முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சுவடுகள், பாதைகள், பயணங்கள்



இன்றுவரை நிறைவேறா பெருங்கனவு.


சிறு வயதில் நினைவு தெரியத்தொடங்கிய நாட்களில் இருந்து கல்லூரி முடிக்கும் வரை நாங்கள் வாழ்ந்த இல்லங்களில் (நேர்மையான அரசு ஊழியர்கள் தொடர் பணி மாற்ற தண்டனை பெற்று பல வீடுகளில் வசிக்க வேண்டிய நிர்பந்தம். அதில் எதுவும் சொந்த வீடு இல்லை!) ஒரு சில ஒளிப்படங்கள் மட்டுமே எங்களது வீட்டுச்சுவர்களில் நிரந்தரமாய் தங்கியிருந்தன.


எங்களது குடும்ப ஒளிப்படம் ஒன்று, அண்ணாவும் அக்காவும் நேர்த்தியான சிறார் உடைகளில் படியப்படிய தலைவாறி அமர்ந்திருக்கும் ஒளிப்படம் ஒன்று. இவை இரண்டின் நடுவில் அளவில் பெரிதான படம் ஒன்று; கோலூன்றி நடக்கும் ஒரு தாத்தா.


அவ்வயதில் எங்கள் வீடுகளுக்கு வந்து போகும் உறவுக்கார தாத்தாக்கள் எவர் போலவும் இல்லாது தனித்தன்மையான முகம்.


அந்தப்படத்தின் அடிப்பகுதியில் அவரது கைத்தடியின் இருபுறமும் ஒட்டப்பட்டிருந்த எங்கள் படங்கள்.


அப்பாவுக்கு ஒரு கனவு இருந்தது. கனவின் பின் ஒரு லட்சியம் இருந்தது. அந்த லட்சியத்தை தந்தவரது படம்தான் அது என்பதை நான் என் பதின்ம வயதில்தான் உணர்ந்தேன். அதுவரையில் அவரை மகாத்மா, தேசப்பிதா என என் வயதுக்கு புரியாத அடைமொழிகளில் மட்டுமே உலகம் எனக்கு அறிமுகம் செய்திருந்தது.


பின்னாட்களில் கல்லூரி படிப்பு, பின்பு பணியிடம், அதன் பின்னான எனது இன்றைய வாழ்வு வரை அந்த தாத்தாவின் நிழல் நீளப்போவது எனக்கு தெரிந்திருக்கவில்லை, பாபுஜி என்பது என் பெயராக இருந்தபோதும்.


இந்தியா 1998 இல் அணு வெடிப்பு நிகழ்த்தியபோது ஒரு ஐரோப்பிய நாட்டில் பணி புரிந்துகொண்டிருந்தேன். வெடிப்பு நிகழ்ந்த வருடம் முழுதும் ஒரு பரவச உணர்வோடு சுற்றித்திரிந்தேன்; 'Yes! We have truly "Arrived!"'


பின்னர் ஐரோப்பிய வாழ்வு அலுத்துப்போய் ஊர் திரும்பி, அதனர பின்னான வருடங்கள் அனைத்திலும், நான் மேற்கொண்ட செயல்கள் அனைத்திலும் அவரது தாக்கம் இருந்ததை மெல்ல உணரத்தொடங்கினேன்.


ஒற்றை மனிதனுக்கு எவ்வளவு பெருங்கனவுகள்? எவ்வளவு தெளிவான சிந்தனை, செயலாக்கம்? எத்தனை எத்தனை போராட்டங்கள்? இன்னல்கள்? இத்தனையும் யாருக்காக? இவ்வளவு செய்த மனிதரின் வரலாறை ஏன் அவரது வழித்தோன்றல்களே முனைப்புடன் திரித்துக்கொண்டிருக்கிறார்கள்? அவர்களது வாதங்களில் உண்மை, நேர்மை இருக்கிறதா என தொடர்ந்து தேடத்தொடங்கினேன்.


அனுபவம் கற்றுத்தருவது போல வாழ்வில் வேறு எதுவும் தராது.  அனுபவ சேகரிப்பு முயற்சியில் நான் அடைந்த நண்பர்கள் சிலர், இழந்த நண்பர்கள் பலர். 


