முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

விதைப்போக்கன்



மழை பெய்துகொண்டிருந்த ஒரு முன்னிரவு வேளையில் உறவினர் ஒருவர் சில முறை தொடர்பு கொள்ள முயன்றதை தொலைபேசி காட்டியது.


அழைத்தேன்.


சில நிமிடங்கள் பேசிக்கொண்டிருந்துவிட்டு, 'பாபு, உங்களோட ஒருத்தர் பேசணும்னு கேட்டுகிட்டே இருக்காரு. கான்ஃபரன்ஸ் காலில் அவரையும் அழைக்கட்டுமா?' என்றார்.


யார் என வினவினேன். 


'சொந்தகாரப்பையன்தான். சின்ன வயசில எங்களோட கல்யாணத்தில உங்க அறிமுகம் கெடைச்சதாம். பல வருசம் கழிச்சி இப்போ லீவுல ஊருக்கு வந்திருக்கார். வந்து என்னை பாத்ததில் இருந்து உங்களோட பேசணும்னு சொல்லிகிட்டே இருக்கார். இதோ இப்ப அவரை லைன்ல கூப்டுறேன்' என்றார்.


'அத்தான்! எப்டி இருக்கீங்க அத்தான்!' என ஒரு குரல்!


நானே மெய்யழகன் படம் பார்த்தபின்பு இன்றுவரை என் தஞ்சாவூரில் இருக்கும் சில மெய்யழகன்கள் நினைவுக்கு வந்து சில மாதங்களாய் அதன் தாக்கத்தில் சுற்றிக்கொண்டிருக்கும்போது இது யாரு இன்னொருத்தர்! என்கிற எண்ணம் மனதிலாட, பேசினேன்.


'நான் குமார் பேசறேன்த்தான்! அண்ணன் கல்யாணத்திலதான் ஒங்கள பாத்தேன்... பாத்தோம். அப்போ நாங்கள்லாம் சின்ன பசங்க. லக்‌ஷ்மாங்குடி கிராமத்திலேந்து சென்னைக்கு கல்யாணத்துக்காவ மொத மொதலா வந்திருக்கோம். நீங்க வெளிநாட்ல அப்ப வேலை பாத்திட்டிருந்தீங்க. கல்யாணத்துக்காவ வந்திருந்தீங்க. அப்பதான் ஒங்கள மொத மொத பாத்தேன்' என தொடங்கினார்.


எனக்கு சத்தியமாய் நினைவில் இல்லை. 'நேரில் பாத்தால் கண்டிப்பாய் நினைவு வரும்' என என் மனதில் தோன்றியதை அவரிடம் சொன்னேன்.


'பரவால்லத்தான். நாங்கள்லாம் அப்ப ஒங்ககிட்ட பேசவே தயங்கிகிட்டு, தூரத்லேந்து பாத்துகிட்டிருந்தோம். கழுத்தில கேமரா மாட்டிகிட்டு போட்டோ எடுத்திட்டிருந்தீங்க. பெரிய படிப்பு படிச்சிருக்கீங்க. வெளிநாட்ல இருக்கீங்க. நாங்கள்லாம் லக்‌ஷ்மாங்குடி பசங்க (அப்போது அது மிகச்சிறிய கிராமம்)... எங்ளோடல்லாம் பேசமாட்டீங்கன்னு நாங்கள்லாம் நெனச்சோம் ஆனா நீங்களாவே வந்து எங்க எல்லாரோடயும் ஜாலியா சரிசமமா பேசினீங்க.... அன்னைக்கு முடிவு பண்ணேன்த்தான்... நாமளும் இவர மாதிரி படிச்சி பெரிய ஆளாவணும்டா. வெளிநாடெல்லாம் போவணும். அப்பயும் நம்ம மக்கள் எல்லாரோடயும் நல்லா பழகணும்னு' என்று ஒரு இடைவெளி விட்டார்.


நெகிழ்ந்திருந்தேன்.


'இப்போ எங்க இருக்கீங்க? என்ன செய்றீங்க?' என்றேன்.


தான் யு.எஸ் இல் இருப்பதாகவும் ஒரு பெரிய மென்பொருள் நிறுவனத்தில் பல ஆண்டுகளாக பணிபுரிவதாகவும் மிக நிறைவுடன் பகிர்ந்தார்.


'ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு குமார். நான் ஆக்சுவலா ஒண்ணுமே செய்யல. நான் just நானாதான் இருந்தேன். உங்களோட உழைப்பு + நம்பிக்கைதான் உங்கள இவ்ளோ உயரத்துக்கு கொண்டுவந்திருக்கு. நிச்சயமாய் இன்னும் பல ஆண்டுகள் கழித்து வேறு யாராவது ஒருவர் உங்களை அழைத்து / சந்தித்து, நீங்கள் எப்படி அவருக்கு ஒரு உந்து விசையாக மாறினீர்கள் என உங்களிடம் பகிர்வார்! வாழ்த்துகள்' என்றேன் சற்றே நனைந்த குரலில்.


