முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அறுபது வேலி நிலமிருந்ததே!

இயந்திரப்புரட்சியும் தொலைந்துபோன எங்கள் வரலாறும்...

நெடுந்தொடர் - முன்னுரை

-----++++-------+++++-------++++-


என் அம்மா ஒரு தேர்ந்த கதை சொல்லி, நல்ல நினைவாற்றலும் உண்டு, வயது எண்பதை நெருங்கினாலும்.


ஒரு பிற்பகல் வேளையில் உணவு முடித்து ஓய்வாய் உரையாடுகையில் தோண்டித்தோண்டி அவரது முன்னோரின் வரலாறை கேட்டுக்கொண்டிருந்தேன். பல முறை ஏற்கனவே கேட்டிருந்தாலும் ஒவ்வொரு முறையும் முன்னைவிட அகலமாய் கதைகள் விரியும் (அவரும் அவரது பல கதை சொல்லி சகோதரிகளுடன் தொடர்ந்து உரையாடி நினைவுகளை விரிவுபடுத்திக்கொண்டிருப்பார்கள்)..


அது ஒரு நூற்றாண்டுக்கதை. நம் மண்ணின் கதை, மரபின் கதை, தோற்றவர்களின் கதை, தோல்வியை வெற்றியாக மாற்றியவர்களின் கதை, நம் நாட்டின் கதை. வரலாற்றில் எழுதப்படாத நம் நாட்டுக்கதை. 


சுமார் நூறு வருடங்கள் முன்பு...


இந்தியாவின் தொன்கோடி தமிழ் நிலப்பரப்பின் தெற்கே இருந்த திருமறைக்காடு என்கிற வேத-ஆரண்யத்தில் ஒரு வேளாண் குடும்பம். வருடம் 1920.


சகோதரர்கள் நான்கு பேர். இவர்களது முன்னோர் உழைத்து சேர்த்து இவர்களிடம் தந்து சென்ற நன்செய் நிலம் அறுபது வேலி (420 ஏக்கர்), நூற்றுக்கணக்கான நாட்டு மாடுகள் + ஏராளமான மரபு அறிவியல்.

1870களில் தொடங்கி 1900 ஆண்டு வரை நம் தேசம் எதிர்கொண்ட பல கொடிய வறட்சி காலங்களில் கூட தென் தமிழகத்தில் பாதிப்பு அவ்வளவாய் இல்லை எனலாம். இப்பகுதியில் உழவு வாழ்வியல் ஒரு தேர்ந்த மரபின் தொடர்ச்சியாய் முன்னேறிக்கொண்டே இருந்தது. இந்த சகோதரர்கள் போலவே பல வேளாண் குடும்பங்கள் நாட்டிற்கே சோறு விளைவித்துக்கொண்டிருந்தன, அந்நிய ஆட்சியின் அடக்குமுறைகளுக்கிடையிலும்.


அம்மாவி்ன் தாத்தா (அவரது அப்பாவின் அப்பா) இந்த நால்வரில் ஒருவர். அவரிடம் மட்டுமே 15 வேலி நிலம், 60 நாட்டு மாடுகள். இவருக்கு மூன்று குழந்தைகள்; தலைச்சன் பெண் குழந்தை, பின் இரு ஆண் குழந்தைகள்.

கடைசி குழந்தைக்கு ஒரு வயதிருக்கும். ஒரு நாள் தொழுவத்தில் 60 மாடுகளும் ஒரே நாளில் கொத்துக்கொத்தாய் இறந்துபோயின. காரணம் அன்று யாருக்குமே தெரியவில்லை.

எத்தனை வேலி நிலமானாலும் கால்நடைகள் இருந்தால் மட்டுமே பயிர் வளரும் என்ற இயற்கை நியதியில் உலகம் சுழன்ற காலம் அது.

அவருக்கு கால்நடைகளின் திடீர் இறப்பு ஒரு பேரிடி. அதன் தாக்கத்தில் பக்க வாதம் வந்து வீழ்கிறார். ஒரு வருடத்தில் சிறு வயதிலேயே விடை பெறுகிறார். அவரது பிரிவின் துயர் + சட்டென தலைகீழாய் மாறிப்போன வாழ்வின் அழுத்தம் அவரது மனைவியையும் நோயில் வீழ்த்தி காணாமல் அடிக்கிறது.

பெற்றோரை இழந்த குழந்தைகள் மூவரையும் தாய்மாமன் வளர்க்கிறார். 