'நமது மண்ணின் விடுதலை மட்டுமே அவரது கனவாக இருந்தது, அதற்காக நாடே பிளவுபட்டது' என்கிற புள்ளியில் இருந்து தொடங்கி, விலகி, நெருங்கி, பெருகி, நான் கண்டடைந்தது ஏராளம்.


உணவு, உடை, உறையுள், சமூகம், சமுதாயம், இனம், தேசம், உலகம், இயற்கை என அத்தனை தளங்களில் செயல்பட எப்படி இவருக்கு ஒற்றை வாழ்நாளில் சாத்தியப்பட்டது? இவர் சந்தித்த எதிர்ப்புகளின் பின்னால் இருந்தவர்கள் யார் யார்? எதற்காக இவரை கொன்றுவிட பலர் துடித்தனர், முயன்றனர், சிலர் வென்றனர்? வென்றவர்கள் முன்வைத்த வாதங்கள் சரிதானா? இவரது நிறைவேறா கனவுகள் என்னென்ன? ஏன் என்பதற்கான வினாக்களுக்கு இன்றைய இந்தியாவே விடையாக இருக்கிறது எப்படி? 


இத்தனை வினாக்களுக்கும் நான் ஆய்ந்தறிந்த விடைகள் இந்த தாத்தாவை எனக்கு இன்னும் நெருக்கமாக்கின. என்னை பொருத்தவரை இவர் மகாத்மா அல்ல,  தேசத்தந்தை அல்ல, ஒரு சராசரி மனிதர் with extra ordinary vision, conviction, courage and action with perseverance.  Yes, he is just 'My Gandhi'!.


என் காந்தி - இவரது இந்த பிறந்த நாளில் தொடங்குகிறேன். Join me in a fascinating journey of a man called Gandhi; நான் எழுதப்போவதை இதற்கு முன் யாரும் எழுதியிருக்கிறார்களா என நான் அறியேன்.  அறிவதற்கு விருப்பமும் இல்லை. நான் எழுதப்போவது எனக்கே எனக்கான புரிதலில் 'என் காந்தி'. 


வாருங்கள், பயணிப்போம்.


பேரன்புடன்,

பாபுஜி


கருத்துகள்

  1. காந்தியிசம் ஒரு மதம். ஒரு உண்மை கோட்பாடு. அதன் சுடும் தன்மையால் பலரும் போற்றிய மற்றும் ஏசிய கொள்கைகள். தங்கள் மூலம் மேலும் அறிய ஆவல். 🙏

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விழலுக்கு இறைத்த நீர்

விழலுக்கு இறைத்த நீர்... என்னை சிந்திக்க வைத்த சொற்றொடர் இது.  பலனளிக்காத முயற்சியின் தோல்வியை சுட்டவே பெரும்பாலும் பயன்படுத்துகிறோம். இதன் கருப்பொருள் வேறாகவும் இருக்கலாம்... விழல் = களை = களையப்படவேண்டிய, நமக்கு அவசியமற்ற பயிர். நமக்கு அவசியமான பயிர்கள் மட்டுமே நம் வயலில் இருக்கவேண்டும். அப்போது மட்டும்தான் பஞ்ச பூத முழு சக்தியும் நமக்கு வேண்டிய பயிருக்கு கிட்டும், அதற்கு மட்டுமே கிட்டும். இந்த சித்தாந்த அடிப்படையில்தான் மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகள் வேறோடு பிடுங்கப்பட்டு, தேயிலையும் காபியும் பயிராச்சி (நாமள்லாம் அப்போ வெள்ளக்காரங்களே!). இந்த சித்தாந்த அடிப்படையிலதான் சம வெளிகளிலும் காடுகள் நம்மால் சிதைக்கப்பட்டு நெல், கோதுமை, கரும்பு, வாழை என மாறிப்போயின. இதே அடிப்படையில்தான் பல உயிரினங்கள் நம் ஆக்கிரமிப்புக்கு அடிபணிந்து ஏற்கனவே விடைபெற்றோ அல்லது விடைபெற்றுக்கொண்டோ இருக்கின்றன. நிலத்தில் மட்டுமல்ல, நீரிலும்தான்; 'என்னது ஆஸ்திரேலியால பவளப்பாறைகளை காணுமா?!!! அது வேற பஞ்சாயத்துபா!'. இதெல்லாம் நிகழக்கூடாதென்றுதான் அன்று நம் ஆட்கள் விழல...