'நல்லதுத்தான். கண்டிப்பா அடுத்த முறை நேர்ல சந்திக்கிறேன். இப்ப ரொம்ப ஷார்ட் லீவ்த்தான்' என்றவர், 'இதுக்கு முன்னாடியே ஒங்கள பத்தி பேசிகிட்டே இருப்பேன். ஆனா இப்ப நீங்க என்ன செய்றீங்கன்னு அண்ணன் சொன்னதும்தான், ஒடனே ஒங்களோட பேசதும்னு ஒரு நெனப்பு உள்ளுக்கள்ள சொழல ஆரம்பிச்சிடுச்சி. சந்தோஷம்த்தான். நானும் ஒருநாள் இயற்கை விவசாயம் செய்வேன்த்தான்!' என்றார். 


'கண்டிப்பா அடுத்த முறை வரும்போது சொல்லுங்க. தோட்டத்துக்கு கூட்டிப்போறேன்' எனச்சொல்லி தொலைபேசியில் விடை பெற்றேன்.


நான் என்ன பெரிதாய் சாதித்துவிட்டேன்? எதுவுமில்லை... ஆனால் என்றோ ஒரு நாள் நான் இயல்பாய் உரையாடியதையே உந்து விசையாக கொண்டு தன் முயற்சியிலே ஒரு மனிதன் உயரம் தொட்டிருக்கிறான். பிறிதொரு நாளில் இயற்கை வேளாண்மையையும் கையிலெடுக்க உறுதிகொண்டிருக்கிறான்...


பேசி முடித்தபின் மூன்று எண்ணங்கள் என்னுள்ளே மெல்ல சுழலத்தொடங்கின. இன்னும் சுழன்றுகொண்டிருக்கின்றன...


1. என் பெற்றோர் என்னை நல்லவிதமாக செதுக்கியிருக்கிறார்கள். என் சுற்றமும், நட்பும்கூட அவ்விதமே. அவர்களுக்கு பலகோடி நன்றிகள்.


2. நான் எந்தப்பலனையும் எதிர்பாராமலே தேர்ந்தெடுத்து மேற்கொண்டிருக்கும் பயணம், சரியான திசையில், சரியான பாதையில்தான் தொடர்கிறது. என்னிடமிருந்து தவறி விழுந்த விதைகளும் எங்கோ எவர் மனதிலோ தழைத்துக்கொண்டிருக்கின்றன. 


3. "The one who plants trees, knowing that he will never sit in their shade, has at least started to understand the meaning of life"


தாகூரின் 'எந்த ஒருவன், தான் ஊன்றி வளர்த்த மர நிழலில் தானே ஒருபோதும் அமரப்போவதில்லை என்பது தெரிந்தும் மரங்கள் வளர்க்கிறானோ அவன்தான் வாழ்வென்பது என்னவென உணரத்தொடங்கியிருக்கிறான்' என்கிற கூற்றின் பொருள் இப்போது விளங்குகிறது!


பேரன்புடன்,

பாபுஜி


பின் குறிப்பு: விதைப்போக்கன் - தான் சுமந்து திரியும் விதைகள் தனது பாதையில் சிதறியதை  அறியாது பயணம் செய்யும் வழிப்போக்கன்.

கருத்துகள்

  1. நீங்கள் விதைப்போக்கன் தான். 😀. இன்னும் இந்த தன்னடக்கம் உங்களுக்கு தனித்தன்மை 🙏... இன்னுமா பல வழிப்போக்கர்கள் நீங்கள் நட்ட நடந்த பூஞ்சோலையில் இளைப்பாறவில்லை. அப்படி தங்கிச் செல்லும் போது குறைந்த பட்சம் இரண்டு விதைகளை எடுத்து செல்வார்கள்... வாழ்க்கையை, நம்பிக்கை யை நடுவதற்கு🙏

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விழலுக்கு இறைத்த நீர்

விழலுக்கு இறைத்த நீர்... என்னை சிந்திக்க வைத்த சொற்றொடர் இது.  பலனளிக்காத முயற்சியின் தோல்வியை சுட்டவே பெரும்பாலும் பயன்படுத்துகிறோம். இதன் கருப்பொருள் வேறாகவும் இருக்கலாம்... விழல் = களை = களையப்படவேண்டிய, நமக்கு அவசியமற்ற பயிர். நமக்கு அவசியமான பயிர்கள் மட்டுமே நம் வயலில் இருக்கவேண்டும். அப்போது மட்டும்தான் பஞ்ச பூத முழு சக்தியும் நமக்கு வேண்டிய பயிருக்கு கிட்டும், அதற்கு மட்டுமே கிட்டும். இந்த சித்தாந்த அடிப்படையில்தான் மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகள் வேறோடு பிடுங்கப்பட்டு, தேயிலையும் காபியும் பயிராச்சி (நாமள்லாம் அப்போ வெள்ளக்காரங்களே!). இந்த சித்தாந்த அடிப்படையிலதான் சம வெளிகளிலும் காடுகள் நம்மால் சிதைக்கப்பட்டு நெல், கோதுமை, கரும்பு, வாழை என மாறிப்போயின. இதே அடிப்படையில்தான் பல உயிரினங்கள் நம் ஆக்கிரமிப்புக்கு அடிபணிந்து ஏற்கனவே விடைபெற்றோ அல்லது விடைபெற்றுக்கொண்டோ இருக்கின்றன. நிலத்தில் மட்டுமல்ல, நீரிலும்தான்; 'என்னது ஆஸ்திரேலியால பவளப்பாறைகளை காணுமா?!!! அது வேற பஞ்சாயத்துபா!'. இதெல்லாம் நிகழக்கூடாதென்றுதான் அன்று நம் ஆட்கள் விழல...