அவர் மட்டுமின்றி அவ்வூரில் எல்லோருக்குமே கால்நடைகளின் இழப்பு, அவர்களை விவசாய நிலங்களை விற்று, போராடி வாழ வைக்கிறது.


மூத்த பெண்ணை என் அப்பாவின் அப்பாவும் அடுத்த சகோதரனை என் அம்மாவின் அம்மாவும் மணம் செய்துகொள்கிறார்கள்.


இன்று இவர்கள் யாருக்கும் வேதாரண்யத்தில் உறவுகளோ நிலங்களோ இல்லை.


அம்மாவின் அப்பா, அவர் திருமணமான பின்பும் அவர் தாய்மாமனின் வீட்டில் வசிக்கிறார். எதிர் வீட்டில் வசித்தவரின் உறவினர், வலிவலம் தேசிகர். 

நமக்கு சொந்தமாய் நிலங்கள் இருப்பது போல வலிவலம் தேசிகருக்கு சொந்தமாய் வலிவலமும் அதைச்சுற்றி சில சிற்றூர்களும்! வேளாண் விற்பன்னர். 

1940களிலேயே டெல்டா பகுதியில் இவரது நிலங்களில் மலைக்காய்கறிகளும் வளர்த்து, பண்ணைப்பணியாளர்களுடனும் பகிர்வார். இவருக்கு கிடைத்திருக்க வேண்டிய மத்திய வேளாண் அமைச்சர் பதவியை கொங்கு பகுதியின் சி. சுப்பிரமணியம் தட்டிப்பறித்தது அன்றைய நாட்களில் பரபரப்பாய் பேசப்பட்டது.


தேசிகர் ஒரு முறை வேதாரண்யத்தில் தங்கும்போது எனது தாத்தாவை பார்க்கிறார். அவரது உழைப்பு + பண்பு பிடித்துப்போக, 'இவரை வலிவலத்திற்கு அழைத்துச்செல்கிறேன்' என்கிறார். தாத்தாவின் தாய்மாமன் அனுப்புகிறார்.

தேசிகரிடம் கணக்காளராக தாத்தாவுக்கு பணி நியமனம். விரைவிலேயே அவரது திறமையும் நேர்மையும் தேசிகருக்கு பிடித்துப்போக, சில வருடங்களில் தேசிகரின் பண்ணைகள் அனைத்தும் இவரது கண்காணிப்பில். 


இந்த தாத்தாவுக்கு பண்ணிரண்டு குழந்தைகள். மூத்த குழந்தை என் அம்மா. அடுத்தது என் மனைவியின் அப்பா. பின்னர் தொடர்ந்து ஆண் குழந்தைகள் சிலர், பெண் குழந்தைகள் பலர்.

இவர்களது கதை அடுத்த எண்பதாண்டுகளாய் பல விழுதுகள் கொண்ட ஆலமரமாய் மாறிப்போனதும் அந்த விழுதுகளில் பலர் இன்றுவரை விவசாயம் தொடர்வதும் பற்றி ஒரு தனித்தொடராய் பின்னொரு நாளில் தொடங்குகிறேன். இப்பதிவின் மையம் இவர்களில்லை.


எப்படி மாடுகள் திடீரென கொத்து கொத்தாய் இறந்தன? ஏன்?  அதன் பின்பு என் நிலத்தின் விவசாயிகள் என்ன ஆனார்கள்? இன்று வரை ஏன் இப்படி நலிந்திருக்கிறார்கள்? என் அம்மாவின் அப்பா ஏன் நேரடியாக மீண்டும் விவசாயத்தில் ஈடுபடவில்லை?  என பல வினாக்களுக்கு விடை அறியும் ஆவலில் இவற்றுக்கான தரவுகள் இணையப்பொதுவெளியில் இருக்கிறதா எனத்தேடினேன். ஏமாற்றம்தான் மிஞ்சியது.


என் அம்மாவின் நினைவுகளில் மட்டுமே வாழ்ந்துகொண்டிருக்கும் எங்கள் முன்னோரின் கதையை துண்டுப்படங்களாய் கோர்த்து, இன்றைய செயற்கை நுண்ணறிவின் துணையோடு பகுப்பாய்வு செய்தபோது எனக்கு விளங்கத்தொடங்கிய பல தொடர்பற்ற செய்திகளின் தொகுப்பே இந்தப்பதிவு (kind of connecting the dots through a maze of memories that had no written records).


