நாமாவது வருடத்திற்கொரு முறைதான் ஆயுத பூஜை கொண்டாடுகிறோம். ஆயுதங்களை உற்பத்தி செய்யும் சில நாடுகள் என்னவோ தினம் தினம் ஆயுத பூஜை கொண்டாடுகின்றனர்.
பாரதப்போரில் குருஷேத்திர போருக்கு முன்னால் இதே நவமி தினத்தில் தன் மக்கள் வெல்லவேண்டும் என காளியிடம் கோரிக்கை வைத்து தன்னைத்தானே மாய்த்துக்கொண்டான் அருச்சுண குமாரன் அரவான். அன்றைய இரவில் அவனது அன்னை பூமியான நாகலோகம் எங்கும் கண்ணீர்த்திவலைகள்.
இன்றைய நம் உலகில் போர்களை துவக்க தன்னைத்தானே யாரும் மாய்த்துக்கொள்வதில்லை. மாறாக, வேறு யாரையாவது பெரிய அளவில் மாய்த்தே பூஜையை துவக்குகின்றனர். பூலோகமெங்கும் கண்ணீர்த்திவலைகள் நிரம்பினாலும் இவர்களது ஆயுத 'பூஜை' நிற்காது நடக்கும்.
போர் நடந்தால்தான் ஆயுதங்கள் வெகுவாக விற்பனையாகும். ஆயுதங்கள் தகர்த்தெரிந்த பல்லாயிர கட்டிடங்களை மறுபடி அவர்களே கட்டித்தர, போர் நின்றாகவேண்டும், அமைதி நிலவ வேண்டும். எனவே போர் நிறுத்த ஒப்பந்தத்தையும் ஆயுதங்கள் கொண்டே இவர்களே எழுதுகின்றனர். பின்பு அதே ஆயுதங்களால் 'உலக அமைதி'க்கான விருது விண்ணப்பங்களையும் எழுதுகின்றனர்.
ஏகே 47 என்கிற பழுதற்ற கொலைக்கருவியை உருவாக்கிய கலாஷ்னிகோவ் என்கிற அந்த ஒற்றை மனிதனும் தன் ஆயுதம் அமைதியை 'நிலைநாட்டும்' என்கிற நம்பிக்கையினால்தான் உருவாக்கினானாம். அவனுக்கு கற்றுத்தரப்பட்டதைத்தான் அவன் நம்பினான். இன்று நாம் இந்த ஆயுதமழைகளுக்கிடையில் நித்த நித்தம் தப்பிப்பிழைக்க போராடும் நம் உலகின் வருங்கால வாரிசுகளுக்கு எதை கற்றுத்தந்துகொண்டிருக்கிறோம்??
அமைதிக்காக ஆயுதங்களை குவிப்போம் என தம் மக்களனைவருக்கும் குடிக்க கஞ்சி கூட தர வழியில்லாத நிலப்பரப்புகளும் ஆயுதங்களை பூஜிப்பது எவ்வளவு பெரிய துயர்முரண்?
ஒருநாள் உலகம் நீதிபெறும் என்கிற நம்பிக்கையை, ஆயுத மழைகளுக்கிடையே உணவுக்கு தட்டேந்தி அலையும் அந்த பல லட்சம் மனிதர்களிடம் சொல்ல நம் யாருக்கும் அருகதையில்லை.
ஒரு நொடி சிந்தித்துப்பாருங்கள். ஆயுத மழை நித்தம் பொழிந்துகொண்டிருக்கும் ஏதாவது ஒரு நிலப்பரப்பில் நாம் பிறந்திருந்தால் இப்பதிவை எழுதும், வாசிக்கும் உரிமை கூட கிட்டாமல் மறைந்துபோயிருப்போம்...
நம் நாட்டில் நாமும் பாரத காலத்திற்கு முன்பிருந்தே ஆயுத பூஜை கொண்டாடிக்கொண்டிருக்கிறோம்.
அன்றைய வாழ்வியல் உணவு உற்பத்தியை மையமாக கொண்டிருந்தது. உழவர்கள், உழவுக்கருவிகள் செய்பவர், உழவர்க்கு வேண்டிய அனைத்து பொருட்களையும் செய்பவர் என அனைவரும் தாங்கள் பயன்படுத்தும் கருவிகளின் ஆயத்த நிலையை மேம்படுத்துவதற்காக வருடத்தில் சில நாட்களை ஒதுக்கி கொண்டாடிய இந்த பூஜையின் சரியான பெயர் ஆயத்த பூஜை என்றல்லவா இருக்கவேண்டும்?
ஒரு சொல் வெல்லும். ஒரு சொல் கொல்லும் என்பார்கள், மொழியின் உக்கிரத்தை உணர்ந்தவர்கள். இங்கு ஒரு எழுத்தை நீக்கி (யு) இரு எழுத்தை சேர்த்தாலே (யத்) போதும், இந்த சொல்லின் பொருளை மாற்ற. மாற்றம் நினைவிலிருந்து தொடங்குகிறது. நினைவு, சொல்லிலிருந்து தொடங்குகிறது. சொல்லே செயலாகிறது. இந்த மாற்றம் நிகழ்ந்தால்... ஒரு நாள் உலகம் உறுதியாய் நீதி பெரும், அது இந்த திருநாள் தரும் சேதியாக மாறும்.
பேரன்புடன்,
பாபுஜி
பின் குறிப்பு:
வெகுவேகமாக நாம் அனைவரும் செய்ய வேண்டிய இன்னும் சில சொல் மாற்றங்கள்:
பூச்சி மருந்து, களைக்கொல்லி, பூஞ்சாணக்கொல்லி என்கிற சொற்களுக்கு மாற்றாக உயிர்க்கொல்லி எனும் ஒற்றைச்சொல்.
உரம் என்பதற்கு மாற்றாக வேதிக்குப்பை எனும் சொல்.
லாபம், நஷ்டம் எனும் சொற்களுக்கு மாற்றாக கண்டுமுதல் எனும் சொல் (நம் முதலீட்டிற்கு பலனாக நாம் என்ன கண்டோம்?)
தமிழ் மொழியின் செழிப்பும் இவற்றால் மீளும்!
நம்பிக்கையில்லாதவர்கள், Luxory எனும் ஆங்கில சொல்லுக்கு மாற்றான தமிழ்ச்சொல் ஒன்றை கூறுங்கள் பார்க்கலாம்! (ஆடம்பரம் - தமிழ்ச்சொல்லுமல்ல, பொருளும் ஆங்கில பயன்பாடு அனைத்திற்கும் பொருந்தாது!). மாற்றுச்சொல் இல்லை என உணர்பவர்களுக்கு மட்டும் ஒரு குறிப்பு: சட்டியில் இருந்தால்தான் அகப்பையில்வரும். நம் பண்டைய தமிழ் வாழ்வியலில் Luxory வாழ்வியலே இல்லை, எனவே அதற்கான சொல்லும் இல்லை!
பேரன்புடன்,
பாபுஜி
"Sharpen the saw" என்று Steven Covey சொல்லுவது... ஆயத்த பூஜை.
பதிலளிநீக்குபெயரில் என்ன இருக்கு என்று இப்போது உணர்கிறேன் 😃
உண்மை. புரிதல் மாறிப்போனதுதான் சிக்கல்
நீக்கு