுகிறார்கள். உணவு மீந்தால் / ஒரு இலை வீட்டிலிருந்து வெளியே விழுந்தால்கூட ஒரு கூட்டமே (மனிதர் முதல் பூச்சி வரை) அதிலிருந்து உண்ணும் இங்கு! இதில் வீணாவதெங்கு?! ...

பெரிதினும் பெரிது கேள்!

பெரிதினும் பெரிது கேள்னு சொல்லிட்டுப்போனவன் ஒழுங்காதான் சொல்லிட்டு போனான், நாமதான் தப்பு தப்பா எதையெதையோ கேட்டுகிட்டிருக்கோம்... வணிகம், பெருவணிகம் பேராசைப்பெருவணிகம் - அப்டீன்னா இன்னாபா? வணிகம், பண்டமாற்றில் தொடங்கியது; எப்போதென்று யாருக்கும் தெரியாது. பண்டம் உற்பத்திப்பொருளில் இருந்து சோழிகளுக்கும், உப்புக்கும் மாறி பின்னர் 'உலகமயமாக்கலின்' (ஆயிரம் வருடங்கள் முன்னரே இது நடந்தாச்சிபா!) தேவைக்காக உலோக நாணயங்களாக மாறி, வழிப்பறிக்கு பயந்து காகிதமாகி, இன்று 'வழிப்பறி' (tax rules of different geographies I mean :-) தாண்டி மாயக்காசுகளாய் (பிட்டு காயின்ங்ணா, இது வேற பிட்டுங்ணா!) அசுவத்தாமன் ஆவி போல 24*7 அலைந்துகொண்டே இருக்க சபிக்கப்பட்டிருக்கிறது :-) வணிகம் பெருத்து பெருவணிகமானபின்பும் எல்லாம் நல்லாத்தான் போய்கிட்டிருந்தது, பேராசை அதனுடன் இணையும் வரை. அதுக்கப்பறம் வந்ததெல்லாம் பேராசைப்பெருவணிகந்தேன்! பெருவணிகம் (corporates) தவறல்ல, அறம் சார்ந்ததாய் இருக்குமானால். பெருவணிகத்துக்கான தேவையை 1947 க்கு முந்தைய இந்திய நிலையை நினைவில் நிறுத்தி உணரும் ந...