பதினேழாம் நூற்றாண்டு தொடங்கி அடுத்த முன்னூறாண்டுகள் உலகெங்கும் இருந்த தொல்குடி நிலங்களும் மனிதர்களும் ஆக்கிரமிப்புக்கும் அடக்குமுறைக்கும் உள்ளாகி தங்கள் வரலாறையும் வாழ்வின் வளங்களையும் இழந்த அதே முன்னூறாண்டுகளில், அவர்களை அடக்கி ஆண்டவர்களின் வரலாறு மட்டுமே பக்கம் பக்கமாய் எழுதப்பட்டது மனித குலத்தின் கொடுந்துயரம்.


செவ்விந்தியரின் குருதி தோய்ந்த கதைகளையும், தென்னமெரிக்க தங்கச்சுரங்கங்களை தங்கப்பாளங்களாக மாற்றி ஐரோப்பவிற்கு சில நூறாண்டுகள் தடையின்றி கிடைக்க தம் சொந்த நிலங்களின் சுரங்கங்களில் கொத்தடிமைகளாய் மாண்ட பல லட்சம் பூர்வகுடி மனிதர்களின் கதைகளையும், ஆப்பிரிக்க கண்டத்தின் பூர்வகுடிகள் அடிமைகளாக்கப்பட்டு வெளியேற்றப்பட்டு அவர்கள் அதுவரை கண்டிராத புதிய உலகின் நிலப்பரப்பெங்கும் அவர்களது வியர்வையும் எலும்புத்துகள்களும் உப்புக்கண்ணீரும் இன்றும் காற்றில் அலைவதையும் இந்த பக்கங்களின் வழி நாம் அறியலாம். ஏன், நம் இந்திய நிலப்பரப்பின் விடுதலைப்போராட்டங்களையும்  அவற்றில் மாண்ட நம் மக்களின் கதைகளையும் குருதியில் தோய்ந்த வரலாற்றுப்பக்கங்களின் வழி நாம் அறியலாம்.


இந்த வரலாற்றுப்பக்கங்கள் எவற்றிலுமே குறிக்கப்படாத ஒரு மாபெரும் போராட்டம், கடந்த பல நூற்றாண்டுகளாய், இன்றுவரை உலகம் முழுவதுமாக நிகழ்ந்து வருவதையும், அவற்றின் விளைவால் எங்களது கால்நடைகள் அன்றொரு நாள் கொத்துக்கொத்தாய் மாண்டதையும், அவற்றோடு சேர்ந்து மரித்த எங்கள் முன்னோர்கள் ஏராளமானோரின் கதைகளையும் காரணிகளையும் யார்தான் எழுதப்போகிறார்கள்? எப்பொழுது??


நான் எழுதப்போகிறேன். இப்பொழுது.


Most of our struggles were never documented. There lies the problem.

Now is the time to set the records straight; This is Our time. This is Our story.


காத்திருங்கள்!


பேரன்புடன்,

பாபுஜி

கருத்துகள்

  1. உணர்ச்சி பூர்வமான வாழ்க்கையின் வார்த்தைகள் 🙏. உழவும் தொழிலும் மனிதமும் மாண்பும் அழகான கோர்வையாக உள்ளது. அருமையான பதிவு. காத்திருக்கிறோம்.

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விழலுக்கு இறைத்த நீர்

விழலுக்கு இறைத்த நீர்... என்னை சிந்திக்க வைத்த சொற்றொடர் இது.  பலனளிக்காத முயற்சியின் தோல்வியை சுட்டவே பெரும்பாலும் பயன்படுத்துகிறோம். இதன் கருப்பொருள் வேறாகவும் இருக்கலாம்... விழல் = களை = களையப்படவேண்டிய, நமக்கு அவசியமற்ற பயிர். நமக்கு அவசியமான பயிர்கள் மட்டுமே நம் வயலில் இருக்கவேண்டும். அப்போது மட்டும்தான் பஞ்ச பூத முழு சக்தியும் நமக்கு வேண்டிய பயிருக்கு கிட்டும், அதற்கு மட்டுமே கிட்டும். இந்த சித்தாந்த அடிப்படையில்தான் மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகள் வேறோடு பிடுங்கப்பட்டு, தேயிலையும் காபியும் பயிராச்சி (நாமள்லாம் அப்போ வெள்ளக்காரங்களே!). இந்த சித்தாந்த அடிப்படையிலதான் சம வெளிகளிலும் காடுகள் நம்மால் சிதைக்கப்பட்டு நெல், கோதுமை, கரும்பு, வாழை என மாறிப்போயின. இதே அடிப்படையில்தான் பல உயிரினங்கள் நம் ஆக்கிரமிப்புக்கு அடிபணிந்து ஏற்கனவே விடைபெற்றோ அல்லது விடைபெற்றுக்கொண்டோ இருக்கின்றன. நிலத்தில் மட்டுமல்ல, நீரிலும்தான்; 'என்னது ஆஸ்திரேலியால பவளப்பாறைகளை காணுமா?!!! அது வேற பஞ்சாயத்துபா!'. இதெல்லாம் நிகழக்கூடாதென்றுதான் அன்று நம் ஆட்கள் விழல...