சிறுக கட்டி பெருக வாழ்

சிறுக கட்டி பெருக வாழ்! கேள்விப்பட்டிருக்கிறோம். படித்திருக்கிறோம். சிறிதாய் தொடங்கி ஆல் போல் வளர்ந்து என வணிகம் பேசியிருக்கிறோம். அளவாய் வீடு கட்டி சுற்றம் சூழ்ந்து பெருக மகிழ்வாய் வாழ்தல் என முயற்சிக்கிறோம். இவையெல்லாவற்றையும் தாண்டிய புரிதல் ஒன்று வேண்டும். சிறுக கட்டி - சிறு வீடு கட்டி, பெருக - பல்லுயிர் பெருக, நாமும் வாழ்வோம் என்பதாகவும் இதன் பொருள் இருக்கலாம். பாரதி கனவு கண்ட காணி நில வாழ்வும் இதுவே, பில் மோலிசன் கற்றுத்தந்த பெர்மாகல்ச்சரும் (ஒருங்கிணைந்த பண்ணையம்) இதுவே, காந்தி மற்றும் புகுவோகா பரப்பிய சுயசார்பு பண்ணை வாழ்வும் இதுவே! பெரிதாய் கட்டி சிறிதாய் வாழ்ந்துவிட்டுப்போகும் நமக்காகவே சொல்லப்பட்டது, அன்றே! உணவு வீணாவதைப்பற்றி ஐ.நாவில் கூட்டம் கூட்டமாய் விவாதித்து புள்ளி விபரங்கள், அறிக்கைகள் பதிப்பிக்கிறார்கள். இந்தியாவில் 40 சதம் வீணாகிறதாம். நம் வாழ்வியல் அறியாது எழுதித்தள்ளுகிறார்கள். உணவு மீந்தால் / ஒரு இலை வீட்டிலிருந்து வெளியே விழுந்தால்கூட ஒரு கூட்டமே (மனிதர் முதல் பூச்சி வரை) அதிலிருந்து உண்ணும் இங்கு! இதில் வீணாவதெங்கு?! ...

பெரிதினும் பெரிது கேள்!

பெரிதினும் பெரிது கேள்னு சொல்லிட்டுப்போனவன் ஒழுங்காதான் சொல்லிட்டு போனான், நாமதான் தப்பு தப்பா எதையெதையோ கேட்டுகிட்டிருக்கோம்... வணிகம், பெருவணிகம் பேராசைப்பெருவணிகம் - அப்டீன்னா இன்னாபா? வணிகம், பண்டமாற்றில் தொடங்கியது; எப்போதென்று யாருக்கும் தெரியாது. பண்டம் உற்பத்திப்பொருளில் இருந்து சோழிகளுக்கும், உப்புக்கும் மாறி பின்னர் 'உலகமயமாக்கலின்' (ஆயிரம் வருடங்கள் முன்னரே இது நடந்தாச்சிபா!) தேவைக்காக உலோக நாணயங்களாக மாறி, வழிப்பறிக்கு பயந்து காகிதமாகி, இன்று 'வழிப்பறி' (tax rules of different geographies I mean :-) தாண்டி மாயக்காசுகளாய் (பிட்டு காயின்ங்ணா, இது வேற பிட்டுங்ணா!) அசுவத்தாமன் ஆவி போல 24*7 அலைந்துகொண்டே இருக்க சபிக்கப்பட்டிருக்கிறது :-) வணிகம் பெருத்து பெருவணிகமானபின்பும் எல்லாம் நல்லாத்தான் போய்கிட்டிருந்தது, பேராசை அதனுடன் இணையும் வரை. அதுக்கப்பறம் வந்ததெல்லாம் பேராசைப்பெருவணிகந்தேன்! பெருவணிகம் (corporates) தவறல்ல, அறம் சார்ந்ததாய் இருக்குமானால். பெருவணிகத்துக்கான தேவையை 1947 க்கு முந்தைய இந்திய நிலையை நினைவில் நிறுத்தி உணரும் ந...