எனது பெருநகரின் ஒரு உலகப்புகழ் உணவகம். ஆயிரக்கணக்கானோர் தினமும் உண்ணும் இடம். பல கல்லூரிகள், மருத்துவமனைகள் சூழ்ந்த, பரபரப்பான தேசிய நெடுஞ்சாலையில் 'கண்டிப்பா வெயிட் பண்ணியாவது சாப்பிடுவோம்!' என ஒருமணிநேரம் காத்திருந்து உண்ணும் ரசிகர்களை வாடிக்கையாளர்களாக கொண்ட உணவகம்.
பின் மாலைப்பொழுது ஒன்றில் 'ஒரே நபர்' என்பதால் உடனே இருக்கை கிடைத்து...எளிதான நம் மண்ணின் உணவுகளை விரும்பிக்கேட்டு உண்டுகொண்டிருந்தேன்.
எனக்கு கரிசனமாய் உணவு பரிமாறிய சிறு வயது பெண், அருகில் எங்கோ பார்த்துவிட்டு ஒரு பதைபதைப்போடு தன் மேற்பார்வையாளரிடம் ஓடினார்.
அவ்வளவு பேர் உணவு அருந்தும் களேபரமான இடத்தில் ஏராளமான பரிமாறிகள் பல தட்டுகளை கரங்களில் ஏந்தி பல மேசைகளை நோக்கி நகரும் Brownian Movement கணத்தில் ஒரு பெண், ஒழுங்கின்றி அசையும் அத்தனை மனித துகள்கள் இடையிலும் எவர் மீதும் மோதக்கூடாதெனும் கவனத்தில் ஒடியது என் கவனத்தை ஈர்த்தது.
அதன்பிறகு சில நிமிடங்கள் வேகமாக கைகளை அசைத்து, தலையை அசைத்து, பின் கைகளை பிசைந்தபடி வேறொரு மேசையை நோக்கி சாடையில் ஏதோ சொல்ல, அவரது மேற்பார்வையாளரின் கண்களில் கோபம் பரவியது.
எனது அடுத்த உணவுக்காக வழக்கத்தை விட சில நிமிடங்கள் கூடுதலாக காத்திருந்த பின்பு அவர் எனக்கான உணவை ஏந்தி வந்தார். கண்களில் நீர்ப்படலம், முகமும் களையிழந்திருந்தது...
'என்ன ஆச்சும்மா?' என்றேன்.
உணவக அலுவலர்கள் தாண்டி வேறு யாராவது கேட்க மாட்டார்களா? என்கிற தவிப்பு மிகுந்திருக்கும்போல... சொல்லத்தொடங்கினார்.
'ஹஸ்பன்ட், வைஃப் சார். டீசன்டா இருந்தாங்க. நல்லா நிதானமா சாப்ட்டாங்க. பில்ல வாங்கிட்டு, கை கழுவிட்டு வரோம்னு போனாங்க. காணல சார்... அஞ்சு நிமிசம் தேடி பலனில்லாம, ஓடிப்போய் பில்லிங் கவுண்ட்டரில் கேட்டேன். அந்த பில்லுக்கு பணம் கட்டாம சிஸ்டம்ல க்ளோசாகாத இருந்தது சார். எங்க போனாங்கன்னே தெரில சார்' என்று முடிக்கையில் கண்களில் நீர் முத்துகள் உதிர்வதற்கு ஆயத்தமாகியிருந்தன.
எங்கள் உரையாடலை பார்த்துக்கொண்டிருந்த அவரது மேற்பார்வையாளரும் மெல்ல உரையாடலில் சேர்ந்துகொண்டார்; 'இன்னைக்கே இப்டி மூணாவது கேசு சார். இந்த கூட்டத்த பாருங்க. நாங்க என்னதான் பண்ணுவோம்? மனசாட்சியே இல்லாம ஏமாத்றாங்க சார்...'
"சரி, இந்த மாதிரி ஆனா நிர்வாகம் என்ன பண்ணுவாங்க?" என்றேன்.
அந்தப்பெண், உடைந்த குரலில் 'என் சம்பளத்தில பிடிச்சிடுவாங்க சார்..' என்றார் கண்ணீருடன்.
அவரது கரங்களில் இருந்த ப்ளாஸ்டிக் வளையல்களும், காதில் + கழுத்தில் சொற்பமாக இருந்த இமிடேஷன் நகைகளும் அவரது அழுகையின் காரணத்தை சொல்லாமல் சொல்லின.