சிறுக கட்டி பெருக வாழ்

சிறுக கட்டி பெருக வாழ்! கேள்விப்பட்டிருக்கிறோம். படித்திருக்கிறோம். சிறிதாய் தொடங்கி ஆல் போல் வளர்ந்து என வணிகம் பேசியிருக்கிறோம். அளவாய் வீடு கட்டி சுற்றம் சூழ்ந்து பெருக மகிழ்வாய் வாழ்தல் என முயற்சிக்கிறோம். இவையெல்லாவற்றையும் தாண்டிய புரிதல் ஒன்று வேண்டும். சிறுக கட்டி - சிறு வீடு கட்டி, பெருக - பல்லுயிர் பெருக, நாமும் வாழ்வோம் என்பதாகவும் இதன் பொருள் இருக்கலாம். பாரதி கனவு கண்ட காணி நில வாழ்வும் இதுவே, பில் மோலிசன் கற்றுத்தந்த பெர்மாகல்ச்சரும் (ஒருங்கிணைந்த பண்ணையம்) இதுவே, காந்தி மற்றும் புகுவோகா பரப்பிய சுயசார்பு பண்ணை வாழ்வும் இதுவே! பெரிதாய் கட்டி சிறிதாய் வாழ்ந்துவிட்டுப்போகும் நமக்காகவே சொல்லப்பட்டது, அன்றே! உணவு வீணாவதைப்பற்றி ஐ.நாவில் கூட்டம் கூட்டமாய் விவாதித்து புள்ளி விபரங்கள், அறிக்கைகள் பதிப்பிக்கிறார்கள். இந்தியாவில் 40 சதம் வீணாகிறதாம். நம் வாழ்வியல் அறியாது எழுதித்தள்ளுகிறார்கள். உணவு மீந்தால் / ஒரு இலை வீட்டிலிருந்து வெளியே விழுந்தால்கூட ஒரு கூட்டமே (மனிதர் முதல் பூச்சி வரை) அதிலிருந்து உண்ணும் இங்கு! இதில் வீணாவதெங்கு?! ...

பெரிதினும் பெரிது கேள்!

பெரிதினும் பெரிது கேள்னு சொல்லிட்டுப்போனவன் ஒழுங்காதான் சொல்லிட்டு போனான், நாமதான் தப்பு தப்பா எதையெதையோ கேட்டுகிட்டிருக்கோம்... வணிகம், பெருவணிகம் பேராசைப்பெருவணிகம் - அப்டீன்னா இன்னாபா? வணிகம், பண்டமாற்றில் தொடங்கியது; எப்போதென்று யாருக்கும் தெரியாது. பண்டம் உற்பத்திப்பொருளில் இருந்து சோழிகளுக்கும், உப்புக்கும் மாறி பின்னர் 'உலகமயமாக்கலின்' (ஆயிரம் வருடங்கள் முன்னரே இது நடந்தாச்சிபா!) தேவைக்காக உலோக நாணயங்களாக மாறி, வழிப்பறிக்கு பயந்து காகிதமாகி, இன்று 'வழிப்பறி' (tax rules of different geographies I mean :-) தாண்டி மாயக்காசுகளாய் (பிட்டு காயின்ங்ணா, இது வேற பிட்டுங்ணா!) அசுவத்தாமன் ஆவி போல 24*7 அலைந்துகொண்டே இருக்க சபிக்கப்பட்டிருக்கிறது :-) வணிகம் பெருத்து பெருவணிகமானபின்பும் எல்லாம் நல்லாத்தான் போய்கிட்டிருந்தது, பேராசை அதனுடன் இணையும் வரை. அதுக்கப்பறம் வந்ததெல்லாம் பேராசைப்பெருவணிகந்தேன்! பெருவணிகம் (corporates) தவறல்ல, அறம் சார்ந்ததாய் இருக்குமானால். பெருவணிகத்துக்கான தேவையை 1947 க்கு முந்தைய இந்திய நிலையை நினைவில் நிறுத்தி உணரும் ந...