சிறுக கட்டி பெருக வாழ்

சிறுக கட்டி பெருக வாழ்! கேள்விப்பட்டிருக்கிறோம். படித்திருக்கிறோம். சிறிதாய் தொடங்கி ஆல் போல் வளர்ந்து என வணிகம் பேசியிருக்கிறோம். அளவாய் வீடு கட்டி சுற்றம் சூழ்ந்து பெருக மகிழ்வாய் வாழ்தல் என முயற்சிக்கிறோம். இவையெல்லாவற்றையும் தாண்டிய புரிதல் ஒன்று வேண்டும். சிறுக கட்டி - சிறு வீடு கட்டி, பெருக - பல்லுயிர் பெருக, நாமும் வாழ்வோம் என்பதாகவும் இதன் பொருள் இருக்கலாம். பாரதி கனவு கண்ட காணி நில வாழ்வும் இதுவே, பில் மோலிசன் கற்றுத்தந்த பெர்மாகல்ச்சரும் (ஒருங்கிணைந்த பண்ணையம்) இதுவே, காந்தி மற்றும் புகுவோகா பரப்பிய சுயசார்பு பண்ணை வாழ்வும் இதுவே! பெரிதாய் கட்டி சிறிதாய் வாழ்ந்துவிட்டுப்போகும் நமக்காகவே சொல்லப்பட்டது, அன்றே! உணவு வீணாவதைப்பற்றி ஐ.நாவில் கூட்டம் கூட்டமாய் விவாதித்து புள்ளி விபரங்கள், அறிக்கைகள் பதிப்பிக்கிறார்கள். இந்தியாவில் 40 சதம் வீணாகிறதாம். நம் வாழ்வியல் அறியாது எழுதித்தள்ளுகிறார்கள். உணவு மீந்தால் / ஒரு இலை வீட்டிலிருந்து வெளியே விழுந்தால்கூட ஒரு கூட்டமே (மனிதர் முதல் பூச்சி வரை) அதிலிருந்து உண்ணும் இங்கு! இதில் வீணாவதெங்கு?! ...

பெரிதினும் பெரிது கேள்!

பெரிதினும் பெரிது கேள்னு சொல்லிட்டுப்போனவன் ஒழுங்காதான் சொல்லிட்டு போனான், நாமதான் தப்பு தப்பா எதையெதையோ கேட்டுகிட்டிருக்கோம்... வணிகம், பெருவணிகம் பேராசைப்பெருவணிகம் - அப்டீன்னா இன்னாபா? வணிகம், பண்டமாற்றில் தொடங்கியது; எப்போதென்று யாருக்கும் தெரியாது. பண்டம் உற்பத்திப்பொருளில் இருந்து சோழிகளுக்கும், உப்புக்கும் மாறி பின்னர் 'உலகமயமாக்கலின்' (ஆயிரம் வருடங்கள் முன்னரே இது நடந்தாச்சிபா!) தேவைக்காக உலோக நாணயங்களாக மாறி, வழிப்பறிக்கு பயந்து காகிதமாகி, இன்று 'வழிப்பறி' (tax rules of different geographies I mean :-) தாண்டி மாயக்காசுகளாய் (பிட்டு காயின்ங்ணா, இது வேற பிட்டுங்ணா!) அசுவத்தாமன் ஆவி போல 24*7 அலைந்துகொண்டே இருக்க சபிக்கப்பட்டிருக்கிறது :-) வணிகம் பெருத்து பெருவணிகமானபின்பும் எல்லாம் நல்லாத்தான் போய்கிட்டிருந்தது, பேராசை அதனுடன் இணையும் வரை. அதுக்கப்பறம் வந்ததெல்லாம் பேராசைப்பெருவணிகந்தேன்! பெருவணிகம் (corporates) தவறல்ல, அறம் சார்ந்ததாய் இருக்குமானால். பெருவணிகத்துக்கான தேவையை 1947 க்கு முந்தைய இந்திய நிலையை நினைவில் நிறுத்தி உணரும் ந...