"எவ்ளோ அமௌன்ட்டுன்னு சொல்லுங்கம்மா, நான் கட்டறேன். யாரோ சாப்ட்டதுக்குதான" என்றேன் அந்தப்பெண்ணிடம்.
'வேணாம் சார்! இது என்னோட தப்பு, பாடம் படிக்கிறதுக்கு ஆன செலவுன்னு எடுத்துக்கிறேன். ஆனா மனுசங்க ஏன் இப்படி இருக்காங்க சார்?' என சொன்னவர் உறுதியாக என்னுடைய உதவியை மறுத்துவிட்டு, வேறு மேசையில் ஒரு மனிதர் கரம் உயர்த்தி அழைத்ததால் ஆர்டர் எடுக்க விரைந்தார்..
சற்று நேரம் கழித்து எனக்கான பில்லை ஒரு லெதரெட் கோப்பில் என் அருகில் வைத்துச்சென்றார். நான் எனது பில் தொகையையும் + அந்த யாரோ ஒரு தம்பதி எழுதிய கடன் கணக்கையும் சேர்த்து அந்த கோப்பில் வைத்துவிட்டு கை கழுவச்சென்றேன்.
கை கழுவி திரும்புகையில் பதட்டத்தோடு என்னை வழிமறித்தார்.
'சார்! இந்த பணத்த குடுக்கதான் ஓடியாந்தேன். வேணாம் சார்!'
அவரது உபசரிப்புக்கான மகிழ்ச்சி தொகையாக (tips) அதை வைத்துக்கொள்ளச்சொன்னேன்.
மிக தெளிவாக, மிக திடமாக மறுத்தவர், அதில் இருந்த ஒரு பத்து ரூபாய் தாளை மட்டும் டிப்சாக எடுத்துக்கொண்டு மெல்லிய குரலில் சொன்னது இன்னும் என் மனதில் குளத்தில் மூழ்கிய கல்லைப்போல கிடக்கிறது; 'சார், இன்னைக்கி மட்டும் நூறு டேபிளுக்காவது பரிமாறியிருப்பேன்... யாரையும் சந்தேகமா பாக்க தோணல சார். அது தப்புன்னு இன்னைக்கு தோணிடுச்சு சார். 'இனி சாப்பிட வர்றவங்கள எல்லாம் கவனமா பாரு, இப்படி ஏமாந்திறாத'ன்னு மேனேஜர் திட்டினார் சார். ஆனா, சாப்ட வர்றவங்கள எப்படி சார் சந்தேகமா பாக்கிறது? இது என்னோட வேலையில்ல சார்... நீங்க உதவி பண்ண நெனச்சதுக்கு தேங்க்ஸ் சார். ஆனா நாளைப்பின்னே வேற யாராவது பில்லு கட்டாம ஏமாத்திட்டா மனசு ஒடனே யாராவது பணம் குடுக்க மாட்டாங்களான்னு தோண ஆரம்பிச்சிடும் சார். வேணாம் சார். நன்றி சார்'.
மனசு கேட்காமல் மேனேஜரை சந்தித்து பேசினேன்.
அவர் தனது கணணியில் இருந்து தலையை உயர்த்தாமலே,
'வர்றவங்க எல்லாரையும் சந்தேக கண்ணோட பாக்கவும் முடியாது சார். ஆனாலும் கவனமா இருக்கணும் சார்...' என்றார்.
அவரிடம் அந்த பில்லை நானே கட்டுகிறேன் என்றேன்.
சற்றே அதிர்ச்சியுடன் தலை நிமிர்ந்து பார்த்தவர் சில நொடி மௌனத்திற்கு பின்பு, 'வேண்டாம் சார்... அந்த பொண்ணு சம்பளத்தில பிடிக்கமாட்டோம் சார். வார்ன் பண்ணி விட்டுடறேன்' என்றார்.
சொன்னபடி செய்திருப்பார் என நம்புகிறேன்.
எளிய மக்களிடம் மட்டும் எப்படி அறம் இவ்வளவு வலிமையுடன்?!
பேரன்புடன்,
பாபுஜி
அறத்திற்கும் உண்டு அடைக்கும் தாழ். இதில் ஏழை பணக்காரன் என பாகுபாடு உண்டா என தெரியவில்லை. ஒருவர் ஏமாற்றப்படும் போது, அவரவரின் நிதி நிலைமைக்கு ஏற்ப பாதிக்கப் படுகிறார்கள் என்பது என் புரிதல் 🙏
பதிலளிநீக்கு